முதல் நாள் நோன்பு: ஒற்றுமையுடன் இணைந்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
ad6a3309-6255-4b54-acca-2e3025ebad57
வெளிநாட்டு ஊழியர்கள் ஏறக்குறைய 250 பேர் ஒன்றுகூடி ஞாயிற்றுக்கிழமை மாலை நோன்பு துறந்தனர்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் ‘உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபடுதல்’ குழுவும் (Assurance, Care and Engagement) இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கமும் (IMSSA) இணைந்து வெளிநாட்டு ஊழியர்கள் 250 பேருக்கான நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) ஏற்பாடு செய்திருந்தன. 

செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் ஜோன் மோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

அனைவரும் கூடி ஒரே உணவுத் தட்டிலிருந்து உண்ணும் ‘சஹான்’ பாணியில் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த ஆண்டு ரமலான் மாதத்தின் முதல் நாளில் நோன்பு துறந்தனர். 

“இன்று இவ்வாறு ஒன்றுகூடி உண்பதால் பகிர்வு, நன்றியுணர்வு, இணைப்பு போன்ற பண்புகளை உணர்கிறோம்,” என்றார் குமாரி மோ. 

இந்த நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 300 பேருக்குக் காலை 5 மணியிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டது என்றார் இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கத்தின் தொண்டூழியர் முகம்மது பைசால் ரஹ்மான், 20. 

“இது போன்ற நிகழ்ச்சிகளில் மற்ற இன, சமயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பது இன நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்றார் அவர். 

நெய்ச்சோறு, கோழிக் குழம்பைத் தவிர ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கப்கேக்’ அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 300 ‘கப்கேக்’களை தன் அண்டை வீட்டார், தொண்டூழியர்களுடன் சேர்ந்து தயாரித்தார் 16 வயது அமைரா பால், 16. 

“இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுபங்கை ஆற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்றார் அமைரா. 

நோன்பு துறப்பு நிகழ்ச்சி மக்ரிப் தொழுகையுடன் நிறைவுற்றது.

17 ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்துவரும் வெளிநாட்டு ஊழியர் உதீன் முகம்மது ஜலால், 43, செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. 

“மற்ற சகோதரர்களுடன் ஒன்றுகூடி நோன்பு மேற்கொள்வது ரமலான் மாதத்தின் உணர்வுபூர்வமான, உண்மையான நோக்கம் என்று நான் நம்புகிறேன்,” என்றார் உதீன்.  

குறிப்புச் சொற்கள்