சிங்கப்பூரில் உள்ள பண்ணைகள் தங்களின் வருடாந்தர உற்பத்தி இலக்கை அடைவதற்காக, வேறு வகையான உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கு நீக்குப்போக்கு வழங்கப்படும்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த முடிவு செயல்படுத்தப்படும். சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 29) அறிவித்த பண்ணைக் குத்தகை மேம்பாடுகளில் இதுவும் ஒன்று.
மேம்பாட்டுக்கான காலவரையறைகள், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை குறித்து வழங்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, 2030ஆம் ஆண்டுக்குள் தனது ஊட்டச்சத்துத் தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் இலக்கை 2025 நவம்பரில் சிங்கப்பூர் கைவிட்டது.
இதற்குப் பதிலாக, 2035ஆம் ஆண்டுக்குள் நார்ச்சத்து, புரத உற்பத்திக்கான புதிய இலக்குகள் உறுதிசெய்யப்பட்டன. இந்நிலையில், இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயத்தை எளிதாக்கும் அண்மைய முயற்சியாக இந்த மேம்பாடுகள் அமைந்துள்ளன.
பண்ணைகள் தங்களின் குத்தகை ஏல முன்மொழிவுகளில் (tender proposals) வருடாந்திர உற்பத்தி இலக்கை எட்டுவதற்காகக் குறிப்பிட்டிருந்ததைத் தவிர, வேறு வகையான உணவுப் பயிர்களை வளர்க்கத் தற்போது அனுமதி இல்லை.
செப்டம்பர் முதல், தற்போதுள்ள பண்ணைகள், புதிய பண்ணைகள் ஆகிய இரண்டுமே, சிங்கப்பூர் உணவு அமைப்பு அங்கீகரித்துள்ள மற்ற முக்கிய உணவு வகைகளை உற்பத்தி செய்து தங்களின் உற்பத்தியைப் பன்முகப்படுத்த விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.
இலைவகைக் காய்கறிகள், காளான்கள், முட்டைகள், கடல் உணவுகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புக் குறிக்கோள்களை நிறைவு செய்யும் அதே வேளையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்பச் செயல்படப் பண்ணைகளுக்கு இது நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
மேம்படுத்தப்பட்ட இந்தக் குத்தகைக் கட்டமைப்பின்கீழ், திட்டங்களைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் பண்ணைகளுக்கு அமைப்பு அதிக அவகாசம் வழங்கும்.
இந்த மேம்படுத்தப்பட்ட குத்தகை முறை, அவகாசத்தைத் தற்போதைய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்க வகைசெய்கிறது.
மேலும், பண்ணைகள் குத்தகை தொடங்கியதிலிருந்து தங்களது உற்பத்தி இலக்குகளை எட்ட, ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக எட்டு ஆண்டுகள் அவகாசம் பெறும்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை ஏலக் குத்தகை வெளியிட்ட விவசாய நிலங்களைப் பெறும் தரப்பினரிடமிருந்து இந்தப் புதிய காலக்கெடு நடைமுறைக்கு வரும்.
சுங்கை தெங்கா, லிம் சூ காங் ஆகிய இடங்களில் உள்ள இந்த நிலப் பகுதிகள் காய்கறி விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்டு, 20 ஆண்டு காலக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

