வகுப்பறையில் வலுவாகும் குடும்பப் பிணைப்பு

எஸ்யுடிடி நடத்திய செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்ற குடும்பம்

வகுப்பறையில் வலுவாகும் குடும்பப் பிணைப்பு

3 mins read
472c33ec-fd70-45c5-8b65-5ee4387bfd5d
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) நடத்திய ஏஐ பயிலரங்கில் கலந்துகொண்ட குடும்பம். (இடமிருந்து) முனைவர் இராஜமனோன்மணி, திரு ஆ. இரவிக்குமார், நிகிலா, டாக்டர் நிவேதா . - படம்: ரவி சிங்காரம்

புதியனவற்றைக் கற்பதில் நாட்டம் என்றும் குறையக்கூடாது என்பதற்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றனர் இரவிக்குமார் - இராஜமனோன்மணி இணையர்.

தமது மகள்களும் மனைவியும் செயற்கை நுண்ணறிவுபற்றிப் பேசும்போது அவர்களை ஆர்வத்துடன் செவிமடுப்பது 63 வயது ஆலாலசுந்தரம் இரவிக்குமாரின் வழக்கம்.

“என் மனைவி, அண்மைய வளர்ச்சிகள் பற்றி மகள்களுடன் உரையாடும் விதம் பார்த்து நான் வியப்பதுண்டு. அவர் எங்கள் அனைவருக்கும் முன்மாதிரி,” என்று கூறும் அவர் கட்டுமானத்துறைத் திட்டமிடல் மேலாளராகப் பணியாற்றுகிறார். 

குடும்பத் தலைவி முனைவர் இரவிக்குமார் இராஜமனோன்மணி, 63, நச்சு உயிரியல் துறையில் இந்தியாவில் 16 ஆண்டுகள் மருத்துவக் கல்லூரித் துணைப் பேராசிரியராகவும் சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தவர். 2023ல் ஓய்வுபெற்றபின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உலகில் அவர் காலடி எடுத்துவைத்தார்.

தற்போது கட்டுமான நிறுவனத்தில் திறன் மேம்பாட்டுத் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

“ஒரு துறையில் பல்லாண்டுகாலம் பணியாற்றியபின் மற்றொரு துறை பற்றிக் கற்பது எளிதன்று. ஆனாலும், ஏஐ குறித்துப் பயிலரங்குகளில் சேர்ந்து கற்றுக்கொண்டேன்,” என்றார் முனைவர் இராஜமனோன்மணி.

அந்தப் பயிலரங்குகளில் ஒன்றுதான் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பும் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் (எஸ்யுடிடி) இணைந்து ஏற்பாடுசெய்த ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’ ஏஐ பயிலரங்கு. அவரது அனுபவத்தைக் கேட்டதும் ஆர்வம் பிறந்து, எஸ்யுடிடி நடத்திய மற்றொரு ஏஐ பயிலரங்கில் குடும்பத்தினர் பதிவுசெய்தனர்.

பயிலரங்கை வழிநடத்தும் எஸ்யுடிடி மாணவர்கள் ரா. அனிருத், சன் லியாங் ஜூங்.
பயிலரங்கை வழிநடத்தும் எஸ்யுடிடி மாணவர்கள் ரா. அனிருத், சன் லியாங் ஜூங். - படம்: எஸ்யுடிடி

கற்கவும் கற்பிக்கவும் வயது தடையன்று

எஸ்யுடிடி மாணவர்களான ரா.அனிருத், சன் லியாங் ஜூங், புவா ஜூன் லெங், ஜோஷுவா சங் நால்வரும் பயிலரங்கை வழிநடத்தினர்.

‘பில்டிங் 0’ என மாணவர்கள் வழிநடத்தும் ஏஐ ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தலைமைதாங்கும் அனிருத், 23, ஏஐ கருவிகளுக்கிடையேயுள்ள வேற்றுமைகளைக் கற்பித்தார்.

“நம் இலக்குக்கேற்ப, ஏஐயுடன் உரையாடவேண்டும். ஏஐ வளரும் வேகத்துக்கு ஈடுகொடுத்து வளர, ஏஐ பற்றி ஒருவர் மற்றவரிடமிருந்து கற்கவேண்டும்,” என்றார் அனிருத். 

