பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தின அணிவகுப்பில் பெண் குரல்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தின அணிவகுப்பில் பெண் குரல்

2 mins read
784eb10d-de2d-4c3d-aeeb-166aa2424ff6
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் அறிவிப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோவானா ஃபிரான்சுவா, 33. - படம்: சுந்தர நடராஜ்
Google News Preferred Icon
பல வாரங்களாகத் தொடர்ந்து அணிவகுப்பிற்காகப் பயிற்சி செய்துவரும் ஜோவானா.
பல வாரங்களாகத் தொடர்ந்து அணிவகுப்பிற்காகப் பயிற்சி செய்துவரும் ஜோவானா. - படம்: தேசிய தின அணிவகுப்பு 2026இன் நிர்வாகக் குழு

சிங்கப்பூரர்கள் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் ஆங்கில வர்ணனையை நேரலையிலும் தொலைக்காட்சியிலும் காணும்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அறிவிப்பாளர் ஒருவரின் குரலைக் கேட்கவிருக்கின்றனர்.

தேசிய தின அணிவகுப்பின் முதன்மை அறிவிப்பாளராகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் வில்லியம் ஸேவியர் இவ்வாண்டும் அப்பணியைத் தொடர்கிறார்.

அவருடன் இணைந்து, முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பின் அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஜோவானா ஃபிரான்சுவா, 33.

இந்த வாய்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் ஜோவானா.

“செய்தியைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது,” என்று ‘பவர் 98’ வானொலிப் படைப்பாளரான இவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தேசிய அளவிலான நிகழ்வுகளில் அறிவிப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் ஜோவானாவுக்கு உண்டு. எனினும் தேசிய தின அணிவகுப்பிற்கு இவர் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

கடந்த ஆறு வாரங்களாக, எழுத்தாளர்களோடும் தயாரிப்பாளர்களோடும் இணைந்து ஜோவானா பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சொல்ல வேண்டிய தகவல்கள் கவனமாக ஆராயப்படுகின்றன. தேவைப்பட்டால் திருத்தங்களும் செய்யப்படுகின்றன.

குறிப்பாக, பெயர்களைச் சரியாக உச்சரிப்பதில் இவர் தனி கவனம் செலுத்துகிறார். நிகழ்வின் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப, குரலின் தொனியையும் வெளிப்படுத்தும் விதத்தையும் வைத்துக்கொள்வது அவசியம்.

“வரவேற்புரையின்போது உற்சாகமும் கதகதப்பும் நிறைந்த குரல் தேவைப்படுகிறது. அதேவேளையில், தேசியப் பற்றுறுதி போன்ற முக்கிய அங்கங்களின்போது குரலில் அமைதியும் கம்பீரமும் அவசியம்,” என்று விளக்கினார் ஜோவானா.

நான்கு மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வு முழுதும் உற்சாகத்தைத் தக்கவைத்துக்கொள்வது மற்றொரு சவாலாக அமையும்.

ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் பார்க்கும் நேரலை நிகழ்வில் பேசுவது இயல்பாகவே மன அழுத்தத்தைத் தரும் என்றாலும் முறையான பயிற்சிகள் தன்னம்பிக்கையை அளிப்பதாக ஜோவானா கூறுகிறார்.

“அணிவகுப்பைப் பார்க்கும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்பது மக்களின் அனுபவத்தை மாற்றியமைக்கும்,” என்று இவர் உறுதியுடன் சொல்கிறார்.

ஒலிபெருக்கிக்குப் பின்னால் ஒலிக்கும் தனது குரல், சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெண்கள் ஆற்றிய பங்களிப்பைப் பிரதிபலிக்கும் என்று நம்புகிறார் ஜோவானா.

குறிப்புச் சொற்கள்