வந்த நோயை வென்றவருக்கு அந்த நோயைத் தணிக்கும் நிபுணராக ஆசை

வந்த நோயை வென்றவருக்கு அந்த நோயைத் தணிக்கும் நிபுணராக ஆசை

4 mins read
7f0b5a1e-8040-43b6-8fd8-747766e60d1f
பர்கிட் லிம்போமா நோயால் பாதிக்கப்பட்ட அஷ்வின் (நடுவில்) சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் குணமடைந்து, தற்போது புற்றுநோயியல் நிபுணர் ஆக வேண்டுமென்ற கனவுடன் படித்து வருகிறார். - படம்: திரு ஆனந்தகுமார்

தமது 14 ஆண்டுகால வாழ்க்கையில் மருத்துவமனைக்கு அரிதாகச் சென்ற ஆ.அஷ்வின் குமார், சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியின் பெரும்பகுதியை மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது.

அவரது நண்பர்கள் ஓடியாடி விளையாடிய நிலையில், அவர் உலகின் இரண்டாம் ஆகப்பெரிய உயிர்க்கொல்லியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

குடும்பத்துடன் கேமரூன் ஹைலண்ட்சுக்குச் சென்ற ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணம் சென்று வந்த பின்னர், அவருக்குப் பர்கிட் லிம்போமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நோயைக் கண்டறிதல்

அஷ்வினுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கழுத்தில் ஒரு கட்டி வளரத் தொடங்கியது. ஆனால், அது சாதாரண சைனஸ் கட்டி என்று முதலில் அலட்சியமாக இருந்துவிட்டதாக அவரது தந்தை ஆனந்தகுமார் குறிப்பிட்டார்.

“என் மனைவிக்கும் சிறு வயதில் இத்தகைய கட்டிகள் உருவாகி, பின் மறைந்ததால், நாங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அதுவே நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

சுற்றுலாப் பயணத்தின்போது, வாகன ஓட்டுநர் ஒருவர் அஷ்வினின் தாயாரிடம் அக்கட்டி பார்க்கச் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும் மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் ஆலோசனை வழங்கினார்.

கேமரூன் ஹைலண்ட்சுக்குச் சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த வாகன ஓட்டுநர் ஒருவர் அஷ்வினின் கழுத்துக்கட்டி ஆபத்தானதாகத் தெரிவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கேமரூன் ஹைலண்ட்சுக்குச் சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த வாகன ஓட்டுநர் ஒருவர் அஷ்வினின் கழுத்துக்கட்டி ஆபத்தானதாகத் தெரிவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். - படம்: திரு ஆனந்தகுமார்

பின்னர், பலதுறை மருந்தகத்திற்குச் சென்ற அஷ்வினிடமும் அவரது தாயார், அனுஷியாவிடமும் மருத்துவர் உடனடியாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

“அது என் வாழ்வின் ஆகக் கொடூரமான நாள். மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத நாள் அது,” என்று கண்கலங்கினார் ஆனந்தகுமார்.

“மருத்துவர்கள் எங்களிடம் அந்த துயரச் செய்தியைக் கூறியபோது ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. செய்தியை ஏற்க மனம் மறுத்தது,” என்றார் அவர்.

“எனக்குக் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றாலும், என் குடும்பத்திற்காக வலுவாக இருக்க வேண்டுமென்று என்னை நானே நிதானப்படுத்திக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

அஷ்வினின் தைரியம்

குடும்பத்தினர் அனைவரும் கதிகலங்கி நின்ற நிலையில் அஷ்வின் வெளிப்படுத்திய மனதைரியம் தமக்குப் பெரிதும் வியப்பளித்ததாக அவர் கூறினார்.

“நாங்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தோம். ஆனால், அஷ்வினின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை,” என்றார் அவர்.

தாம் தைரியமாக இருந்ததை எண்ணித் தமக்கே வியப்பாக இருந்ததென அஷ்வின் கூறினார்.

