தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பது, பொதுவாகப் பலருக்கு முதல் அனுபவமாக இருக்கும்.
அந்த வகையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இவ்வாண்டின் அணிவகுப்பில் சகோதரிகள் அனுமிதா முருகபாண்டியன், 22, அக்ஷித்தா முருகபாண்டியன், 17, இருவரும் முதன்முறையாக மேடையேறவுள்ளனர்.
“என் தங்கையுடன் இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் இணைய உற்சாகமாக இருக்கிறேன்,” என்றார் அனுமிதா.
அணிவகுப்பில் இடம்பெற அக்ஷித்தா ஆரம்பத்தில் தயங்கினார். ஒத்திகையின் ஆரம்பக்கட்டம் அவருக்குச் சற்று சவாலாக அமைந்தது. இருப்பினும், தன் அர்ப்பணிப்புக்குப் பலன் கிடைக்கும் என்பதை அவர் விரைவில் உணர்ந்தார்.
“ஒவ்வோர் ஒத்திகைக்குப் பிறகும் நாங்கள் ஒன்றாக ரயிலில் வீடு திரும்பினோம். அப்போது நாங்கள் பேசிக்கொண்டே வீடு செல்வோம். இது எங்கள் பிணைப்பை வலுப்படுத்தியது,” என்றார் அக்ஷித்தா.
அதேவேளையில், குடும்பப் பிணைப்பும் வலுவடைந்துள்ளதாக அனுமிதா குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு எங்கள் பெற்றோர் வீட்டிலிருந்தபடி அணிவகுப்பைப் பார்ப்பார்கள். அடுத்த ஆண்டு நாங்கள் குடும்பமாக அணிவகுப்பை நேரடியாகப் பார்க்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அவர்.
இவ்வாண்டு அணிவகுப்பின் நான்காம் காட்சி அங்கத்தில் சகோதரிகள் இருவரும் இடம்பெறுவர்.
பிரபல உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மாட் யோயோ’ கதாபாத்திரங்களான ‘யாயா’, ‘யோயோ’ வேடங்களில் இருவரும் தோன்றுவர்.
சிங்கப்பூரர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த ‘புவா சூ காங்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் காட்சி அங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!” என்பது இவ்வாண்டு அணிவகுப்பின் கருப்பொருள்.
தேசிய விளையாட்டரங்கில் 2,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையேறுவர் என்று அணிவகுப்பு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் லெஃப்டினண்ட் கர்னல் ஷரீல் ராஜரத்தினம் தெரிவித்தார்.
“அரங்கத்தின் கச்சிதமான அமைப்பு, பேரளவிலான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பார்வையாளர்களுக்கு ஒரு முப்பரிமாண அனுபவத்தை வழங்கும் மேடையும் இவ்வாண்டின் அணிவகுப்பில் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்களில் ஒன்று என்றார் அவர்.
“இவ்விடத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள இது நமக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது,” என்று அவர் சொன்னார்.
பாதுகாப்பு, செயல்பாட்டுக் காரணங்களால் செஞ்சிங்கங்களின் வான்குடை சாகசங்கள், ஒருங்கிணைந்த வாகன அணிவகுப்பு அங்கங்கள் இம்முறை தேசிய தின அணிவகுப்பில் இடம்பெற மாட்டா.
காலாங் பேசின் பகுதியில் பொதுமக்கள் வாணவேடிக்கையைக் காணலாம்.
அணிவகுப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.ndp.gov.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

