செய்தி: ரவி சிங்காரம்
இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து சமூக ஊடகத் தளங்களில் காணொளிகளைப் பதிவேற்றிவரும் குரல்வளப் பயிற்றுநர் கார்த்திக் சேகரன், காலத்திற்கேற்ப இசைக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்துவருகிறார்.
அவர் தொடங்கிய vocaler.in எனும் இணைய இசைப்பள்ளியில் அனைத்துலக அளவில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மே 24ஆம் தேதி அவர் சிங்கப்பூர் ‘கல்சா’ சங்கத்தில் தமது முதல் அனைத்துலக இசைப் பயிலரங்கை நடத்தினார்.
‘மாஸ்க் ஸ்டூடியோஸ்’ ஏற்பாட்டில், உள்ளூர்ப் பாடகர் மோகன் ராமகிருஷ்ணனின் ஒருங்கிணைப்பில் நடந்த பயிலரங்கில் 13 முதல் 60 வயது வரையிலான 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அடிப்படைக் குரல்வள உத்திகள், உணர்ச்சியுடன் பாடுவது, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய பயிற்சிகள் போன்றவை பயிலரங்கில் கற்பிக்கப்பட்டன.
பொறியியலில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பெற்று அத்துறையிலேயே பணியாற்றி நிபுணத்துவமும் பெற்றவர் திரு கார்த்திக், 40.
அதே சமயம், 7 முதல் 17 வயது வரை கர்நாடகச் சங்கீதத்தை அவர் முறைப்படியும் கற்றுத் தேர்ந்தவர்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 பெருந்தொற்றுகாலத்தில் இசை சார்ந்த புதிய முயற்சியாகத் தம் ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தைத் தொடங்கினார் திரு கார்த்திக்.
“தொடக்கத்தில் மிகக் குறைவானோரே என்னைப் பின்தொடர்ந்தனர். திருப்புமுனையை ஏற்படுத்தியது, திரு ஹரிஹரன் தம் இசைநிகழ்ச்சியில் பாடிய ஒருவித ஆலாபனையை நான் விளக்கியதே. அந்த காணொளிப் பரவலாகப் பகிரப்பட்டது. என்னைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7,000 பேரிலிருந்து 100,000 பேருக்கும் அதிகமாக உயர்ந்தது,” என்றார் அவர்.
‘இன்ஸ்டகிராம்’இல் கிடைத்த புகழ் திரையுலகின் பின்னணிப் பாடகர்களுக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்புகளையும் தேடிக் கொடுத்தது. “பிரபலம்வாய்ந்த ஒருவர் என் காணொளிகளைப் பார்த்து எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் முதலில் அதைப் பார்க்காமல் தவறவிட்டேன். மூன்று வாரங்களுக்குப் பின் தற்செயலாக அதைப் பார்த்ததும் உடனே அவரிடம் பதில் அனுப்பினேன். அதன்பின்பு அத்தகைய வாய்ப்புகள் வரத் தொடங்கின,” என்றார் திரு கார்த்திக்.
“என் குரலைப் பற்றிப் புரிந்துகொள்ள மருத்துவர்களுடன் இணைந்து என் தொண்டையில் புகைப்படக் கருவியைக்கூடப் பொருத்திப் பார்வையிட்டிருக்கிறேன்,” என்றார் திரு கார்த்திக். அதோடு, பல பயிலரங்குகளுக்குச் சென்றும், ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தும் அவர் தம் இசை, குரல்வளம் சார்ந்த ஞானத்தை வளர்த்துவருகிறார்.
துறை மாறி இசைப் பயிற்றுநராக விரும்புவோருக்கு அவர் கொடுக்கவிரும்பும் அறிவுரை, “இது வர்த்தகமும்கூட என்பதால், நீங்கள் நடத்தும் பயிலரங்குக்கு நீங்களே பணம் கொடுத்து வருவீர்களா எனத் தீர்மானிக்கவேண்டும். ஆமாம் என்றால் தாராளமாக இசைப் பயிற்றுநராகுங்கள்; இல்லாவிடில் முதலில் சோதித்துப் பாருங்கள்,” என்றார் திரு கார்த்திக்.
“பாடகர்கள் கவனம் செலுத்தவேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் - ஒன்று, சுவாசிக்கும் முறை; அடிவயிற்றிலிருந்து சுவாசிக்க வேண்டும். இரண்டு, உடல் தோரணை - நிமிர்ந்து நின்று, தலையைச் சாய்க்காமல் பாடுவது,” என்றார் திரு கார்த்திக்.
“பழைய பாடல்களைப் பாடிவந்த நான், புதிய பாடல் உத்திகள் பற்றிக் கேள்விப்பட்டேன்; எனக்குள்ளேயே ஒரு தேடல் தொடங்கியது. அதனால், திரு கார்த்திக் இந்தியாவில் நடத்திய பயிலரங்கில் சேர்ந்தேன். அங்கு நான் கற்ற உத்திகள்மூலம் நம் சிங்கப்பூர்ப் பாடகர்களும் பயன்பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதை ஏற்பாடுசெய்தோம்,” என்றார் பாடகர் மோகன்.
“வயதாக ஆக, முன்பு நாம் பாடிய மேல் சுவரங்களை இப்போது நம்மால் பாடமுடிவதில்லை; ஆனால், பாடலின் சாயல் போகாதபடி இன்றும் பாடமுடிகிறது. அதற்குச் சரியான உத்திகள் தேவை. இன்று என்னால் ஒவ்வொரு வரிக்குப் பின்பும் சரியாக மூச்சை இழுத்துவிடமுடிகிறது. மென்மையான பாடல்களை இன்னும் சுலபமாகப் பாடமுடிகிறது,” என்றார் திரு மோகன்.
பயிலரங்கில் பங்கேற்றனர் மலேசியாவைச் சேர்ந்த இளம் பாடகர்கள் ஸ்ரீ வருஷ்ணி சண்முகவேலா, கலைமதி ஜெகதீசன். மாஸ்க் ஸ்டூடியோஸ் ‘அல்டிமெட் சிங்கர் 2026’ போட்டியில் இரண்டாம் நிலையைப் பிடித்து ஹரிஷ் ராகவேந்திரா இசைநிகழ்ச்சியில் பாடியவர் ஸ்ரீ வருஷ்ணி.
‘ஜோகூர் சூப்பர் சிங்கர் 2024’ வெற்றியாளர் கலைமதி ஜெகதீசன்.
“கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி அனைத்துவிதமான இசைக்கும் பொருந்தும் பொதுவான உத்திகளைக் கற்பித்தார்,” என்றார் ஸ்ரீ வருஷ்ணி.
“எப்படி மூச்சைச் சரியாக இழுத்து விடுவது என்பதை நான் கற்றேன்,” என்றார் கலைமதி.

