பதினைந்து பொங்கல் பானைகளுடன் பெருக்கெடுத்த குதூகலம்

காட்சிக்கு வைக்கப்பட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் 

பதினைந்து பொங்கல் பானைகளுடன் பெருக்கெடுத்த குதூகலம்

2 mins read
27cd4c87-6b7d-4d52-904b-f58abbb488b5
உட்லண்டஸ் வட்டாரப் பொங்கல் நிகழ்ச்சி - படம்: உட்லண்டஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

உட்லண்ட்சில் நடந்தேறிய ‘ஆனந்தப் பொங்கல்’ விழா, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை இணைத்த வண்ணமயமான நிகழ்வாக அமைந்தது.

ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்கு உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்தது. அதில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிற இனத்தவர்களும் பங்கேற்று, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றித் தெரிந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பான தொடக்கமாக, பாரம்பரிய முறைப்படி 15 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் இணைந்து பொங்கல் வைத்தனர்.

நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள். இந்நிகழ்ச்சிக்கு 400க்கும் அதிகமானோர் வருகையளித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள். இந்நிகழ்ச்சிக்கு 400க்கும் அதிகமானோர் வருகையளித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். - படம்: உட்லண்டஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றப்பட்டது. உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திருவாட்டி மரியம் ஜாஃபர் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

குடியிருப்பாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்ததோடு, அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரம்பரியக் கருவிகளின் செயல்முறை விளக்கங்களையும் அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

இந்த ஆண்டு பொங்கல் விழாவில் பண்பாட்டை எடுத்துரைக்கும் அங்கங்கள் இடம்பெற்றன.

அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல், உலக்கை போன்றவை நேரடியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பயன்கள் குறித்து இளம் தலைமுறைக்கும் குழந்தைகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை நாதஸ்வர மேளம், பறையிசை, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவை இடம்பெற்றன.

மேலும், சிலம்பம், கரகாட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தோகை விரித்தாடும் நடனமணிகள்.
தோகை விரித்தாடும் நடனமணிகள். - படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

குழந்தைகளுக்காகச் சிறப்பாகக் கறுப்புத் தாளில் கோலம் வரைதல் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெரியவர்களுக்கு ‘உரியடி’ போட்டியும் இந்த ஆண்டு முதன்முறையாக ‘கரும்பு கடித்தல்’ போட்டியும் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வண்ணக் கோலம்.
வண்ணக் கோலம். - படம்: உட்லண்டஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

நிகழ்ச்சியின் முடிவில் வாழையிலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. விழாவின் நிறைவில், அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் அரிசிப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற உட்லண்ட்ஸ் வட்டாரவாசி கவிதா நாதன், அலங்காரத்தைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறினார்.

“கரும்பு, வாழைமரம் ஆகியவற்றைக் கொண்டு அலங்கரித்திருந்தது அருமையாக இருந்தது. மற்ற பெண்களும் நானும் சேலை அணிந்து கோலமிட்ட காட்சி வண்ணமயமாக இருந்தது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்