நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் சமய ஒற்றுமைக்கு குரல்

நோன்புத் துறப்பு விருந்தில் ‘நல்லிணக்கத் தூதர்’ பட்டமளிப்பு விழா

2 mins read
b37168df-2493-4968-baab-6ae5a942554f
சமய நல்லிணக்க அமைப்பான ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நடத்திய இஃப்தார் நோன்புத் துறப்பு விருந்தில் உயர்கல்வி மாணவர்கள், சமூகத் தலைவர்கள் என கிட்டத்தட்ட 120 பேர் கலந்துகொண்டனர். - படம்: ரோசஸ் ஆஃப் பீஸ்

தீவெங்கும் வெவ்வேறு இனத்தவருக்கும் சமயத்தவருக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நல்லிணக்கத் தூதர்களாகச் செயல்பட்ட 46 இளையர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமய நல்லிணக்கத்தை மேம்படுத்த முற்படும் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பு, இளையர்களுக்கான பட்டமளிப்பு விழாவை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) அமாரா சிங்கப்பூர் ஹோட்டலில் நடத்தியது. இஃப்தார் எனப்படும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

பட்டம்பெற்ற மாணவர்கள், வெவ்வேறு உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கம் வகித்துள்ள நல்லிணக்கத் தூதர் திட்டத்தை ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பும் தெமாசெக் அறநிறுவனமும் 2023ல் தொடங்கின.

17 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், இந்தத் திட்டத்தில் சேர்ந்து இன, சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு பங்கேற்றோர், தங்களுக்கு எந்த வகை சார்புகள் உள்ளன என்பதைப் பயிலரங்குகளின் மூலம் கற்றனர்.

அத்துடன், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைக்கும் திறன்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவத்தின்மூலம் மாணவர்கள் பெற்றனர்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். உயர்கல்வி நிலைய மாணவர்கள், சமூகத் தலைவர்கள் என கிட்டத்தட்ட 120 பேர் இந்நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றோருடன் கைகுலுக்கி உறவாடுகிறார்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றோருடன் கைகுலுக்கி உறவாடுகிறார். - படம்: ரோசஸ் ஆஃப் பீஸ்

இளையர்கள் எதிர்நோக்கும் மனநலப் பிரச்சினைகள், சமூக ஊடகங்களாலும் தவறான தகவலின் பரவலாலும் ஏற்படும் சவால்கள், நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க இளையர்கள் என்ன செய்யலாம் உள்ளிட்ட கேள்விகளுக்கு திரு ஓங் பதிலளித்து தம் கருத்துகளைப் பகிர்ந்தார்.

நடத்தப்பட்ட இரண்டு பயிரலங்குகளின் மூலம் 110க்கும் அதிகமான தூதர்கள் பயனடைந்திருப்பதாக ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பின் நிறுவனரும் அதன் தலைவருமான முஹம்மது இர்ஷாத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்