வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு உள்ளேயே பலர், வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பத்தை உணர்கின்றனர்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் (SUTD) தலைமையிலான ஆய்வுக் குழு ஒன்று, 400க்கும் மேற்பட்ட வீவக வீடுகளைப் பார்வையிட்டது. அவற்றுள் கிட்டத்தட்ட பாதி வீடுகள் வெளிப்புறத்தைவிட அதிக வெப்பமாக இருந்ததை அக்குழு கண்டறிந்தது.
இதற்குப் பெரும்பாலும் குறைந்த அல்லது தடைப்பட்ட காற்றோட்டமே காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடுகளில் வசிப்பவர்களில் முதியவர்களும் குறைந்த வருமானக் குடும்பத்தினரும் அடங்குவர். இவர்களில் பலர் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு வாழப் பழகிவிட்டனர்.
மூன்றில் ஒரு பங்கு வீடுகள் அவற்றின் கீழ்த்தளங்களை விட 2 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஏறத்தாழ 10 விழுக்காட்டு வீடுகள் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிக வெப்பமாக இருந்தன.
இந்தப் பதிவுகள் வெப்பக் குறியீட்டின் (heat index) அடிப்படையில் அமைந்திருந்தன. ஒட்டுமொத்த வெப்ப நிலைகளையும் சாத்தியமான வெப்ப அழுத்தத்தையும் மதிப்பிடுவதற்காக, காற்றின் வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் இணைத்து இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது.
கிட்டத்தட்ட 60 விழுக்காடு வீடுகளில் வெளிப்புறத்தைவிடக் குறைந்த காற்றோட்டமே காணப்பட்டது. வீட்டிற்குள் அதிகப்படியான பொருள்களை அடைத்து வைத்தல், வீட்டு அமைப்புகள், மூடப்பட்ட ஜன்னல்கள் அல்லது கட்டட அமைப்புகள் ஆகியவை காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இயற்கையான காற்றோட்டத்தில் ஏற்படும் பரவலான தடைகளை இது சுட்டிக்காட்டுகிறது.
2024 அக்டோபர் மாதம் முதல் ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் இவை. தீவு முழுவதும் உள்ள 10 வட்டாரங்களுக்குச் சென்ற ஆய்வாளர்கள், 416 வீவக வீடுகளை மதிப்பீடு செய்து 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கருத்தாய்வு நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஓர் அறை வாடகை வீடுகள் முதல் எக்சிகியூட்டிவ் வீடுகள் வரை, கிட்டத்தட்ட அனைத்து வகையான வீவக வீடுகளும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

