சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து குருத்துவப் பட்டம் பெற்ற முதல் தமிழ்க் கத்தோலிக்க அருட்தந்தை அலோசியஸ் துரைசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மாலை காலமானார். அவருக்கு வயது 91.
கடந்த சில காலமாக ‘வில்லா ஃபிரான்சிஸ்’ தாதிமை இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த அருட்தந்தை அலோசியஸ், உடல்நலக் குறைவால் காலமானார். ஏறத்தாழ 39 ஆண்டுகளாக தூய லூர்து மாதா தேவாலயத்தில் உதவி அருட்தந்தையாக இறைச்சேவையாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது .
1964ல் அருட்தந்தை பட்டம் பெற்ற அவர் கத்தோலிக்கத் திருச்சபையினர், குறிப்பாக, தமிழ்க் கிறிஸ்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி அவர்களை இறைவழிப்பாதையில் நல்வழிப்படுத்தியவர். ஆண்டுதோறும் நடைபெறும் தூய லூர்துமாதா திருநாளை தொடங்கியவரும் அவரே.
அதேவேளையில், 1984 முதல் 2005 வரையில், தமிழ் பேசுவோருக்கான பேராய ஆணையத்தில் ஆன்மிக இயக்குநர் பதவியும் வகித்து வந்தவர் அருட்தந்தை அலோசியஸ் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.
“வேலைக்காக இந்தியாவிலிருந்து வந்து சிங்கப்பூரில் வசிக்கும் கத்தோலிக்கர்கள் உட்பட பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்து அவர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் அருட்தந்தை அலோசியஸ்,” என்றார் அவரது தங்கையின் மகன் முனைவர் இராஜேஸ்வரன் பூபாலன், 65.
2001 முதல் 2005 வரை உதவி அருட்தந்தையாகப் பணியாற்றிய எஸ்.அருளானந்து, ‘‘சமயப் பாதையில் பயணிக்கும் மக்களுக்கு பேருதவியாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர் காலஞ்சென்ற அருட்தந்தை அலோசியஸ்,” என்று புகழாரம் சூட்டினார்
மறைந்த அருட்தந்தை அலோசியசின் நல்லுடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தூய லூர்து அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை (ஜூலை 13) வரை, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
அவருடைய இறுதிச் சடங்கிற்கான திருப்பலிக் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நண்பகல் 12 மணிக்கு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

