தொலைநோக்குப் பார்வையும் சீரிய தலைமைத்துவமும்

தொலைநோக்குப் பார்வையும் சீரிய தலைமைத்துவமும்

2 mins read
057c3e9d-b464-4e9c-b589-d490771a406a
(இடமிருந்து) ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முத்துக்குமரன் செல்வரத்தினம், நிர்வாக இயக்குநர் செல்வரத்தினம் முத்தையா சுப்பையா, பொது மேலாளர் ஹேமமாலினி செல்வரத்தினம். - படம்: எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்
Google News Preferred Icon

ஒரு பாரம்பரியக் குடும்பத் தொழிலைத் தலைமுறைகளைக் கடந்து வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்குத் திறமை மட்டும் போதாது; மிகுந்த நிதானமும் கூர்மையான தொலைநோக்குப் பார்வையும் தேவை.

இதற்கு நற்சான்றாய் விளங்குகிறார் ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செல்வரத்தினம் முத்தையா சுப்பையா.

ஆகஸ்ட் 16ஆம் தேதி தமது 80வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் திரு செல்வரத்தினம், 1974ஆம் ஆண்டில் குடும்பத் தொழிலில் இணைந்தார். பொத்தோங் பாசிரில் உள்ள மெய்யப்ப செட்டியார் சாலையில் எண்ணெய் ஆலையும் வீடும் அருகருகே அமைந்திருந்தன. அங்குதான் திரு செல்வரத்தினம் வளர்ந்தார்.

அக்காலத்தில் மாட்டு வண்டிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த எண்ணெய் ஆலைத் தொழிலை, நவீன இயந்திரங்களைக் கொண்டு நடத்தும் நிலைக்கு மாற்றி அமைத்ததில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

“எந்த ஒரு முக்கிய வணிக முடிவாக இருந்தாலும் அவசரப்படாமல் ஆழமாகச் சிந்தித்து, நுணுக்கமான விவரங்களையும் கவனித்துச் செயல்படுத்துவதே அவரது பாணி,” என்று தம் தந்தையாரின் தலைமைத்துவப் பண்பு குறித்து நினைவுகூர்கிறார் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் திரு செல்வரத்தினத்தின் மகனுமான திரு முத்துக்குமரன் செல்வரத்தினம், 45.

தம் மகன் முத்துக்குமரனை அமெரிக்காவின் புகழ்பெற்ற மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்து, உயர்கல்விக்குப் பின் குடும்பத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் பொறுப்புகளை ஒப்படைத்ததையே தமது வணிகப் பயணத்தில் தாம் செய்த மிக முக்கியச் சாதனை எனத் திரு செல்வரத்தினம் பெருமிதத்துடன் தமிழ் முரசிடம் கூறினார்.

தொடக்கத்தில் தந்தை-மகன் இடையிலான உறவு மிகவும் கண்டிப்பானதாக இருந்தாலும், கடந்த 18 ஆண்டுகளாக இருவரும் இணைந்து பணியாற்றி வரும் சூழலில், புதிய முயற்சிகளைச் சுதந்திரமாக எடுக்க தம் மகனுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் திரு செல்வரத்தினம்.

அதேபோல, சுவீடன் தூதரகத்தில் வர்த்தக அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இவரது மகள் திருவாட்டி ஹேமமாலினி, 40, கடந்த ஆண்டு குடும்பத் தொழிலில் இணைந்து தற்போது பொது மேலாளராக நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

குடும்ப உறுப்பினர்களின் இந்தப் பிணைப்பு, ‘எஸ்பி. முத்தையா அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் 120 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

வணிகத்தில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் மிக அவசியம் என்பதைத் தம் வாழ்நாளின் முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள திரு செல்வரத்தினத்தின் இந்த அறநெறி, தலைமுறைகள் கடந்தும் இந்நிறுவனத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கும்.

குறிப்புச் சொற்கள்
வணிகம்பிறந்தநாள்தலைமைத்துவம்