அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், உழைப்பாளர் தினமான மே முதல் தேதி, கபடிக் களத்தில் மோதினர்.
‘அட்வான்சர் ஐஎஃப்எம்’, ‘சிங்கப்பூர் கபடி அலையன்ஸ்’ ஆகிய அமைப்புகளுடன் இணைந்து போட்டிக்கு ஏற்பாடு செய்தது ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’.
காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை போட்டி நடைபெற்றது. அதில் மொத்தம் 24 குழுக்கள் பங்கேற்றதாகவும் 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பு குறிப்பிட்டது .
போட்டிக்குப் பின்னர், ஊழியர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இரவு ஒன்பது மணி வரை, பற்பல வேடிக்கை விளையாட்டுகளுக்கும் மேடைப் படைப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக லிஷா அமைப்பின் துணை கௌரவச் செயலாளர் வி.ராமமூர்த்தி கலந்துகொண்டார்.
இந்திய நடிகை நந்திதா ஸ்வேதாவின் சிறப்பு ஆடல் பாடல் அங்கத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
வடுவூர் விளையாட்டுக் குழு, வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
‘எல்சிஎஸ் லயன்ஸ் சிங்கப்பூர்க் குழு’, இரண்டாம் இடத்தையும் ‘அடங்காத் தமிழன் புதுக்கோட்டைக் குழு’, மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
தொடர்புடைய செய்திகள்
தெற்காசிய ஊழியர்களுக்குக் கபடி நன்கு தெரிந்த விளையாட்டு என்பதால் இப்போட்டியை நடத்தியதாக ஏற்பாட்டுக் குழு கூறியது.
மேலும் கபடி போன்ற குழு விளையாட்டுகள், தனிமையைக் குறைக்க, நட்புறவுகளை வலுப்படுத்த, மனநலனைப் பேண உதவும் என்பதாலும் ஏற்பாட்டுக் குழு ஊழியர்களுக்காக இப்போட்டியை நடத்தியது.
எதிர்காலத்தில் இது போன்று ஒரு முறை மட்டும் நிகழும் போட்டியாக மட்டுமல்லாமல், நெடுந்தொடர் கபடி போட்டியை, லீக் முறையில் நடத்தத் திட்டமுள்ளதாகவும் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பு தெரிவித்தது.

