திரு கிருஷ்ணசாமி கேசவபாணி என்றவுடன் பலருக்கும் கம்பீரமான தோற்றமும் உறுதியான குணமும் கொண்ட அரசதந்திரி நினைவுக்கு வருவார். பல்லாண்டுகளாகச் சிங்கப்பூரை அனைத்துலக நிலைகளில் பிரதிநிதித்த அவர், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். அதோடு, பிரிட்டன், மலேசியா, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலும் சிங்கப்பூரின் அரசதந்திரப் பதவிகளில் அவர் சேவையாற்றியுள்ளார்.
இருப்பினும், அவருக்கு ஒரு மென்மையான பக்கமும் உண்டு. லண்டனிலிருந்து அவரது குடும்பத்தினர் கொண்டுவந்த ‘போர்டர் கோலி’ இனத்தைச் சேர்ந்த ‘பெஞ்சி’ என்ற நாய்க்குட்டியிடமே அவர் தமது மென்மையான பக்கத்தை அதிகம் பகிர்ந்துகொண்டார்.
பெஞ்சி 15 ஆண்டுகள் அந்தக் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து பின்னர் உயிர்நீத்தது.
ஜெனீவாவில் பல நாள்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு, நள்ளிரவில் அவர் வீடு திரும்பும்போது, வீட்டில் மற்றவர்கள் அனைவரும் உறங்கிய பின்னரும், வாசலிலேயே அவருக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் பெஞ்சி.
அந்த நாள்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் தற்போது 89 வயதாகும் திரு கேசவபாணி.
“பெஞ்சி எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டான். எங்கள் உலகம் முழுவதும் அவனைச் சுற்றியே இயங்கியது. அவன் எங்கள் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாகவே மாறினான்,” என்றார் அவர்.
வழக்கறிஞர் கே.முரளி பாணி, 58, நரம்பியல் விஞ்ஞானி சசி கேசவபாணி, 53, இருவரும் அவரது மகன்கள்.
பெஞ்சியின்மீது திரு கேசவபாணி காட்டிய அளவற்ற அன்பு, அவரது வாழ்க்கையில் அவர் பின்பற்றும் ‘குடும்பத்துக்கே முதல் முன்னுரிமை’ என்ற அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
“என் முதல் முன்னுரிமை குடும்பம்தான். மற்றவை எல்லாம் அதற்கு அடுத்தபடியே,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது தற்போதைய இல்லத்திலோ ஏதேனும் ஓர் உணவகத்திலோ ஒட்டுமொத்தக் குடும்பமும் கூடி, ஒன்றாக உணவருந்துவார்கள்.
“இருப்பினும், ஒவ்வொரு முறையும் அனைவரும் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. பேரக்குழந்தைகளுக்கு அவரவர் நண்பர்கள் இருக்கிறார்கள்; அதனால் நாம் மற்றவர்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து வாழப் பழகவேண்டும்,” என்று விளக்கினார் திரு கேசவபாணி. அவருக்கு முறையே 19, 17 வயதான பேரனும் பேத்தியும் உள்ளனர்.
“நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்,” என்பது அவரது கொள்கை.
அந்தத் தெளிவான கொள்கைதான், அவரது வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையே நல்ல சமநிலையைப் பேண உதவியது.
தமது வேலையில், குறிப்பாக நெருக்கடியான காலகட்டங்களில் மிகுந்த பணிச்சுமை ஏற்பட்டபோது, வேலை விவகாரங்களை ஒருபோதும் வீட்டிற்குள் கொண்டுசென்றதில்லை என்றார் திரு கேசவபாணி.
மேலும், தமது இரு மகன்களின் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா போன்ற குடும்பத்தின் முக்கியத் தருணங்களில் தவறாமல் பங்கெடுப்பதற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு விடுப்பு எடுத்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற பிறகும், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றில் சமூகப் பணிகள் மூலம், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டில் அவர் தொடர்ந்து பங்களித்துவருகிறார்.
அனைத்துலக அரங்கில் அரசதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அது ஒருவரது இல்லத்திலும் முக்கியமானது என்பதைத் திரு கேசவபாணி வலியுறுத்தினார்.


