விலை அதிகரித்தாலும் நன்னாளில் தங்கத்தை வாங்க அலைமோதும் கூட்டம்

விலை அதிகரித்தாலும் நன்னாளில் தங்கத்தை வாங்க அலைமோதும் கூட்டம்

3 mins read
7beea489-eb41-46ec-8df6-6ca02e09398c
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள நகைக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) தங்கம் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

அட்சய திருதியை நன்னாளன்று மக்கள் தங்கம் வாங்குவது வழக்கம்.

‘அட்சய’ என்றால் அள்ள அள்ளக் குறையாது, பெருகுவது என்று பொருள். அந்நாளில் தங்கம் வாங்கினால், ஆண்டு முழுதும் தங்கம் வாங்கும் வாய்ப்புக் கிட்டுவதோடு செல்வச் செழிப்போடு குடும்பம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

இவ்வாண்டு ஞாயிறு, திங்கட்கிழமைகளில் (ஏப்ரல் 19, 20) அட்சய திருதியை வருகிறது.

தங்கக் கடைகளின் முனையமாகத் திகழும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஞாயிறன்று இடையிடையே பெய்த மழை, மக்கள் நகைக்கடைகளுக்குச் செல்வதற்குத் தடையாக இல்லை.

“ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் அட்சய திருதியை அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிடுவோம். இன்று வாங்குவதெல்லாம் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், நான் இன்று எனக்காக ஒரு தோடு வாங்கவந்தேன்,” என்று சொன்னார் 39 வயது கீதா ஶ்ரீதர்.

முன்பதிவு செய்யும் வாய்ப்பு இருந்தாலும் கீதாவைப் போன்று வாடிக்கையாளர்கள் பலர் கடைக்கு நேரடியாகத் தங்கம் வாங்கச் சென்றிருந்தனர்.

நிலைத்தன்மையற்ற உலகச் சூழலாலும் போர், பூசல்கள் காரணமாகவும், தங்கத்தின் விலை திடீர் ஏற்ற இறக்கங்களை எதிர்நோக்குவதாகச் சொன்னார் அணிமணி பொற்சாலையின் விற்பனை நிர்வாகி குணா, 62.

தொடர்புடைய செய்திகள்

சென்ற ஆண்டின் (2025) தங்க விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவ்வாண்டு, தங்கத்தின் விலை கிட்டதட்ட 60 விழுக்காடு அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார். 

விலை அதிகரிப்புக்கு இடையே புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க நகைக்கடைகள் முயற்சிகளை எடுத்துவருகின்றன.
விலை அதிகரிப்புக்கு இடையே புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க நகைக்கடைகள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. - படம்: சுந்தர நடராஜ்

அதனால், அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கினாலும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிடச் சற்றுக் குறைவாய் இருந்ததாகக் கூறினார் திரு குணா.

வாடிக்கையாளர்களில் ஒருசிலர் கடைக்கு வந்து பொருள்களின் விலைகளை விசாரித்துவிட்டுச் சென்றுவிடுவதும் உண்டு என்று அவர் சொன்னார்.

நகை வாங்கும் மக்கள்.
நகை வாங்கும் மக்கள். - படம்: சுந்தர நடராஜ்

தனிஷ்க் கடையின் மேலாளர் கோபால கிருஷ்ணன், 52, எடை குறைவாக இருக்கும் நகைகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்குவதாகக் கூறினார்.

ஜாயலுகாஸ் சிங்கப்பூர்க் கிளைகளின் வட்டார மேலாளர் ஃப்ரெடி பால், 44, அக்கருத்தை ஆமோதித்தார்.

மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பதாலும் வரும் ஆண்டுகளிலும் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாலும் அதனை வாங்குவதில் வாடிக்கையாளர்களிடையே பெரிய தயக்கம் இல்லை என்று அவர் சொன்னார்.

“வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டினர் தங்கக் கட்டிகளையும் தங்க நாணயங்களையும் வாங்குவதைக் கவனிக்கிறோம். மற்ற வாடிக்கையாளர்கள் தங்கம் அல்லது வைர நகைகளை வாங்குகின்றனர்,” என்றார் திரு ஃப்ரெடி.

தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக அதிகரித்திருந்தாலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. 

“தங்க விலை ஏறினாலும் வாங்கிக்கொண்டேதான் இருப்போம். விருப்பத்திற்கேற்ப வாங்குவோம்,” என்றார் 41 வயது கலையழகன். 

சொந்த வியாபாரம் செய்யும் அவர், கடைகளில் வழங்கப்படும் சலுகைகள் பேருதவியாய் இருப்பதாகப் பகிர்ந்தார். 

“நகை விலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இன்னும் சில சலுகைகளை வழங்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும்,” என்றார் கீதா. 

வாடிக்கையாளர்களில் ஒருசிலர் கடைக்குச் சென்ற பிறகே இன்று அட்சய திருதியை என்று தெரிந்துகொண்டதாகத் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர். 

“நான் என் அம்மாவிற்காக ஒரு பரிசை வாங்க வந்தேன். அட்சய திருதியை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் இங்கு வந்து கடைக்காரர் சொன்ன பிறகே அது இன்றுதான் என்று எனக்குத் தெரியவந்தது,” என்று சிரித்தவாறே கூறினார் தாதியாகப் பணிபுரியும் 38 வயது வசுந்தரன் ஜின்வாமோல்.

“இன்று சலுகைகள் வழங்கப்படுவதால் அது எனக்கு வசதியாக அமைந்தது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்