மனிதர்களை இணைப்புகள் வலுப்படுத்துகின்றன என்பதை உறுதியாக நம்பும் கட்டடக் கலைஞரும் ஓவியக் கலைஞருமான திருவாட்டி லட்சுமி மோகன்பாபு, தமது படைப்புகள் பலவற்றில் ‘இணைப்புகள்’ என்ற கருப்பொருளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறார்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டுள்ள லட்சுமி, ஐஐடி பாட்னாவின் டெட்-எக்ஸ் (TEDx) மாநாட்டில் ‘இன்டரேக்ஷன்ஸ் புரோஜெக்ட்’ கலைகள் குறித்த தமது கருத்துகளை விளக்கினார்.
டெல்லியின் வெற்றுச் சுவர் ஒன்றில் தொடங்கி நிலவு வரை நீண்ட தமது கலைப் பயணத்தைப் பற்றி அப்போது பார்வையாளர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார். அதை நினைவுகூரும் வகையில் லட்சுமி, கடந்த வாரம் தமது ‘லிங்க்ட்இன்’ பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
1980களில் அப்போதைய சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பில் இருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பன்னாட்டுச் சூழலில் வளர்ந்ததாக லட்சுமி குறிப்பிட்டார்.
மலையாளப் பின்புலத்தைக் கொண்டிருந்தபோதிலும் உலகின் எல்லாப் பண்பாடுகளும் பல்வேறு புள்ளிகளில் இணைவதாக அவர் கூறினார்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் எனப் புலம்பெயர்ந்த லட்சுமி, வாழப் பழகிக்கொள்ளும் ஒவ்வோர் இடத்திலும் எதிர்பாராத புதிய படிப்பினைகளும் சிந்தனைகளும் பொதிந்திருப்பதாகக் கூறுகிறார்.
“மனிதர்களாகிய நம்மை உண்மையிலேயே இணைப்பது எது?” என்ற ஆழமான கேள்வி தமக்குள் வேரூன்றியதாகக் கூறும் லட்சுமி, அதன் விளைவாக, மனிதகுலத்திற்குப் பொதுவான அம்சங்களைக் கொண்டு ஐந்து வடிவமைப்புகளை உள்ளடக்கிய ‘இன்டரேக்ஷன்ஸ்’ தொடரை உருவாக்கினார்.
லட்சுமியின் மண்டலா வடிவ ஓவியங்கள், அனைத்துலக ஓவியக்கலைச் சமூகத்தின் பாராட்டைப் பெற்றவை. சிங்கப்பூர் அரும்பொருளகத்தில் ஓவியங்களாகத் தொடங்கிய இப்படைப்புகள், பின்னர் உயிரோவியங்களாக மறுபதிப்பு செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ‘மூன் கேலரி’ விஞ்ஞானிகள் ஆகியோரின் கூட்டுமுயற்சியால் லட்சுமியின் இரண்டு கனசதுர (கியூப்) படைப்புகள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் கொண்டுசெல்லப்பட்டு, ஓராண்டு காலம் பூமியைச் சுற்றி வந்தன.
சிங்கப்பூரையும் ஜப்பானையும் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து, கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 12ஆம் தேதி, கடலுக்குள் ஏழு கிலோமீட்டர் ஆழத்தில், பேரழுத்தத்தைத் தாங்கும் மூன்று கனசதுரங்களை அவர் உருவாக்கினார். உலகின் முதல் ஆழ்கடல் கலைப்படைப்புகள் அவை ஆகும்.
“’உன் கலை, நிலவைச் சென்றடையும்’ என என் தாயார் பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்த்தியது மெய்யாவதைக் கண்ட எனக்கு மெய்சிலிர்க்கிறது,” என்று அவர் கூறினார்.
‘டைம் ஸ்லைசஸ்’ என்ற அவரது மூன்றாவது படைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் நிரந்தர இடம் பிடிக்கவுள்ளது.
பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கும் கலைத்திறன் கொண்டுள்ள திருவாட்டி லட்சுமி, நாம் ஏற்படுத்தும் இணைப்புகளும் பயன்படுத்தும் வாய்ப்புகளும் புதிய கதவுகளைத் திறக்கும் ஆற்றல் கொண்டவை என்று பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.
“உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றுவதற்கு ஒரேயொரு சந்திப்பு மட்டுமே போதுமானது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.

