கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு ஆணையம், தொழில்துறை மின்னிலக்கத் திட்டத்தின்மூலம் அத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை $4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, 971 விண்ணப்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாலர் பள்ளிகள் தங்கள் செயல்பாட்டுச் செலவில் 57% சேமிப்பையும் மனிதநேர உழைப்பில் 66% சேமிப்பையும் கண்டுள்ளன.
நிர்வாகப் பணிகளைத் தானியக்கமாக்கியதன்மூலம் ஆசிரியர்கள் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.
இதுபற்றி ஸ்டார் லேர்னர்ஸ் அட் தெம்பனிஸ் வெஸ்ட் பாலர் பள்ளியின் தலைமையாசிரியர் ஜஸ்விந்தர் கவுர் கூறுகையில், “2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பாலர் பள்ளி மேலாண்மை அமைப்பு, ஆசிரியர்கள் முன்பு செய்துவந்த பல வழக்கமான நிர்வாகப் பணிகளைச் சீரமைக்க உதவியுள்ளது,” என்றார்.
காகிதப் பயன்பாட்டைக் குறைத்து மின்னிலக்கத் தளங்களுக்கு மாறியது பாலர் பள்ளிகளின் அன்றாடச் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது.
அதனால், “நிர்வாக ஒருங்கிணைப்பில் நேரம் செலவிடுவதற்குப் பதிலாக, ஆசிரியர்கள் இப்போது அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களைத் தயாரிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது,” என்றார் திருவாட்டி ஜஸ்விந்தர்.
மேலும், இந்தத் தொழில்நுட்பம் பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையிலான இடைவெளியையும் குறைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தைகளின் வளர்ச்சிப் பதிவுகளை உடனுக்குடன் பகிர்வதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை எளிதாக அறிய முடிகிறது.
“அந்த அமைப்பு இப்போது ஆசிரியர்கள் கற்றல் நிகழ்வுகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது,” என்று திருவாட்டி ஜஸ்விந்தர் குறிப்பிட்டார்.
இது வகுப்பறை கற்றலுக்கும் வீட்டு உரையாடல்களுக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குகிறது.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் மின்னிலக்கமயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாக இடம்பிடித்த நிலையில், இந்தப் புள்ளிவிவரங்கள் சிங்கப்பூரின் பாலர் பள்ளிக் கல்வித் துறையின் முன்னேற்றத்தைப் பறைசாற்றுகின்றன.

