இவ்வாண்டு சிங்கப்பூர் இளையர் மன்றத்தின் முக்கிய அம்சமாகச் சிங்கப்பூர் இளையர் திட்டம் தொடக்கம் காணவுள்ளது.
இளையர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற உதவும் ஐந்தாண்டு வரைபடமாக அத்திட்டம் விளங்கும்.
தேசிய இளையர் மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சி சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
சிங்கப்பூர் இளையர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாட இளையர்கள், அரசாங்கம், சமூகப் பங்காளிகள் ஆகியோரை இந்நிகழ்ச்சி ஒன்றிணைக்கிறது.
தொழில்துறைகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த நேரலை வலையொலி, தேநீர் அமர்வு, உள்ளூர் நிறுவனங்களின் பொருள்களைக் காட்சிப்படுத்தும் சந்தை எனப் பல சுவாரசியமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொள்வார்.
அவரோடு, கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, அத்துறையின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் ஆகியோரும் கலந்துகொள்வர்.
சிங்கப்பூர் இளையர் திட்டத்தை உருவாக்குவதற்கான தொடர் கலந்துரையாடல்கள் சென்ற ஆண்டு எஸ்ஜி60யின்போது தொடங்கின.
அதில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளையர்கள், தொழில்துறை, நல்வாழ்வு, உறவுகள், சமூகத் தொண்டு போன்ற தலைப்புகளில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் எதிர்காலம்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் வேகமாக மாறிவரும் வேலைச்சந்தை குறித்து இளையர்களில் பலருக்குக் கவலைகள் இருப்பது ஆய்வுகள்மூலம் தெரியவந்தது.
மேலும், அவர்கள் ஆழமான நட்புறவு, வலுவான குடும்பப் பிணைப்பு, சிறந்த மனநலம் ஆகியவற்றையும் விரும்புகின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்கள் மன்றத்தில் அறிவிக்கப்படும்.
மன்றத்தில் பங்கேற்பாளர்கள் பலவிதமான நடவடிக்கைகளிலும் பங்குபெறலாம்.
உள்ளூர்ப் படைப்பாளர்கள் நடத்தும் நேரலை வலையொலியின்மூலம் தொழில்துறைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற தலைப்புகள் ஆராயப்படும்.
தேநீர் வல்லுநர் ஒருவரின் வழிகாட்டலில் நடைபெறும் அமர்வில் தேநீர்க் கலை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
வருகையாளர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட சந்தையைப் பார்வையிடலாம். அத்துடன், பொது, தனியார், சமூகத் துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் அமைக்கும் கிட்டத்தட்ட 30 சாவடிகளுக்கும் சென்று வரலாம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் go.gov.sg/sgyouthforum2026-signup என்ற இணையப்பக்கம் வழியாகப் பதிவுசெய்யலாம்.