இரு முதுநிலைப் பட்டங்கள் பெற்றுள்ள திரு இரவிக்குமாருக்கு வகுப்பறை புதிதன்று; ஆனால் மகள்களுடன் இணைந்து கற்பது மறக்கமுடியாத அனுபவம் என்கிறார் இவர். “ஏஐ என்பது சாதாரண கேள்வி-பதில் கருவி மட்டுமன்று என்பதை இப்பயிலரங்குமூலம் புரிந்துகொண்டேன்,” என்றார் திரு இரவிக்குமார்.

மருந்துக் கண்காணிப்புத் துறையில் பணியாற்றுகிறார் இவரது மூத்த மகள் டாக்டர் இரவிக்குமார் நிவேதா. இளைய மகள் நிகிலா கணினிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

“பயிலரங்குமூலம், வெவ்வேறு ஏஐ தளங்களை ஒருசேரப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொண்டேன். உதாரணத்துக்கு, ‘ஆழ்ந்த ஆராய்ச்சி’ மூலம் கிடைத்த தகவல்களை ‘கிமி’ (kimi.com/) தளத்தில் உட்புகுத்தி ‘பவர்பாய்ண்ட்’ உருவாக்கக் கற்றேன்,” என்றார் டாக்டர் நிவேதா.

கணினி நிரலாக்கத்துக்கான ‘ஏன்டிகிரேவிட்டி’ போன்ற ஏஐ கருவிகள் பற்றிக் கற்றது பயனளிப்பதாகக் கூறினார் நிகிலா.

வீட்டிலும் ஏஐ

“வெளிநாட்டுக்குச் செல்லும் பயணத்திட்டத்தை நானே உருவாக்க ஒரு வாரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் ஏஐ மூலம் உடனடியாகத் திட்டத்தை உருவாக்கமுடியும் என என் மகள் காட்டினார்,” என்றார் திரு இரவிக்குமார். 

“தொலைக்காட்சியில் ஏதேனும் பார்த்தால் - எடுத்துக்காட்டாக, சுற்றுப்புற நிலைத்தன்மை பற்றிப் பார்த்தால் உடனே ஏஐயிடம் கேட்டு தகவல்கள் சேகரித்து என் சொந்தத் திட்டங்களை உருவாக்குகிறேன்,” என்றார் முனைவர் இராஜமனோன்மணி.

தன் மூன்று வயது மகனைக் கவரக்கூடிய ஏஐ அவதாரங்களை உருவாக்குகிறார் டாக்டர் நிவேதா. 

பகுத்தறிந்து பயன்படுத்தல்

நிறுவன விவகாரங்களுக்கு ஏஐ பயன்படுத்தும்போது எச்சரிக்கை முக்கியம் என்றார் டாக்டர் நிவேதா.

“பொதுப்படையான ஏஐயிடம் ஒரு விஷயத்தைக் கேட்குமுன், தனிப்பட்ட விவரங்களை வெளியிடக்கூடிய தகவல்களை அகற்றிய பின்பே கேட்கவேண்டும். ரகசியமான ஆவணங்களைத் தவிர்க்கவேண்டும்,” என்றார் அவர்.

“வேலையிடத்தில் அளவுக்கு மீறிய ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்கிறேன். ஏஐ கூறுவதையும் சரிபார்க்கிறேன்,” என்றார் நிகிலா.

“ஏஐயிடம் கேட்ட உடன் கிடைக்கும் கட்டுரைக்கும், அதை சீர்படுத்தியபின் கிடைக்கும் கட்டுரைக்கும் இடையே தரத்தில் பெரும் வேறுபாடு இருக்கிறது,” என்றார் அனிருத்.

“ஏஐயைக் கண்டு அஞ்சாதீர்கள். அதைக் கற்க தொழில்நுட்பப் பின்னணி தேவையில்லை. தொடங்குவதுதான் முக்கியம்,” என்றார் திரு இரவிக்குமார். 

குறிப்புச் சொற்கள்