ஆடை, அலங்காரத்துக்குப் பயன்படும் பிரம்பால் செய்யப்பட்ட சிறு மேசை (vanity stand), பூத்தையல் (embroidery) செய்யப்பட்ட விளக்கு, மரத்தில் செதுக்கப்பட்ட பூச்சாடி.
நவீன, பாரம்பரிய கைவினை நுட்பங்களை இணைக்கும் இந்தப் பொருள்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) அர்மேனியன் தெருவில் அமைந்திருக்கும் பெரனாக்கன் அரும்பொருளகத்தின் அருகே அறிமுகம் கண்டன.
உள்ளூர்க் கைவினைக் கலைஞர்கள் மூவரால் உருவாக்கப்பட்ட இந்தப் பொருள்களை இந்த ஆண்டின் ‘கைவினை x வடிவமைப்பு’ (Craft X Design) திட்டத்தில் பொதுமக்கள் காணலாம்.
இந்தத் திட்டம் அக்டோபர் 3ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்படும்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது ‘கைவினை x வடிவமைப்பு’ திட்டம். இந்த கைவினைப் பொருள்களை நாளடைவில் விற்பனை செய்வது நோக்கம்.
2023ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் கண்டது இந்தத் திட்டம். ‘ராயா மரச்சாமான்கள்’ என்ற கருப்பொருளை ஒட்டி நான்கு கைவினைப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
உள்ளூர்க் கைவினைக் கலைஞர்கள் மூவருடன் இணைந்து இந்தப் பொருள்களை வடிவமைத்தார் பிரபல உள்ளூர் வடிவமைப்பாளர் நேத்தன் யோங்.
“கைவினைப் பொருள்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது. அதற்குப் பின்னால் ஒரு மரபு, கதை உள்ளது,” என்றார் திரு யோங்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு பொருளின் வடிவமைப்புக்குப் பின்னால் உள்ள சுவையான அனுபவத்தைப் பற்றியும் கலைஞர்கள் பகிர்ந்தனர்.
ஆடை, அலங்காரத்துக்குப் பயன்படும் சிறு மேசையை உருவாக்க அதிகத் துல்லியம் தேவைப்பட்டது என்றார் கலைஞர் சென் ஃபூ கி.
செழிப்பு, நல்வரவு, செல்வத்தைத் தூண்டும் கருப்பொருள் கொண்ட ஒரு பூச்சாடியை உருவாக்கினார் கலைஞர் பிரான்சிஸ் டான்.
பெரனாக்கன் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நுணுக்கங்களை ஒரு விளக்கில் கைப்பட தைத்ததாகக் கூறினார் கலைஞர் ஹீத் யோ.
பொருளின் மீதான தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்ய விரும்புவோர் கொடுக்கப்பட்டுள்ள ஒரு ‘கியூஆர்’ குறியீட்டை வருடலாம். தேவையைப் பொறுத்து அந்தப் பொருள் விற்பனைக்குப் பரிசீலிக்கப்படும் என்று தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்தது.
கைவினைக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்களைத் தவிர சிங்கப்பூர் மக்களிடம் இது போன்ற முயற்சிகள் பரவலாகச் சென்றுசேர வேண்டும் என்றார் தேசிய மரபுடைமைக் கழக மேலாளர் ஃபன்சுரா பானு, 29.
“வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பொருள்கள் பழையன என்று நினைக்காமல் இவை நம் மரபை எடுத்துக்கூறும் வரலாற்றின் ஒரு பகுதி என்று கருத வேண்டும். இது உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை,” என்று அவர் வலியுறுத்தினார்.
நெசவுக் கலைஞர் நடாலியா டான் தொகுத்து வழங்கும் வார இறுதி நிகழ்ச்சிகளையும் மக்கள் கண்டு களிக்கலாம். இந்த நிகழ்ச்சிகளை ‘மரபுடைமைஎஸ்ஜி’ (HeritageSG) வழங்குகிறது.

