தன் தந்தையார் காற்பந்து விளையாட்டுமீது வைத்திருந்த பற்றைத் தன் பிள்ளைகளுக்கும் கொண்டு சென்றுள்ளார் கார்த்திகேயன் ஜானகிராமன், 40.
சிங்கப்பூரின் ஆகத் திறன்மிக்க இளம் காற்பந்தாட்டக்காரர்களைப் பேணி வளர்க்கும் தேசிய இளையர் மேம்பாட்டு நிலையத்தில் சென்ற ஜூன் மாதம் முதல் பயிற்சி பெற்றுவருகிறார் 12 வயது மகள் காவ்யா. அவர் சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்திலும் மூன்று ஆண்டுகளாக விளையாடிவருகிறார்.
பத்து வயது மகன் கதிர், ஷூட் காற்பந்துப் பயிலகத்திலும் ஆக்டிவ்எஸ்ஜி காற்பந்துப் பயிலகத்திலும் பயிற்சி பெற்றுவருகிறார்.
தந்தை விதைத்த பற்று
“என் தந்தை ஜானகிராமன் பர்மாவில் பிறந்தவர். அங்கு காற்பந்து மிகவும் பிரபலமானது. அவர் வேலைக்காக இந்தியா சென்றபின் காற்பந்து விளையாடுவதற்காகவே மிதிவண்டியில் 10-15 கிலோமீட்டர் செல்வார்,” என்றார் திரு கார்த்திகேயன்.
கார்த்திகேயனுக்கும் காற்பந்தில் நாட்டம் இருந்தாலும் பள்ளியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்தபின் இங்கு காற்பந்துக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு வியந்தார். அவரும் தம் சக ஊழியர்களுடன் இணைந்து அவ்வப்போது காற்பந்து விளையாடினார். அதனால், காற்பந்தின் பயன்கள் அவருக்கு நன்கு புரிந்தன.
“என் பிள்ளைகள் சிறுவயதிலிருக்கும்போதே அவர்கள் பிறருடன் குழுவாக விளையாடக் கற்றுக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என விரும்பினேன்,” என்று திரு கார்த்திகேயன் சொன்னார்.
அதனால் தன் பிள்ளைகளுக்குக் காற்பந்தை அறிமுகப்படுத்திய திரு கார்த்திகேயன், அவர்கள் அதைத்தான் விளையாட வேண்டும் என வற்புறுத்தவில்லை.
காற்பந்தில் அவர்களுக்கு நாட்டம் இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைப்பதற்காகப் பெண்டிமியர் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ காற்பந்துப் பயிலகத்தில் அவர்களைச் சேர்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகளின் வளர்ச்சியில் ஈடுபாடு
வாரத்தில் நான்கு நாள்கள் திரு கார்த்திகேயன் - திருவாட்டி கவிதா தம்பதி, தவறாமல் தங்களின் இரு பிள்ளைகளையும் காற்பந்துப் பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்றனர். போட்டிகளின்போதும் ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் பயிற்சிகளின்போதும், அவர்களும் அங்கேயே இருந்து பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்து ஊக்குவித்தனர்.
அங்குள்ள சக பெற்றோர்களிடம் பேசி, புதிய விஷயங்களைக் கற்று தம் பிள்ளைகளுக்கும் அவர்கள் கற்பித்தனர்.
“ஒவ்வொரு பயிற்சி அல்லது போட்டிக்குப் பின்பும் ‘இன்று என்ன புதிதாகக் கற்றுக்கொண்டீர்கள்? என்னென்ன திறன்களை வளர்த்தீர்கள்?’ எனக் கேட்பேன். அதனால் தம் வளர்ச்சியில் பெற்றோருக்கும் ஈடுபாடு உள்ளது என் பிள்ளைகளுக்கும் தெரியும். அவர்களும் மனந்திறந்து தமது வெற்றிகள், சவால்களைப் பகிர்ந்தனர்,” என்றார் திரு கார்த்திகேயன்.
நிதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திகேயன், தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதற்காக அதிகாலையில் எழுந்து அலுவலக வேலைகளைச் செய்து முடித்துவிடுவார்.
தந்தையின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் பிள்ளைகள்
“என் அப்பா எங்களுக்காக நிறையத் தியாகங்கள் செய்தார். அவர் என்ன சம்பாதித்தாலும் தனக்காக அல்லாமல் எங்களுக்காகவே செலவிடுவார். நிறைய கற்றுக்கொடுப்பார். அவரைப் பார்த்துத்தான் பிள்ளைகளின் முதல் முன்மாதிரி பெற்றோர் என்பதை நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் திரு கார்த்திகேயன்.
தன் பிள்ளைகள் தோல்வியைச் சந்திக்கும்போது காற்பந்தைக் கைவிடலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றினால், “வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்திப்பீர்கள். அப்பொழுதும் அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வீர்களா?,” எனக் கேட்பார் கார்த்திகேயன்.
காவ்யாவுக்கு இவ்வாண்டு தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகள் இருப்பினும், காற்பந்தைக் கைவிட்டுவிட்டுக் கல்வியில் கவனம் செலுத்த சொல்லவில்லைப் பெற்றோர்.
பெற்றோரும் பிள்ளைகளும் செய்த விடாமுயற்சி கைகூடியது. பெண்டிமியர் ஆக்டிவ்எஸ்ஜி காற்பந்துப் பயிலகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான முன்னாள் தேசியக் காற்பந்து வீரர் ஸ்டீவன் டான், கதிரையும் காவ்யாவையும் ஷூட் காற்பந்துப் பயிலகம், சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் ஆகியவற்றுக்கு அறிமுகப்படுத்தினார். அதனால், இன்று காற்பந்தில் இருவரும் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளனர். அதற்கு விதை விதைத்தது தம் பெற்றோர்தான் என்பதை அவர்கள் மறக்கவில்லை.
“நான் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் மீண்டெழுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் தந்தைதான்,” என்கிறார் கதிர்.
“என் தந்தை நான் காற்பந்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆதரவு தந்தார். கடினமான சூழலிலும் முயற்சியைக் கைவிடாமலிருக்க ஊக்குவிப்பார்,” என்கிறார் காவ்யா.

