2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதன்முறையாக, 30,000க்கும் குறைவான பிறப்புகளே பதிவாகியிருந்தன.
சரிந்துவரும் பிறப்பு விகிதமும் அதிகரித்துவரும் மூத்தோர் எண்ணிக்கையும் சிங்கப்பூர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக உருவெடுத்துள்ள நிலையில், நாட்டின் மொத்தக் கருவள விகிதம் 2025ல் 0.87 என்ற அளவிற்குச் சரிவுகண்டதாக இவ்வாண்டு பிப்ரவரியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இளம் சிங்கப்பூரர்கள் சிலரிடையே குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் மனப்போக்கு அதிகம் காணப்படுகிறது.
பிள்ளைப்பேறு குறித்த அவர்களுடைய மனப்போக்கை அறிந்துகொள்ளும் நோக்கில், சென்ற மாதம் 18 வயது முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 496 சிங்கப்பூரர்களிடையே 'யூகவ்’ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அவர்களில் 51 விழுக்காட்டினர் பிள்ளை பெற்றுக்கொள்ளாததற்கு வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் முக்கியக் காரணிகளாகக் கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு தெரிவித்தது.
ஆயினும், இந்தப் போக்கு நடுத்தர அல்லது வசதிகுறைந்த சிங்கப்பூரர்களையும் தாண்டி, அதிக வருமானம் ஈட்டுவோரிடையும் இருப்பது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
பிள்ளை பெற்றால் தாங்கள் தற்போது பின்பற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் நேரக்கூடும் வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடிய செலவுகளையும் எண்ணி, அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று ஆய்வு கண்டறிந்தது.
வருமானம் கூடினாலும் தயக்கம்
வருமானம் அதிகரிக்க, தங்களுடைய குழந்தைகளுக்கு மேம்பட்ட வாழ்க்கைத் தர அனுவங்களை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கலாம்.
போட்டித்தன்மைமிக்க சிங்கப்பூரில், தங்கள் பிள்ளை பின்தங்கிவிடாமல் இருக்கும் பொருட்டு பல்வேறு துணைப்பாட வகுப்புகளுக்கு அனுப்புதல், வெளிப்புற நடவடிக்கைகள் போன்ற பல அனுபவங்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர் முனையலாம். அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும் என்று யூகவ் நடத்திய ஆய்வு கருதுகிறது.
ஆனால், அதிக வருமானம் ஈட்டுவோர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமென்ற முடிவிற்கு வருவது இதனால் மட்டுமன்று என்கிறார் மருத்துவர் மா.பிரேமிக்கா, 31.
“அவர்களுடைய பணியில் ஒரு பெரிய நிலையை அல்லது பொறுப்பை எட்டுதற்கு பல ஆண்டுகளாக உழைத்திருப்பர். அந்த நிலையில், பணிச்சுமையும் வெகுவாக அதிகரிக்கலாம். எனவே, அதிக வருமானம் ஈட்டுவதாலேயே குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த முடிவு எளிதாகிவிடாது,” என்று அவர் சுட்டினார்.
போதுமான பணம் உள்ளதா என்பதைத் தாண்டி, ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கான மற்ற வளங்கள் உள்ளதா என்பதும் சிங்கப்பூரர்கள் மனத்தில் எழும் கேள்விகளில் ஒன்றாக இருப்பதாக டாக்டர் பிரேமிக்கா குறிப்பிட்டார்.
“ஒரு பிள்ளையை நன்முறையில் வளர்க்க, பெற்றோருக்குப் போதுமான நேரம், ஆற்றல், கைகொடுக்க உற்றார் உறவினர் அல்லது நண்பர்கள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கின்றனர்,” என்றார் அவர்.
வேலைவாய்ப்பு வழிகாட்டியாகப் பணிபுரியும் 41 வயது ஃபரிஷா முகம்மது பெஃரோசும் இக்கருத்தை ஆமோதிக்கிறார்.
“பெற்றோர்களின் வளர்ப்பு முறையால் அவர்களுடைய பிள்ளைகள் உளவியல் சார்ந்த பாதிப்புகளை எதிர்நோக்கக்கூடும். அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெற்றோர் ஆகும்போது, அவர்களுடைய குழந்தைகளிடம் அதே மாதிரி நடந்துகொண்டு, அவர்களுக்கும் உளவியல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே, பிள்ளை பெற்றுக்கொள்ளுமுன், ஆறா வடுக்களாக நிலைத்திருக்கும் கசப்பான நிகழ்வுகளிலிருந்து முதலில் மீண்டெழுந்து வரவேண்டும். அத்தகையோர் மன அமைதி பெற உதவி நாடலாம்,” என்றார் திருவாட்டி ஃபரிஷா.
