ஈராண்டுகளாக இந்தியாவுக்குத் திரும்பாமல் தம் மனைவி, பிள்ளைகளைவிட்டுப் பிரிந்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு இரவு உணவும் பணமும் கொடுத்து உதவியுள்ளது சிங்கப்பூர் உணவகம் ஒன்று. அது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகிறது.
அக்காணொளியில், பாய லேபார் பகுதியில் சாலையோரம் அமர்ந்திருக்கும் வெளிநாட்டு ஊழியரிடம் சென்று ஓர் ஆடவர், பேருந்துக் கட்டணத்திற்காக ஒரு வெள்ளி தர முடியுமா என உதவி கேட்கிறார்.
வெளிநாட்டு ஊழியர் தம்மிடம் இரண்டு வெள்ளிதான் இருப்பதாகக் கூறி, அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
“நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு தீபாவளிக் கொண்டாடப் போகிறீர்களா?” என அந்த ஆடவர் கேட்க, தாம் ஈராண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றுவதாகவும், தம் குடும்பத்தைப் பார்க்க இன்னும் ஒருமுறைகூட ஊர் திரும்பாததாகவும் கூறினார் அந்த வெளிநாட்டு ஊழியர்.
அப்போது ஆடவர், தமக்கு உண்மையில் இரண்டு வெள்ளி தேவையில்லை என்றும், தம் கையிலிருக்கும் நண்டு நூடுல்ஸ் அந்த ஊழியருக்குத்தான் என்றும் சொன்னார்.
அதோடு, ஊழியரிடம் 100 வெள்ளியையும் பணமாகக் கொடுத்தார்.
ஊழியர் தயங்கினாலும், தயங்காமல் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறினார்.
“இதை வைத்து நீங்கள் தீபாவளிக் கொண்டாடுங்கள்,” என அவர் கூறிச் சென்றுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
காணொளியின் முடிவில், அந்த நிறுவனம் தீபாவளிக்காக வழங்கும் சிறப்புச் சலுகை குறித்த விவரம் இடம்பெற்றது.
“என் உணவகத்திற்கு நிறைய முறை இந்திய முதலாளிகள் தங்களின் ஊழியர்களை அழைத்துவந்துள்ளனர். தீபாவளி நெருங்குவதால் இது ஓர் அர்த்தமுள்ள செயலாக இருக்கும் என எங்களுக்குத் தோன்றியது.
“இது போல கூடுதலாகச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் அந்நிறுவனத்தின் 27 வயது இணை நிறுவனர் டாமி பாங்.
காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலரும் வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைப் பாராட்டினர். இந்த நற்செயலுக்காக நிறுவனத்துக்குப் பாராட்டு மழையும் குவிந்துள்ளது.
“விளம்பரத்துக்காக இதைச் செய்தீர்களோ இல்லையோ, நீங்கள் ஒரு பரிவான செயலைச் செய்துள்ளீர்கள். உங்கள் குரலில் உண்மை தெரிந்தது. உங்கள் வர்த்தகத்துக்கு என் வாழ்த்துகள்,” என ஓர் இணைய வாசகர் பதிவிட்டார்.
“தங்கள் குடும்பத்தைப் பார்த்திராமல் தியாகம் செய்து, குடும்பத்துக்கு நல்வாழ்வை அமைக்கப் பாடுபடும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றுமே பாதுகாப்பாக, ஆசிர்வாதம் பெற்று இருக்கவேண்டும்,” என மற்றொருவர் பதிவுசெய்தார்.
‘பணத்தை சேமித்து ஊருக்கு அனுப்பவேண்டும்’
வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தங்களது ஊருக்குத் திரும்புவதற்காகப் பணம் செலவழிக்க முடியாமல் இங்கேயே இருப்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மைதான்.
தமிழ் முரசு கேம்பெல் லேனில் நடத்திய நேர்காணலிலும் இக்கருத்தை வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்தனர்.
“ஊருக்குப் போய் கொண்டாடலாம் என நினைத்தோம்; ஆனால் முடியவில்லை. பரவாயில்லை, சிங்கப்பூரில் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் வேதாரண்யம் எனும் ஊரைச் சேர்ந்த அன்பழகன் வீர்பாண்டியன்.
எனினும், தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் நிறைய நடவடிக்கைகள் நடப்பதால் தீபாவளியை நன்கு கொண்டாட முடிவதாகக் கூறினார் அரியலூர் மாவட்டத்தின் பழனிவேல்.
“இதுதான் சிங்கப்பூரில் என் முதல் தீபாவளி. எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் லிட்டில் இந்தியா வந்தால் குதூகலமாக இருக்கிறது,” என்றார் கலையரசன்.

