துடிப்பான வாழ்க்கைமுறையை மேற்கொண்டு வந்த சிவமணி தியாகராஜனுக்கு இளவயதில் பாதுகாப்பு அதிகாரிகள்மீது உயர்வான எண்ணம் இருந்ததில்லை. அதிக வேலை இல்லாமல் பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பது அவர்களின் பணி என்றே அவர் கருதினார்.
காலஞ்சென்ற இவரது தந்தை தியாகராஜன் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தவர். முன்னதாக, காவல்துறை அதிகாரியாக வேண்டுமென்ற இவரது ஆசையைத் தந்தையிடம் தெரிவித்தபோது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்தார். மாறாக, பாதுகாப்புத் துறையை அவர் பரிந்துரைத்தார்.
“பாதுகாப்புத் துறையில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளின் இடத்திலிருந்து பார்த்தால்தான் அவர்களின் சிரமம் புரியும் என்று அப்பா கூறினார்,” என்று தந்தை கூறியதை நினைவுகூர்ந்தார் சிவமணி.
தந்தையின் உந்துதலால் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்ற முடிவெடுத்த சிவமணி, 51, ஏறத்தாழ 20 ஆண்டுகளாக அத்துறையில் வேலைபார்க்கிறார்.
இரண்டு வாரங்கள் பயிற்சி மேற்கொண்ட பிறகு அவரது பாதுகாப்பு அதிகாரி பணி தொடங்கியது. ஆண் ஆதிக்கம் மிகுந்த துறையாக இன்னும் பார்க்கப்படும் இத்துறையில் சேர்ந்தபோது ஆண்களுக்கு நிகராகப் பல திறன்களைத் தான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாகச் சிவமணி சொன்னார்.
“சுற்றிலும் ஆண் சக ஊழியர்கள். நான் துணிச்சலாகச் சவால்களைக் கையாள வேண்டிய நிலை. தொடக்கத்தில் கூச்சமாக இருந்தபோதும் நாளடைவில் அதை எதிர்கொள்ளத் துணிந்தேன்,” என்றார் சிவமணி.
இரவு நேரத்தில் கையில் ஒளிரும் விளக்கை ஏந்தியவாறு இரவு முழுவதும் கண்விழித்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது எளிய காரியமன்று என்பதை அவர் நேரில் கண்டார்.
“சில நேரங்களில் ஆண் சக ஊழியர்கள் பலரும் பெண்கள் குறிப்பிட்ட சில பணிகளைச் செய்ய முடியாது என்று கருதி, அவர்களின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது,” என்று தெரிவித்தார் சிவமணி.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக மற்றவர்களுடன் எளிதில் பழகும் இயல்பு தனக்கு இல்லை என்று கூறிய அவர், இந்தப் பணி தன்னை பெரிதும் மாற்றியதாகச் சொன்னார். மக்களுடன் அடிக்கடி பேசிப் பழகத் தொடங்கியதுடன் இப்பணியையும் அவர் நேசிக்கத் தொடங்கினார்.
20 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேறு துறைக்கு மாறும் எண்ணம் வரவில்லை என்ற அவர் இத்துறையில் கற்றுக்கொள்ள பல அம்சங்கள் உண்டு என்றும் குறிப்பிட்டார்.
உட்கார்ந்திருந்து கண்காணிப்பதற்கும் அப்பால் பல நெருக்கடிச் சூழல்களையும் கையாள வேண்டும் என்று விளக்கிய சிவமணி தற்போது தளபத்திய நிலையத்தில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும் பாதுகாப்பு மேலாளராகவும் உள்ளார்.
அவரின்கீழ் 12 அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இப்போது இத்துறையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் சேர்வதாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய சிவமணி, வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பவர்.
பாதுகாப்பு ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் பொதுப் பொருளாளராக உள்ள சிவமணி சங்கத்திற்கு உரிமையான நிதியை நிர்வகிப்பதிலும் அந்த நிதிக்கான கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதிலும் ஈடுபடுகிறார்.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் மே தின விருது விழாவில் தொழிலாளர் தோழர் விருது பெற்ற சிவமணி, பாதுகாப்புத் துறைப் பணியை ஓர் ஓய்வுக்கால வேலையாகப் பார்க்காமல் நேர்மறையான மனப்பான்மையுடன் இதில் சேரவேண்டும் என்றார்.