மணவாழ்க்கையின் தொடக்கத்தில், குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி அவரும் அவரது கணவரும் கலந்துரையாடினாலும், அவர்களுக்கு இடையிலான நல்லுறவும் இருவரும் சேர்ந்து அமைத்துக்கொண்ட வாழ்வும் மனநிறைவை அளித்தது. அதனால், காலப்போக்கில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
குழந்தை வேண்டாம் என்று உயர்வருமானப் பிரிவினர் முடிவெடுப்பதற்குப் பின்னால் மற்றொரு காரணத்தையும் கூறுகிறார் 44 வயதான திரு குமரவேலு பழனிவேலு.
“அதிக வருமானம் ஈட்டும் சிலர் குழந்தை வேண்டாம் என்று சொல்வதைவிட, குழந்தை இல்லாததால்தான் பலரால் வேலையில் முழுக் கவனமும் வேலையில் அந்த நிலையை அடைய முடிந்தது எனக் கூறலாம்,” என்றார் அவர்.
தனி மரம் தோப்பாகாது எனும் கோட்பாடு, பிள்ளை வளர்ப்பிற்கும் பொருந்தும் என்கிறார் திருவாட்டி பஃரிஷா.
தமக்குக் குழந்தைகள் இல்லாததால், உடன்பிறந்தோரின் பிள்ளைகளை வளர்க்கவும் அவர்களோடு நேரம் செலவிடவும் முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
குழந்தைப்பேற்றையே வாழ்வின் அடுத்தகட்டமாகக் கருதாமல், பிள்ளையை வளர்க்கவேண்டுமென்ற மனப்பூர்வமான ஆசை இருக்கவேண்டும் என்கிறார் திருவாட்டி மு. சுமிதா.
“ஒரு பிள்ளையைக் கொண்ட குடும்பக் கட்டமைப்பு அர்த்தமுள்ளதாய் இருந்தாலும், உங்கள் வாழ்க்கையை மற்ற வகைகளிலும் அர்த்தமுள்ளதாய் மாற்றலாம் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
பிள்ளை வளர்ப்பு ஒரு நாட்டின் கூட்டு முயற்சி
அதேவேளையில், சிங்கப்பூரில் குழந்தை வளர்ப்பு என்பது நடுத்தர வருமானப் பிரிவினருக்கும் சாத்தியமான ஒன்றே என்ற மாற்றுப் பார்வையையும் முன்வைத்தார் திருவாட்டி ஸ்கந்த[Ϟ]குமார் தாட்சாயினி, 34.
“குழந்தை வளர்ப்பது பெரிய பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நடுத்தர வருமானம் ஈட்டுவோர்க்குச் சிங்கப்பூரில் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியமானது என்று நம்புகிறேன். அதற்கு, அரசாங்கத்தின் உதவித் திட்டங்களும் பெரிதும் துணைபுரிகின்றன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாலர் பள்ளிக் கட்டண மானியமும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான கொள்கைகளும் பிள்ளை பெற்றுக்கொள்வதைப் பெரிதும் ஊக்குவிக்கும் என்று ஆய்வில் பங்கேற்ற 35 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதுபோல, அதிக நீக்குப்போக்கான வேலையிடங்களும், வேலை-வாழ்க்கைச் சமநிலையை முன்னிலைப்படுத்தும் கொள்கைகளும் பெற்றோராக ஊக்கமளிக்கும் என்று 31 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைப் பராமரிப்பு, பாலர் பள்ளிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டால் அதிகமானோர் பிள்ளைப் பெற்றுகொள்ள ஆர்வம் காட்டலாம் என்றாலும், பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அது பாதகமாக அமைந்துவிடாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும் என்றார் திருவாட்டி பஃரிஷா.
நிதி உதவியைக் காட்டிலும், நீக்குப்போக்கான பணிச்சூழல், வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி, பெற்றோர் விடுப்பு வசதிகள், ஆதரவாகத் துணைநிற்கும் மேலதிகாரிகள் போன்றவை மிகவும் அவசியம் என்கிறார் டாக்டர் பிரேமிக்கா.
“குறிப்பாக, கர்ப்பமாக இருப்பது, மகப்பேறு இவ்விரண்டு பொறுப்புகளையும் வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாது. ஆனால், இந்த இரண்டு பொறுப்புகளால், பெண்கள் உடல், மனம் சார்ந்தும் பல சிக்கல்களை எதிர்நோக்கலாம். ஆகவே, இந்தக் கொள்கைகள் பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று,” என்று அவர் சுட்டினார்.
திருமணம், மகப்பேற்றுடன் பிள்ளை வளர்ப்புச் செலவு, கட்டுப்படியான குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றில் குடும்பங்களின் சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் பற்றி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் பகிரவுள்ளார்.


