தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ஏப்ரல் 26ஆம் தேதி ‘இ3’ நிகழ்ச்சியை நடத்தியது.
‘இயல், இசை, இளமை’ என மூன்று சொற்களின் சுருக்கமாய் நிகழ்ச்சி விளங்கியது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமிழ்மொழி விழாவின் ‘இளமை’ என்ற கருப்பொருளையொட்டி நிகழ்ச்சியின் அம்சங்கள் அமைந்தன.
‘வீரத்தாயின் வேள்வி’ என்ற தலைப்பில் நடைபெற்ற மேடை நாடகம், நிகழ்ச்சியின் உச்சகட்டமாகத் திகழ்ந்தது.
வீரத்தாயின் வீரமுழக்கம் நிகழ்நேரத்தையே போர்க்களமாக மாற்றி, பார்வையாளர்களின் மனங்களிலும் தமிழ் மக்களின் வீர மரபுகளிலும் தீச்சுடரைத் தூண்டியது.
இந்த நாடகம், சங்க இலக்கியத்திலிருந்து நேரடியாக உருவாக்கப்பட்ட கதை. புறநானூற்றையும் குறுந்தொகையையும் தாங்கிய இந்த நாடகம், ஒரு தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் உள்ளுணர்ச்சிகளையும் அவளது கதையின் வழியாக மேடையேற்றியது.
புறநானூறு, சமூகக் கடமையையும் வீரத்தையும் பிரதிபலிக்கிறது. குறுந்தொகை, காதலும் நெஞ்சத்தின் உணர்வுகளையும் நயம்படப் பேசுகிறது. மாணவர்கள் நாடகத்தில் வரும் தமிழ்ச் சொற்களை நயம்பட உச்சரித்தும் உணர்வுக்கு ஏற்றார்போல் பேசி நடித்தும் திறமையை வெளிக்காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
நாடகத்தின் கதையும் வசனங்களும் சங்ககாலத்தைத் தழுவி இருந்ததால் சொற்களும் அதில் வரும் வசனங்களும் புதுமையாகவும் உச்சரிப்பதற்குச் சவால் மிக்கதாகவும் இருந்தன.
மேலும் பண்டைய தமிழ் மரபு, பண்பாடு, புறநானூறு நூலைப்பற்றி அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்தது என இதில் வளங்கிள்ளியாக நடித்த மாணவர் நவீனும் நெடுங்கிழாராக நடித்த ராகவும் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் பல மொழிகள் பயன்பாட்டில் இருக்கும் சூழலில் பிற மொழிகளின் தாக்கமும் அதன் உச்சரிப்புச் சாயல்களையும் தவிர்த்துப் பேசுவதற்கு இது சிறந்த பயிற்சியாகவும் ஊக்கமாகவும் இருந்ததாக எழிலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த செல்வி ஜஃபீரா கூறினார்.
நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சுருதிலயா, இளம்பிறை கதாபாத்திரத்தைப் பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து, நாடகத்தின் கதைக்கும் ஏற்று நடித்த வேடத்திற்கும் பெருமைசேர்த்தார்.
நாடகத்தை எழுதி இயக்கிய பா.கங்கா, இதில் முற்றிலும் உள்ளூர் மாணவர்களை இணைத்து அவர்களுக்கு முழுமையான பயிற்சியையும் ஊக்கமும் கொடுத்து மூன்று மாதங்களாக மேற்கொண்ட உழைப்பின் பயனையும் மாணவர்கள் வசனங்களைத் திறன்படப் பேசி நடித்ததையும் கண்டபோது பெருமிதமாக இருந்தது என்றார்.
இப்படி இன்னும் ஏராளமான திறமைகள் சிங்கப்பூர் மாணவர்களிடம் மறைந்து இருக்கிறது. இந்தத் திறமைகளை லிஷா இலக்கிய மன்றமும் உட்லண்டஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து எதிர்காலத்தில் பல முன்னெடுப்புகளைச் செய்யத் தயாராக உள்ளதாக லிஷா இலக்கிய மன்றத்தின் தலைவர் கண்ணன் சேஷாத்ரி கூறினார்.
நாடகத்திற்குப் பின்னணி இசையமைத்த பரசு கல்யாண், சரவணன் நாடகத்தின் கதையோட்டத்திற்கு உயிர் சேர்த்தனர். நாடகத்தில் மூன்று பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார் தமீம் அன்சாரி.
அதில் ஒரு பாடலுக்கு நடன ஆசிரியர் தேவியின் மாணவிகள் நால்வர் நடனம் ஆடினர்.
நாடகத்தின் தொடர்ச்சியாக கருத்தாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்தாடலின் தலைப்பு ‘பிள்ளைகளைப் போட்டிக்குத் தயார்செய்வது மகிழ்ச்சியும் பெருமிதமும் தருகின்றன/மன உளைச்சலும் வருத்தமும் தருகின்றன’.