வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்துகாக, 21 வயதாகும் கணேஷ் (உண்மை பெயரன்று) கடந்த ஆண்டு மே மாதம் சிறை வாசலை எட்டிப் பார்க்க வேண்டிய சூழல்.
இந்த ஆண்டு மே மாதத்தில் சிறையிலிருந்து விடுதலை பெறவிருக்கும் இவர், தமக்கு காற்பந்து என்றால் அலாதிப் பிரியம் என்று தமிழ் முரசிடம் பகிர்ந்தார்.
குறிப்பாக, பள்ளிக் காலத்தில் தம் நண்பர்களுடன் காற்பந்து விளையாடிய நாள்களை நினைவுகூர்ந்த கணேஷ், அதை நினைத்து இப்போது ஏங்கவும் செய்கிறார்.
தம் பெற்றோர் மணவிலக்கு பெற்றதைத் தொடர்ந்து தம் தந்தையுடனும் பாட்டியுடனும் கணேஷ் வசித்து வருகிறார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற வேட்கை கொண்டிருக்கும் இவர், சிறையில் காற்பந்து மூலம் நல்வழி கண்ட பல கைதிகளில் ஒருவர்.
சிறையில் தன்னைப் போன்ற 21 வயதும் அதற்கும் குறைவான வயதுடைய இளம் கைதிகள் காற்பந்து மூலம் மறுவாழ்வு பெற வழியமைக்கும் திட்டம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கணேஷ் அதற்கு உடனே ஆர்வம் தெரிவித்தார்.
கணேஷ் உட்பட மொத்தம் 16 கைதிகள் பங்கேற்ற அந்தக் காற்பந்துத் திட்டம், காற்பந்தை வேறொரு கண்ணோட்டத்தில் அவர்களைப் பார்க்க வைத்தது.
விளையாட்டாக இருப்பதற்கு அப்பாற்பட்டு வாழ்க்கை பண்புநலன்களையும் கைதிகளுக்கு அத்திட்டம் புகுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
ஆறு வாரங்கள் இடம்பெற்ற அத்திட்டம், கைதிகள் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும் அவசியமான, மாற்றத்தக்க காற்பந்து பயிற்சித் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணையவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தலைமைத்துவம், வழிகாட்டியாக இருப்பது, கட்டொழுங்கு போன்றவற்றை நான் கற்றுக்கொண்டேன். இன்னும் சில மாதங்களில் விடுதலை பெறவிருக்கும் எனக்கு இத்திட்டம் வழித்துணையாக அமைந்தது,” என்றார் கணேஷ்.
தி யங் லயன்ஸ், டீவ்ன்னிங் புரோஜெக்ட், ஃபிபா அறநிறுவனம், சிங்கப்பூர் சிறைத்துறை ஆகிய அமைப்புகள் கைகோத்து முதல் முறையாக இத்திட்டத்தை தென்கிழக்காசியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரில் சிறைவாசிகளுக்குக் காற்பந்து சார்ந்த மறுவாழ்வை வழங்குவதற்காக உள்ளூர் காற்பந்து மன்றம், நிறுவனப் பங்காளிகள், உலகளாவிய தொண்டு நிறுவனங்கள் இடையே உருவான தென்கிழக்காசியாவின் முதல் கூட்டுமுயற்சியாக இது அமைகிறது.
கைதிகள் காற்பந்துப் பயிற்சித் திறன்களையும் கற்றுக்கொண்டதால் அவர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு காற்பந்துப் பயிற்சியாளராவதை வாழ்க்கைத்தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்த ஆண்டு விளையாட்டுத் துறையில் உயர் ‘நைட்டெக்’ பயிலவிருக்கிறார் கணேஷ்.
டிஎம்1 கழகத்தில் காற்பந்துத் திட்டத்தில் பங்கேற்ற கைதிகளின் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) இடம்பெற்றது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கைதிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
“சமூகங்கள் ஒன்றிணையும்போது மாற்றங்கள் இடம்பெறும். இத்திட்டம் கைதிகளுக்குத் தேவையான பண்புகளை கற்றுத் தந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் சிறையிலிருந்து வெளியேறும்போது சிறந்த வாய்ப்புகளைத் தேட இது ஏதுவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார் டாக்டர் ஃபைஷால்.
கைதிகளுக்கு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் அடித்தளப் பயிற்றுவிப்பாளர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மூத்த கைதிகள் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் விரிவாக்கம் காணவுள்ளது.

