நாற்பது வயது ஆடவரின் வாழ்வில் அவர் எதிர்நோக்கிய காதல் தோல்விகளை மையமாகக் கொண்டு மேடையேறிய “காதல் தோல்விகள் (த ஃபெயில்ட் ரொமேன்சஸ்)” நாடகம் பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தியது.
‘கலா உற்சவம்’ நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக எஸ்பிளனேட் ரிசைட்டல் ஸ்டுடியோவில் நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் நாடகம் மேடையேறியது.
மலேசிய, ஆஸ்திரேலிய நடிகர் கோவின் ரூபன் நடித்த அந்நாடகத்தில் அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அவர் வேடிக்கையான முறையில் மக்களுக்குப் படைத்துள்ளார்.
அவரது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் அவர் சந்தித்த பெண்கள், அவர்களுடனான அவரது உறவு, அவருக்குக் காதலின்மீது இருக்கும் புரிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தது.
இது அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியாக விளங்குவது தமிழ் திரைப்படங்கள் சிறு வயது முதல் அவர்மீது ஏற்படுத்திய தாக்கம். அவரது வாழ்க்கைக் கதையைத் தமிழ் திரைப்படத்தை மேடையில் படைப்பது போல் நாடகமாக அவரும் அட்ரியானோ கோர்டேசேவும் வடிவமைத்துள்ளனர்.
மேடையின் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் காணொளிகள் கச்சிதமான தருணங்களில் நேரடியாக மேடைக்குப் பின்னிருந்த மின்னிலக்க திரையில் ஒளிபரப்பப்பட்டது புத்துணர்ச்சியளித்தது.
திரைப்படங்களைப் போலவே நிகழ்ச்சியின் நடுவே இடம்பெற்ற ஆடல், பாடல் அங்கங்கள் கதையோட்டத்தைப் பாதிக்காமல் நிகழ்ச்சிக்கு வலுசேர்த்தன.
உள்ளூர் புகழ் உதய சௌந்தரியின் நடிப்பு கண்களுக்கு விருந்தாக அமைய, அவரது பாடல்கள் காதுகளுக்கு விருந்தாக அமைந்தன.
கோவினின் விரிவான கதைகூறல், நகைச்சுவை உணர்வு, திறன்மிகு நடிப்பு ஆகியவை நாடகத்தை எந்த இடத்திலும் தொய்வடையச் செய்யாமல் விறுவிறுப்பாக நகரத்தின.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேரடி இசைக்குழு பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மெருகேற்றியது. இசை, ஒலி வடிவமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
கேபேரே பாணியில் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது நாடகத்தை மேலும் ரசிக்க வழிவகுத்தது.
அவரது முதல் காதலில் கதையின் முக்கியமான அங்கம் தொடங்கி அதே காதலியைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அக்காதல் மீண்டும் தோல்வியில் முடிவதைக் கதையின் முடிவாக அமைத்தது செம்மையாக அமைந்தது.
நாடகத்தின் ஓர் அங்கத்தில் கோவின் அவரது இளம் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கையில் அவரது காற்சட்டைகளை அவிழ்ப்பது போன்ற சில எதிர்பாரா செயல்கள் நாடகத்தில் இடம்பெற்றாலும் அவை முகம் சுளிக்கும் அளவிற்கு இல்லை.
தனது வாழ்வில் நடந்த துயரங்களைக் கேளிக்கையான முறையில் படைத்ததன்வழி பார்வையாளர்களின் துயரங்களை மறக்கடித்தார் கோவின்.
