இளையர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், சமூகத்தோடு இணைந்தவர்களாகவும் உருவெடுக்க உதவும் நோக்கில், எஸ்ஜி இளையர் திட்டம் (SG Youth Plan) எனும் புதிய ஐந்தாண்டுத் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று (ஜூலை 25) நடைபெற்ற ‘எஸ்ஜி இளையர் மன்றத்தில்’ (SG Youth Forum) அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 15 முதல் 35 வயது வரையிலான ஏறத்தாழ 500,000 இளையர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் இணைந்து, 60,000க்கும் மேற்பட்ட இளையர்களுடன் கலந்துரையாடி இத்திட்டத்தை வகுத்துள்ளன. அவர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு சிறப்பு முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இளையர்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு
இளையர்கள் முன்னெடுக்கும் ஏறத்தாழ 3,000 சமூகத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய இளையர் மன்றம் அடுத்த ஐந்தாண்டுகளில் $20 மில்லியனை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு இந்நிதி உதவும்.
“இளையர்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை அரசாங்கம் ஒதுக்குகிறது என்பதைக் கேட்டபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது,” என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தொடர்புகள் துறையில் பயிலும் 22 வயது ராஜசேகரன் கீர்த்திகா தெரிவித்தார்.
இளையர்களின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழிகாட்டியாக விளங்கும் பணி அனுபவம்
ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அதை நேரில் அனுபவித்து அறிவதற்கான வாய்ப்புகளும் இளையர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அரசுத் துறை, நிறுவனப் பங்காளிகள், பொதுத்துறை அமைப்புகள் இணைந்து, 2030ஆம் ஆண்டிற்குள் 20,000 வழிகாட்டுதல் வாய்ப்புகளையும், 30,000 பணி அனுபவப் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளன. இதற்காக வழிகாட்டிகளின் எண்ணிக்கை 1,000லிருந்து 5,000ஆக உயர்த்தப்படும்.
“படிப்பை முடித்த பிறகு எந்த வேலைக்குச் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இம்முயற்சி தெளிவைத் தரும். பிடித்திருந்தால் அந்தத் துறையிலேயே தொடர்ந்து செயல்படலாம்,” என்கிறார் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் பயிலும் 24 வயது ரிஃபாய்.
தவறான முடிவை எடுத்தாலும் அது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்றும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க இத்தகைய முயற்சிகள் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆசிய நாடுகளில் வெளிநாட்டு அனுபவம்
வரும் 2030க்குள் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆசியான் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ளும் வெளிநாட்டு உள்ளகப் பயிற்சிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 3,000ஆக இரட்டிப்பாக்கப்படும்.
“சிங்கப்பூரைத் தாண்டி மற்ற ஆசியான் நாடுகளில் உள்ளவர்களுடன் பழகும்போது, பல்வேறு தரப்பினரின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ள முடியும். அதனடிப்படையில் உலகளாவிய சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வுகளை உருவாக்க முடியும்,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பயிலும் 23 வயது துரைக்குமரன் பகிர்ந்து கொண்டார்.
தன்னிச்சையாக வாழ்வதற்கான வாய்ப்பு
21 முதல் 35 வயதுடைய சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான வாடகையில் 100க்கும் மேற்பட்ட தங்குமிட வசதிகளை இரண்டு தனியார் நிறுவனங்கள் வழங்கவுள்ளன.
“சுதந்திரமாக வாழும் வயதில் நான் இருப்பதால், இத்திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது,” என்றார் 22 வயது ச.சுருதி. இளையர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து இதுபோன்ற புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துவது பாராட்டுக்குரியது என்றும் அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சி, உலகளாவிய அரசியல் பதற்றங்கள் போன்ற பல சவால்களுக்கு இடையே, இளையர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல இந்த ஐந்தாண்டுத் திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கமே இளையர்களுக்கு எது நல்லது என்று முடிவுசெய்யாமல், அவர்களிடமே தேவைகளைக் கேட்டறிந்து உண்மையிலேயே பயன்படக்கூடிய திட்டங்களை உருவாக்குவது வரவேற்கத்தக்கது என்று காவியதர்ஷினி, 20, கூறினார்.

