தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புரட்டாசி விருந்தில் உளம் நிறைய உணவுண்ட வெளிநாட்டு ஊழியர்கள்

3 mins read
ae4a8001-7677-4492-ba68-80a834cbb4c1
புரட்டாசி விருந்தில் உணவருந்தும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: சுந்தர நடராஜ்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் தலைமைச் சமையற்காரர் நரசிம்மன் மணவாளன், 55, சனிக்கிழமை (அக்டோபர் 4) பிற்பகல் 3 மணியிலிருந்தே மறுநாள் நடக்கவிருக்கும் புரட்டாசி அன்னதான விருந்திற்கு முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

அவருடன் தொண்டூழியர்கள் கிட்டத்தட்ட 20 பேர் ஒன்றிணைந்து காய்கறிகளை வெட்டுவது, பேரளவிலான சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தயார்செய்வது எனச் சமையலறை பரபரப்பாக இருந்தது.

தொண்டூழியர்கள் பலர் இணைந்து காய்கறிகளை வெட்டுகின்றனர்.
தொண்டூழியர்கள் பலர் இணைந்து காய்கறிகளை வெட்டுகின்றனர். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

பின்னர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) அதிகாலை 2 மணியிலிருந்து சமையல் செய்யத் தொடங்கி காலை 8 மணியளவில் வேலைகள் முடிந்தன.

இந்து அறக்கட்டளை வாரியம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்புப் புரட்டாசி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விருந்தில் வந்தோருக்கு வாழையிலையில் காய்கறி, குழம்பு, அப்பளம் என 19 விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

சென்ற ஆண்டு நடைபெற்ற விருந்தில் வெளிநாட்டு ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த ஆண்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப காரக் குழம்பும் பரிமாறப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் என ஏறத்தாழ 4,000 பேர் விருந்தில் கலந்துகொண்டனர்.

ஊழியர்கள் பலர் சனிக்கிழமைகளில் வேலை பார்ப்பதால் புரட்டாசி விருந்து அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

காலை 9.30 மணிக்குமேல் தொடங்கிய விருந்து நண்பகல் 12 மணிக்குமேல் ஊழியர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சேவா குழுவின் தலைவர் சுசீலா கணேசன், 54, இந்த விருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாரியம் காட்ட விரும்பும் அன்புப் பரிமாறுதலின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

“தொண்டூழியர்கள் கிட்டத்தட்ட 250 பேரின் உதவியின்றி இந்த விருந்து சிறப்பாக நடைபெற்றிருக்க முடியாது. வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டு நிர்மாணத்திற்குக் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் துணைநிற்கிறோம் என்பதை உணர்த்த இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு எந்தெந்த உணவு வகைகள் பிடிக்கும் என்று நாங்கள் கேட்டறிந்து இந்த விருந்திற்கு ஏற்பாடுசெய்தோம்,” என்றார் சுசீலா.

ஞாயிற்றுக்கிழமை காலை வேளையாக இருந்தாலும் உன்னத நோக்கத்திற்காக மகிழ்ச்சியுடன் தொண்டூழியம் புரிந்தார் சுபிக்‌ஷா பெரியகருப்பன், 19.

“சென்றாண்டு நான் தொண்டூழியம் புரியும் வாய்ப்பைத் தவறவிட்டேன். அதனால், இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆயிரக்கணக்கானோருக்கு சமைத்து பரிமாறுவது எளிதன்று. இத்தகைய சமூகச் சேவையில் ஈடுபடும்போது மக்களைப் பற்றி நன்கு அறிந்து என் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது,” என்றார் அவர்.

சனிக்கிழமை மாலையிலிருந்து விருந்திற்கு உதவத் தொடங்கிய சுப்பையா ஐயப்பன், 43, ஞாயிற்றுக்கிழமை உணவு பரிமாறுவதில் ஈடுபட்டார்.

இத்தகைய ஏற்பாடுகள் வெளிநாட்டு ஊழியர்கள் மனநிறைவுடன் புரட்டாசி வழிபாடு செய்ய வழியமைப்பதாகத் திரு ஐயப்பன் தெரிவித்தார்.

“சென்றாண்டைவிட இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக இருந்தது. என் நண்பர்களுடன் காலை 9 மணிக்குக் கோவிலுக்கு வந்து தரிசனம் பெற்ற பின்னர் விருந்தில் கலந்துகொள்ள வந்தோம். சில ஊழியர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதே கடினமாக இருக்கும் நிலையில் இந்த ஏற்பாடு மிகச் சிறப்பாக உள்ளது,” என்று இல்லப் பணிப்பெண் லட்சுமி, 38, சொன்னார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் புரட்டாசி தரிசனம் பெற பெருமாள் கோவிலுக்கு வந்துவிடுவார் வெளிநாட்டு ஊழியர் ராஜு ராஜ்குமார், 35.

“இத்தகைய சுவையான வாழையிலை விருந்தை எங்களைப் போன்ற ஊழியர்கள் அடிக்கடி சாப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. கோவில் எங்களுக்காக ஏற்பாடு செய்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் பொறியியல் துறையில் வேலை செய்யும் ராஜ்குமார்.

குறிப்புச் சொற்கள்