வாய்மொழி உரையாடல் வழியாக முப்பரிமாண முறையில் அச்சிடுவதற்கான சாத்தியம் உள்ளதா?
“முடியும்,” என்கிறார் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) மூத்த ஆய்வாளர் யூசஃப் எல்கலி.
இரண்டே மாதங்களில் இவர் உருவாக்கியுள்ள ‘டாக்2பிரின்ட்’ (Talk2Print) எனும் முப்பரிமாண அச்சுப்பொறி மென்பொருளுடன் மக்கள் உரையாடலாம். அது உங்கள் விருப்பத்திற்கு இணங்க பலவித வடிவங்களை உருவாக்கும்.
அவற்றில் ஒன்றைப் பயனர் தேர்ந்தெடுத்தபின், அது முப்பரிமாண மாதிரியாக மாற்றப்பட்டு அச்சிடுவதற்குத் தயாராக்கப்படும்.
இதனால், முப்பரிமாண அச்சிடுதல் பற்றி நுணுக்கமாகத் தெரியாதவரும் எளிதில் அச்சிடலாம்.
தற்போது முப்பரிமாண அச்சிடுதலிலுள்ள முக்கிய சவால் ஒன்றுக்கும் ‘டாக்2பிரின்ட்’ தீர்வளிக்கிறது.
“அச்சிடும் பணியைத் தொடங்கிவிட்டு, அடுத்த நாள் திரும்பும்போது அச்சிடப்பட்டுள்ள பொருளில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்தோர் பலர் உள்ளனர்.
“அந்தக் கோளாறு பல மணி நேரத்துக்கு முன்பே நேர்ந்திருக்கலாம். அதை அப்போதே சரிசெய்யாமல் இறுதியில் கண்டுபிடிக்கும்போது பயன்பாடற்ற, சிதைந்த பொருளே கிடைக்கும்,” என்கிறார் திரு யூசஃப்.
‘டாக்2பிரின்ட்’ கட்டமைப்பில், புகைப்படக் கருவி முப்பரிமாண அச்சிடுதலைக் கண்காணித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் மென்பொருளுக்குப் புகைப்படங்களை அனுப்புகிறது.
“அவற்றை மென்பொருள், செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) ஆராய்ந்து, பிரச்சினைகளைக் கண்டறிந்து சரிசெய்யும்.
“அந்த பிரச்சினை குறித்த விவரங்களும் மென்பொருளில் சேமிக்கப்படுவதால், பிற்காலத்தில் அத்தகைய பிரச்சினையைத் தவிர்க்கவும் ஏஐ கற்றுக்கொள்கிறது,” என்றார் திரு யூசஃப். ஏஐ ஏதேனும் மாற்றம் செய்தால் அதற்கான காரணங்களையும் பயனரிடம் விளக்கும்.
ஏற்கெனவே உள்ள பலவிதமான முப்பரிமாண அச்சுப்பொறிகளுடனும் ‘டாக்2பிரின்ட்’டைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“சாதாரண அச்சுப்பொறியை அறிவார்ந்ததாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அதற்கென புதிய அச்சுப்பொறிகளை உருவாக்கவோ வாங்கவோ தேவையில்லை,” என்று திரு யூசஃப் கூறினார்.
எஸ்யுடிடி இணைப் பேராசிரியர் சோ கிம் சோங்கின் வழிகாட்டுதலும் ‘டாக்2பிரின்ட்’ உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
வடிவமைப்பு உதவியாளர்
ஏஐயால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் சில சமயம் கணினியில் பார்க்க உண்மையானதைப் போலவே இருந்தாலும், அச்சிடுவதற்கு உகந்ததாக இருக்காது.
அவற்றை அச்சுக்கு ஏற்றாற்போல் மாற்றுவதற்குப் பரிந்துரைகள் வழங்கும் ‘வடிவமைப்பு உதவியாளர்’ எனும் ஏஐ தளத்தைக் கூடிய விரைவில் மாணவர்களின் முழுப் பயன்பாட்டிற்கு வெளியிட திரு யூசஃப் திட்டமிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அத்தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டு வருகிறது.
அத்தளத்தின்மூலம் மாணவர்கள் வாய்மொழியாக மட்டுமன்றி, தாம் வரைந்த வடிவங்களையும் பதிவேற்றலாம். அச்சிடுவதற்கு முன்பே அவர்களின் யோசனையைப் பரிசீலித்து அச்சிடுதல் சாத்தியமா என்பதை அத்தளம் காரணத்துடன் விளக்கும்.

