ஆடைத் தயாரிப்புவழி உதவிக்கரம் நீட்டுகிறார்

3 mins read
d5094ee9-347c-48d6-a00d-4bd69b36ee81
‘டியர் டார்லிங்’ என்ற ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய மஹாலக்‌ஷ்மி வேலாயுதம், 35. - படம்: மஹாலக்‌ஷ்மி வேலாயுதம்
multi-img1 of 2

வடிவமைத்தலின் எல்லைகளைத் தாண்டி அதிகாரமளித்தல், படைப்பாற்றல், இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்‌கிய சக்திவாய்ந்த செய்தியை ஆடைகளின்வழி உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பிறந்தது ஆடைத் தயாரிப்பு வர்த்தகமான ‘டியர் டார்லிங்’.

“தனிநபர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான ஆடைகளை உருவாக்கி, அவற்றை சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக மட்டுமல்லாமல் கலாசாரங்களை இணைக்கவும் கதைகள் சொல்லவும் ஒரு தளமாகப் பயன்படுத்த நினைத்தேன்,” என்று ‘டியர் டார்லிங்’கின் நிறுவனரான மஹாலக்‌ஷ்மி வேலாயுதம், 35, கூறினார்.

ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற தமது சிறு வயது கனவாலும் தம் குடும்பத்தினரின் ஊக்கத்தாலும் தமது சொந்த ஆடை வர்த்தகத்தை உருவாக்கி இவ்வாண்டு ஜூன் மாதத்தில் அதற்கு உயிர் கொடுத்துள்ளார் திருமதி மஹாலக்‌ஷ்மி.

துணியை வடிவமைக்‌க கைத்தட்டு அச்சிடுதலைப் (handblock printing) பயன்படுத்துவது முதல் இறுதியில் தையல் இயந்திரம் கொண்டு ஆடையைத் தைக்‌கும் வரை முழுச் செயல்முறையும் கையால் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

தமது வர்த்தகத்தின் ஆக்கபூர்வ மற்றும் நிலைத்தன்மை தொலைநோக்கிற்கு கூடுதலாக, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நிறுவனங்களுடனும் திருமதி மஹாலக்‌ஷ்மி இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அவ்வகையில், புதுடெல்லியிலுள்ள சேவா ஷ்ரம் சக்தி அறக்கட்டளையின் ‘விமன் ஃபைபர் டு ஃபேஷன்’ (Women Fiber to Fashion) சமூக நிறுவனத்துடன் இணைந்து அண்மைகாலமாக அவர் செயல்பட்டு வருகிறார். ஆள்கடத்தல் அல்லது பாலியல் வன்முறை உள்ளிட்ட பின்னணியிலிருந்து வரும் பெண்களுக்கு ஆடைத் தயாரித்தல், உற்பத்தியின் தரத்தை ஆராய்தல் முதல் வடிவங்களை வரைதல் வரையிலான திறன்களைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க அந்நிறுவனம் உதவுகிறது.

“இந்தக்‌ கூட்டு முயற்சி, அப்பெண்களுக்கு வேலை வழங்கி அதிகாரம் அளிப்பதுடன் சுரண்டல், துஷ்பிரயோகத்தின் சுழற்சிகளிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவுகிறது.

“இதன்வழி இவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கவும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் செய்கின்றனர்,” என்று திருமதி மஹாலக்‌ஷ்மி விளக்கினார்.

‘டியர் டார்லிங்’கின் அடுத்த வெளியீட்டிற்கான ஆடைகளைத் தயாரிக்க அவர் தற்போது அந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்தியாவில் தயாரிக்‌கப்பட்ட ஆடைகள் சிங்கப்பூருக்‌கு இறக்‌குமதி செய்யப்பட்டு இங்கும் உலகெங்கிலும் விற்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் சேவா ஷ்ரம் சக்தி அறக்கட்டளைக்‌கு பயணம் மேற்கொண்ட திருமதி மஹாலக்‌ஷ்மி, இக்‌கூட்டு முயற்சியால் ஏற்பட்டுள்ள நேர்மறையான தாக்கத்தை தாம் நேரில் கண்டதாக சொன்னார். சமூக ஊடகங்களின்வழி நிதி திரட்டி, ‘விமன் ஃபைபர் டு ஃபேஷன்’ சமூக நிறுவனத்திற்கு ஆறு புதிய தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.

“இந்த வாய்ப்பை அளித்ததற்கு என்னிடம் அவர்கள் நன்றி கூறினர். இரவு உணவு வாங்க தம் தந்தைக்குப் பணம் கொடுத்து அவரை ஆதரிக்க தன்னால் இப்போது முடிவதாக அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்,” என்று திருமதி மஹாலக்‌ஷ்மி நினைவுகூர்ந்தார்.

“டியர் டார்லிங் வழங்கும் ஒவ்வோர் ஆடையும் தனித்துவமிக்கதாக உணர்கிறேன். ஆடை வடிவமைப்புகளில் மட்டுமின்றி சமூக நலனிலும் இந்த அளவிற்கு சிந்தித்து முயற்சி செய்து வர்த்தகத்தைக்‌ காண்பது அரிது என்று நான் நினைக்கிறேன்,” என்று டியர் டார்லிங்கின் வர்த்தகத்திற்கு ஆதரவளித்து வரும் சுபாஷினி கூறினார்.

தம்மிடமிருந்து வாங்கும் ஆடைகளுக்குப் பின்னால் உள்ள பயணத்தையும் அவற்றை தயாரித்தவர்களின் கதைகளையும் தம் வாடிக்கையாளர்கள் அறிய வேண்டியதன் அவசியத்தை திருமதி மஹாலக்‌ஷ்மி வலியுறுத்தினார்.

“தங்களின் வாங்கும் பழக்‌கத்தினால் ஏற்படும் தாக்கத்தை என் வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டியது முக்கியம் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்