சாங்கி வட்டாரத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மஞ்சள் நாடா ஓட்டம் முதல்முறையாக இவ்வாண்டு காலாங் வட்டாரத்தில் நடந்துள்ளது.
‘இரண்டாம் வாய்ப்புகளுக்கான ஓட்டம்’ என்ற கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஓட்டத்தில் முன்னாள் குற்றவாளிகளின் குடும்பத்தினர், தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோர் முன்னாள் குற்றவாளிகளின் மறு ஒருங்கிணைப்புப் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வண்ணம் துடிப்புடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகச் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் கலந்துகொண்டார்.
“ஓட்டத்தில் பங்கெடுத்த அனைவரின் வருகையும் மஞ்சள் நாடா முயற்சியின் குறிக்கோள்களான முன்னாள் குற்றவாளிகளுக்கு இரண்டாம் வாய்ப்பளித்தல், மரியாதையளித்தல், மறு ஒருங்கிணைப்பை உறுதிசெய்தல் போன்றவற்றைப் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது,” என்றார் அவர்.
ஓட்டத்தின் வழியாகப் பங்கேற்பாளர்களும் நன்கொடையாளர்களும் ‘மஞ்சள் நாடா கேர்ஸ்’, சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கம், சிங்கப்பூர்ப் பின்னலச் சேவை சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு மொத்தம் 259,890 வெள்ளியைத் திரட்டியுள்ளனர்.
கைதிகள், முன்னாள் குற்றவாளிகள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கான ஆதரவுத் திட்டங்களுக்கு அந்நிதி பயன்படுத்தப்படும்.
இவ்வாண்டின் ஓட்டத்துடன் மஞ்சள் நாடா ஓட்டம் இதுவரை மொத்தம் 2.52 மில்லியன் வெள்ளியைத் திரட்டியுள்ளது.
ஓட்டத்தில் பத்துக் கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர் ஓட்டங்களுடன் முதல்முறையாக 888 மீட்டர் பெற்றோர் - பிள்ளை ஓட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூன்று முன்னாள் குற்றவாளிகளின் கதைகளையும் அவர்களது மறுவாழ்வுப் பயணத்தையும் சித்திரிக்கும் வண்ணம் காலாங் வேவ் கடைத்தொகுதியில் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியில் முன்னாள் குற்றவாளிகளின் ஓவியங்கள் இடம்பெற்றதுடன் அவர்கள் செய்த தின்பண்டங்களும் காப்பிகளும் விற்கப்பட்டன.
தமது வாழ்வில் மொத்தம் 32 ஆண்டுகளை வன்முறை, போதைப்பொருள் சார்ந்த குற்றங்கள் காரணமாகச் சிறையில் செலவிட்ட 55 வயது அண்ணாதுரை பெரியசாமியின் பயணம் கண்காட்சியில் இடம்பெற்றது.
“நான் எனது 10ஆம் வயதிலேயே புகை, குடிப் பழக்கங்களுக்கு ஆளாகிவிட்டேன். அதன் பின்பு வாழ்க்கை திசைதிரும்பி போனது. ஒவ்வொரு முறையும் என் குடும்பத்தாரிடம் நான் திருந்தி வாழ்வேன் என்று கூறி சிறையிலிருந்து வெளிவருகையில் மீண்டும் சில மாதங்களில் குற்றம் செய்து சிறைக்குள் சென்றுவிடுவேன்.
“2018லிருந்து 2023 வரை நீடித்த எனது கடைசித் தண்டனைக் காலத்தில் திருந்தி வாழ வேண்டுமென தீர்க்கமாக முடிவெடுத்தேன். அதற்கு எனக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது ‘மஞ்சள் நாடா கேர்ஸ்’ அமைப்பின் ஆண்கள் ஆதரவுக் குழு.
“அக்குழு வாயிலாகத்தான் முன்னனுபவம் ஏதுமில்லையெனினும் பரிஸ்டா வேலையைப் பெற்று தற்போது உணவங்காடி மூத்த உதவியாளராகப் பணிபுரிகிறேன்,” என்றார் அவர்.
முன்னாள் குற்றவாளிகளின் மறு ஒருங்கிணைப்பில் மக்களாலும் முக்கியப் பங்குவகிக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வோட்டம் பெரிதளவு உதவுகிறது என்றார் ஓட்டத்தின் பாதுகாப்புத் தலைவரான துணைக் கண்காணிப்பாளர் வேணு அர்ஷ்.
“இத்தகைய முயற்சிகள் வாயிலாக விழிப்புணர்வு, ஏற்புத்தன்மை, செயல்பாடு ஆகியவை ஒன்றிணைகின்றன. மாற்றம் சாத்தியம் என்பதை மக்கள் புரிந்துகொண்டு முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைய அவர்கள் உதவுவது அவசியம்,” என்றார் அவர்.
