இசை ரசிகர்களில் சிங்கப்பூர், இந்தியா என எந்த வேறுபாடும் இருப்பதில்லை என்றும் அன்று வரும் ரசிகர்கள்தான் சிறந்த ரசிகர்கள் எனக் கருதி மகிழ்ச்சியுடன் இசைக்கச்சேரியில் பாடுவது வழக்கம் என்றும் சஞ்சய் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல கர்நாடக இசைக்கலைஞரான சஞ்சய், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலின் குடமுழுக்குக்கான நிதி திரட்டும் நோக்கில் அமைந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடினார்.
செப்டம்பர் 6ஆம் தேதி கோவில் வளாகத்தில் நடைபெற்ற ‘சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்’ எனும் அந்த நிகழ்ச்சியில் ஏராளமான இசை ரசிகர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தம் துணைவியாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் அமைகின்றன. இது, வழிபாட்டைத் தாண்டிச் சமூக ஒன்றிணைவுக்கும் வழிவகுத்துள்ளது,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் ஒழுங்கு உணர்வு தமக்குப் பிடிக்கும் என்று கூறிய சஞ்சய், சமூகத்தை ஒன்றிணைத்து கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டும் உன்னத நோக்குடைய நிகழ்ச்சியில் பாடியது பெருமை என்றார்.
விநாயகர் பாடலில் தொடங்கி, பல்வேறு பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், பாரதியார் பாடலான ‘சந்திரன் ஒளியில் நிலவைக் கண்டேன்’ பாடல் ஆகியவற்றைப் பாடி ரசிகர்களை அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
“இசைக்கு மொழி கிடையாது என்றாலும் மனதுக்கு நெருக்கமான வரிகள் கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்,” என்ற அவர், எந்த மொழியில் பாடினாலும் தமக்குத் தாய்மொழியான தமிழில் பாடுவது மனதுக்கு கூடுதல் நெருக்கமானது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரிய கர்நாடக இசையில் ஊறித் திளைத்திருந்தாலும், நவீன இசைக்கலைஞர்களுடன் கைகோத்து புதிய முயற்சியையும் தயக்கமின்றி மேற்கொண்டு வருகிறார் சஞ்சய். இசைக்கலைஞர் ஷான் ரோல்டனுடன் இணைந்து ‘ராக்’, ‘புளூஸ்’ என இருவகை இசை வடிவங்களைப் பாரம்பரிய இசையுடன் இணைத்து உருவாக்கிய ‘அன்பெனும் பெருவெளி’ எனும் இசைக்கோப்பையும் அவர் உருவாக்கியுள்ளார்.
“ஒரு கட்டமைப்பில் சிக்கியுள்ளவரையில்தான் பயம் இருக்கும். அதிலிருந்து வெளிவந்துவிட்டால் புதிய முயற்சிகளைத் தயக்கமின்றி மேற்கொள்ளலாம். ஒவ்வொரு புதிய முயற்சியையும் உற்சாகத்துடன் மேற்கொள்கிறேன்,” என்றார் சஞ்சய்.
சமூக ஊடகத்தில் காணொளி படைப்பதுடன், திரைப்படங்களிலும் பாடத் தொடங்கியுள்ளார் அவர்.
கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனப் பரவலாகக் கருதப்படுவது குறித்துப் பேசிய அவர், “ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். இளையர்கள் நல்ல இசையைத் தொடர்ந்து படைத்து வந்தால் ரசிகர்களின் வருகையும் அதிகரிக்கும்,” எனக் கருத்துரைத்தார்.
கவனச் சிதறல் அதிகரித்துள்ள காலகட்டத்தில், இருதிரைப் போக்கினைப் போல (Second Screening), இசைக்கச்சேரியிலும் பார்வையாளர்கள் திறன்பேசி பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றாலும் பாடும்போது தமது கவனம் பாடலில் மட்டுமே மூழ்கியுள்ளதால் அது தம்மை பாதிப்பதில்லை என்றும் சொன்னார் சஞ்சய்.
தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியை இசைத்துறை தொடர்ந்து ஏற்றுள்ளதாகக் கூறினார். கையில் தம்பூராவை எடுத்துக்கொண்டு சுற்றிய காலம் மலையேறி, தற்போது திறன்பேசிச் செயலியில் அது வந்துவிட்டதை அவர் சுட்டினார்.
“சில கடினமான பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பம் துணைநிற்கலாம். ஆனால், மேடையில் பாடும் கலைஞருக்கும் அதனைக் கேட்கும் ரசிகனுக்கும் இடையிலான உறவு உணர்ச்சிமிக்கது. இதற்கிடையில், எந்தச் செயற்கை நுண்ணறிவும் நுழைந்துவிட முடியாது,” என உறுதிபடக் கூறினார் சஞ்சய்.
“2027ஆம் ஆண்டு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலின் குடமுழுக்குக்கு நடைபெற உள்ளதையடுத்து, அதற்கான நிதி திரட்டல் இசை தோய்ந்த, தெய்வீக உணர்வு பொங்கும் வகையிலான நிகழ்ச்சிகள்மூலம் மேற்கொள்ளலாம் எனும் முடிவின் வெளிப்பாடே இந்த இசைக்கச்சேரி,” என்றார் கோவில் செயற்குழுச் செயலாளர் பன்னீர் செல்வம்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ‘பர்ப்பிள் ஆரா’ நிறுவனம், இந்நிகழ்ச்சிக்கு அலங்கார உதவிகள் செய்த ‘அலங்கார்’, உணவளித்த ‘கைலாஷ் பர்பத் உணவகம்’ ஆகியவற்றின் ஆதரவால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாகக் கூறிய அவர், பக்தர்கள் அனைவரும் குடமுழுக்கு நிதி திரட்டுக்குப் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

