வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையே இணக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் ‘ஹெல்த்சர்வ்’ அமைப்பு முதன்முறையாகக் காற்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பேணும் அமைப்புகளில் ஒன்றான அந்த அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்றது.
கோவனில் அமைந்துள்ள ‘கிக் ஆஃப்’ விளையாட்டு நிலையத்தில் நடைபெற்ற நட்புரீதியான அந்தப் போட்டியில் 64 சிங்கப்பூரர்களும் 64 வெளிநாட்டு ஊழியர்களும் 16 குழுக்களாக கூரையிட்ட திடலில் மோதின.
முன்னாள் காற்பந்து வீரர்களும் உள்ளூர்ப் பிரபலங்களும் பங்கேற்ற சிறப்புக் காற்பந்தாட்டமும் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
அர்த்தமுள்ள நடவடிக்கைகளின் மூலம் சமூகங்களை இணைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று ஹெல்த்சர்வ் அமைப்பு தெரிவித்தது.
“கடந்த இருபது ஆண்டுகளாக நம் சகோதர சகோதரிகளான வெளிநாட்டு ஊழியர்கள் ஹெல்த்சர்வ் அமைப்பின்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு அமைப்பு பெருமிதம் கொள்கிறது,” என்று அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் குவான் கூறினார்.
“தங்கள் நாடுகளைவிட்டு இங்கு வந்துள்ள அவர்களுக்கு உதவி செய்வதுடன், அவர்களை நம் சமூகத்தில் இணைத்துக்கொள்வதை அமைப்பு முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது,” என்றார் அவர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களும் துடிப்புடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டதாக ஹெல்த்சர்வ் அமைப்பு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் (2026) இரண்டாம் பாதியில், ‘பிரிட்ஜிங் கம்யூனிட்டிஸ்’ என்ற முயற்சியின்கீழ், 300 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஹெல்த்சர்வ் அமைப்பு தெரிவித்தது.
அத்துடன் சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த பல நடைப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைப்பு குறிப்பிட்டது.
வருங்காலத்தில் பெண் வெளிநாட்டு ஊழியர்களின் நலனிலும் அந்த அமைப்பு அதிக கவனம் செலுத்தவுள்ளது.

