பாரம்பரியக் கலைகளை மேடையேற்றிய திருவிழா

2 mins read
6141668d-e0f8-4e2d-9299-b9808ec89cd1
பறை வாசிக்கும் சிறப்பு விருந்தினர்கள் (வலம்) துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் (இடமிருந்து இரண்டாவது). உடன் கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் அருமைச் சந்திரன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: லாவண்யா வீரராகவன்
multi-img1 of 3

இந்திய மரபு, கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் செப்டம்பர் 7ஆம் தேதி ‘கலைத் திருவிழா’ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட பாரம்பரியக் கலைகள் மேடையேறின.

கியட் ஹொங் சமூக மன்ற நிர்வாகக் குழு, இந்தியர் நற்பணிச் செயற்குழு சார்பில் இவ்விழா நடைபெற்றது.

இதில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பரதநாட்டியம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கதக், கோலாட்டம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களைக் கலைஞர்களும் குடியிருப்புவாசிகளும் அரங்கேற்றினர். இந்தியாவிலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலையுடன் சிங்கப்பூரின் புகழ்பெற்ற தொகுப்பாளர் ஜி.டி.மணி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை ஏறத்தாழ 700 பேர் கண்டுகளித்தனர்.

“இந்திய கலாசாரம் தொன்மையானது, கொண்டாடப்பட வேண்டியது. அதன் அழகியலை இயன்றவரை அனைவரிடமும் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள் பலரும் தங்களின் குடும்பத்துடன் இதில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை ஏற்பாடு செய்ததில் பெருமையடைகிறோம்,” என்று சொன்னார் கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் அருமைச் சந்திரன்.

ஒயிலாட்டக் கலைஞர்கள் பார்வையாளர்களுக்குச் சில நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்தனர். வண்ணத் துணிகளைக் கையிலேந்தி அதனைச் சிறப்பு விருந்தினர்கள் உட்பட அனைவரும் இணைந்து ஆடியது அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

“எந்தவித நடனம் ஆடினாலும், மரபுக் கலைகளை நிகழ்த்துவது சிறப்பான, மனநிறைவான அனுபவம். அதற்கான வாய்ப்பு வந்தால் நழுவவிடக்கூடாது. எனவே, குறுகிய நேரத்தில் பயிற்சியளித்து என் மாணவர்களைக் கும்மி நடனம் ஆட வைத்தேன். எல்லாப் பணிகளையும் ஒதுக்கிவைத்து இதற்காக நேரம் செலவிட்ட மாணவர்களுக்கும் இது பெருமையளித்திருக்கும் என நம்புகிறேன்,” என்றார் நடன ஆசிரியையும் சுவாதி நடனப்பள்ளித் தோற்றுநருமான சுவாதி, 43.

தாம் எதிர்பார்த்ததைவிட நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகக் கூறினார் பூன் லே வட்டாரவாசியான பொறியியல் வல்லுநர் விவேகானந்தன், 36. மனைவி மனோரஞ்சனி, 32, மகன் ஸ்ரீவர்ஷ் விவேகானந்தன் ஆகியோருடன் வந்திருந்த அவர், குறிப்பாகத் தங்கள் மகன் இந்தியக் கலாசாரத்தின் சிறப்புகளைக் காணவேண்டும் என்பதற்காக அழைத்துவந்ததாகக் கூறினார்.

தம் நண்பர் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தது நல்ல அனுபவம் என்றார் ஜூரோங் வெஸ்ட் பகுதியிலிருந்து வந்திருந்த கனிகா, 39.

குறிப்புச் சொற்கள்