தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன்னிகரற்றது தந்தையின் தியாகம்

2 mins read
8cacf090-6b9e-4a35-ac09-dc26c038f499
தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அறநிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களுக்காக செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. - படம்: இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்
multi-img1 of 3

தமிழகத்தின் ஜெகதாப்பட்டினத்தில் மீனவராகப் பணியாற்றிவந்த தந்தை சிவபெருமாள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பினால் இறந்ததை நினைத்துத் தான் ஏங்காத நாளில்லை என்கிறார் ஸ்ரீராம்.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் மின் பொறியாளராகப் பணியாற்றிவரும் ஸ்ரீராம், 28, கடந்த ஜூன் 15ஆம் தேதி தந்தையர் தினத்தன்று தந்தையின் நினைவுகளுடனே நாளைக் கழித்தார்.

“ஒவ்வோர் ஆண்டும் தந்தையின் நினைவாகவே இருக்கும். இந்த ஆண்டு அந்த ஏக்கம் எப்போதையும்விட அதிகமாக இருந்தது,” என்றார் ஸ்ரீராம்.

தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அறநிறுவனமும் மனிதவள அமைச்சும் இணைந்து ஜூன் 22ஆம் தேதி மாலை செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் தன் தந்தையைப் பற்றி தமிழ் முரசிடம் பேசினார்.

“வீட்டில் நாங்கள் சகோதரர்கள் நால்வர். அப்பா அவ்வளவாகப் படிக்காவிட்டாலும், பிள்ளைகளாவது படிக்க வேண்டும் என்பதற்காகக் க‌ஷ்டப்பட்டு எங்களைப் படிக்கவைத்தார். நாங்கள் இன்று பட்டம், பட்டயம் பெற்றிருப்பதற்குக் காரணம் அவர்தான்.

“எங்கள் அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் அது. நான் தவறான பாதையில் செல்லாமலிருக்க என்னை நெறிப்படுத்தினார். தன் பிள்ளைகளுக்கு அவர் எந்தவிதக் க‌ஷ்டமும் கொடுக்கவில்லை,” என்றார் ஸ்ரீராம்.

சிவபெருமாள் ஸ்ரீராம்.
சிவபெருமாள் ஸ்ரீராம். - படம்: ரவி சிங்காரம்

தாயார் உடல்நலம் குன்றியதாலும் குடும்பப் பொருளியல் பாதிக்கப்பட்டதாலும் அப்பாவுக்கு உதவும் பொருட்டு, 11ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டுக் கடலுக்குச் சென்றார் ஸ்ரீராம்.

ஆனால் இலங்கைக் கடற்படை மகன், தந்தை இருவரையும் சிறைப்பிடித்தது. தன்னைப்போல் மகனையும் நிலையற்ற மீனவ வாழ்வில் இட்டுச் செல்கிறோமே என வருந்தினார் தந்தை. அதனால் மகனை மீண்டும் படிக்க அனுப்பிவைத்தார்.

தாத்தா இறந்தபோது இறுதிச் சடங்குக்காகச் சென்ற தந்தை சிவபெருமாள், திரும்பும் வழியில் பேருந்திலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறினார் ஸ்ரீராம்.

வீட்டின் தூணாக இருந்த தந்தையை இழந்ததால் குடும்பம் நிலைகுலைந்துபோனது. பட்டயக் கல்வியை நிறுத்தி மீன்பிடிக்கச் சென்ற ஸ்ரீராம், மறுபடியும் கடற்படையினரிடம் பிடிபட்டுப் படகை இழந்ததால் தொழிலைக் கைவிட்டு, அண்ணனுடன் சிங்கப்பூர் வந்தார்.

அக்கா திருமணத்தை நடத்தி, கடன்களை அடைத்து, தங்கையின் திருமணத்துக்காகவும் வீடு கட்டவும் அண்ணனுடன் பணம் சேர்த்துவருவதாகச் சொன்னார் ஸ்ரீராம்.

அவரைப் போலவே தந்தையை இழந்த வேதனையை உணர்ந்தவர் சின்னையா ராமமூர்த்தி, 37. அதனால் இந்தத் தந்தையர் தினத்தன்று சொந்த ஊரிலிருந்த ஐந்து வயது மகனைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, புத்தாடை வாங்கித் தந்து மகிழ்வித்தார்.

“என்னால் என் தந்தையோடு நேரம் செலவிடமுடியவில்லை. அதனால் நானாவது என் மகனுடன் நேரம் செலவிட விரும்பினேன். இருந்தாலும் குடும்பச் சூழலால் பணம் ஈட்ட சிங்கப்பூருக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முடிந்தபோதெல்லாம் ஊருக்குச் சென்று மகனைச் சந்திப்பேன்,” என்றார் ராமமூர்த்தி.

தன் மகன் எதிர்காலத்தில் நன்கு படித்து, சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பது இவரது கனவு.

 சிங்காட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சிங்காட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சியில், ‘ஆட்டம்’ எனப்படும் ஆனந்தா மரபுக்‌கலைகள் கூடம், ‘எஸ்ஜி60’ஐ முன்னிட்டு நடத்தும் சிங்காட்டம் எனப்படும் புதிய நடனத்தை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்