“எனக்குப் பொதுவாகச் சிறிய பூச்சிகள் என்றாலே பயம். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதும், என் அம்மா அழுததைப் பார்த்து, அவருக்கு ஆறுதல் கூறவேண்டுமென நான் தைரியமாக இருந்தேன்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

அஷ்வினுக்குத் தைரியம் ஒருபுறம் இருக்க, நோயைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் மறுபுறம் இருந்தது.

சிகிச்சைக்கால பயணம்

சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டுமென்ற லட்சியத்தைக் கொண்டிருக்கும் அவருக்குப் புற்றுநோய் குறித்தும் அதற்கான சிகிச்சைக் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்க பல கேள்விகள் இருந்தன.

“சிகிச்சையின்போது நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால், சிகிச்சைக் காலத்தைக் கடப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்றார் அஷ்வின்.

ஐந்து மாதங்களுக்கு கீமோதெரபி பெற்ற அஷ்வின், சிகிச்சையின்போது வலி தெரியாவிட்டாலும், சிகிச்சை முடிந்தபின்னர் உடல் முற்றிலும் சோர்வுற்றதாகக் கூறினார்.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற பின்னர், இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும் அஷ்வினால் முழுதாக ஓய்வெடுக்க முடியவில்லை.

கீமோ முடிந்தவுடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். அதனால், வீடு திரும்பியவுடன் அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தோட வேண்டிய கட்டாயம் இருந்தது.

கீமோ காரணமாக அஷ்வினுக்கு வாந்தி எடுப்பதிலும் சிறுநீர் கழிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருந்தன. “வாந்தி வருவது போலவே இருக்கும், ஆனால் வராது. சிறுநீர் கழிக்கும்போது உயிர்போகும் அளவிற்கு வலி இருக்கும். இதுபோன்ற பல சிக்கல்கள் இருந்தன,” என்றார் அஷ்வின்.

மேலும், கீமோ காரணமாக அஷ்வின் முடியிழந்து, மெலிந்த தோற்றத்துடன் இருந்தது அவரது பெற்றோரின் மனதை வாட்டியது.

துணை நின்ற தூண்கள்

கடினமான நேரங்களில், அஷ்வினுக்குப் பக்கபலமாக அவரது நண்பர்கள் உடன் நின்றனர்.

“என் நண்பர்கள் வாரம் ஒருமுறை என்னை மருத்துவமனையில் சந்திக்க வந்தனர். பள்ளியில் பாடங்கள் நடக்கும்போது காணொளி அழைப்புவழி என்னுடன் தொடர்பில் இருப்பர். அதனால், நான் கல்வியில் பெரிதும் பின்தங்கவில்லை,” என்று அவர் சுட்டினார்.

விக்டோரியா பள்ளியில் தற்போது உயர்நிலை மூன்றில் படிக்கும் அஷ்வின் கல்வியில் சிறந்து விளங்குகிறார்.

அஷ்வினின் பள்ளியும் சிறார் புற்றுநோய் அறநிறுவனமும் அந்தப் பயணத்தில் முக்கியத் தூண்களாக நின்றன என்று ஆனந்தகுமார் கூறினார்.

புற்றுநோயைக் கடந்த வாழ்க்கை

அஷ்வின் குணமடைந்து மீண்டும் பள்ளிக்குத் திரும்பியிருந்தாலும் அந்தக் காலகட்டம் அவரது குடும்பத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

“அப்போதெல்லாம் மருத்துவமனைக்குச் செல்வதற்கென்றே காலையில் எழுவதுபோல் தோன்றும். கொடுமையாகவும் வேதனையாகவும் இருக்கும். ஆனால், அதன் பின்பு நாங்கள் இப்போது குடும்பமாக மிகவும் அணுக்கமாகியுள்ளோம்,” என்றார் ஆனந்தகுமார்.

“முன்பெல்லாம் வேலையைக் காரணம் காட்டி, பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல் இருந்தேன். ஆனால், இப்போது அவர்களைவிட வேறெதுவும் முக்கியமில்லை என்று அறிந்துகொண்டேன்,” என்று அவர் சொன்னார்.

புற்றுநோயைக் கடந்து வருவோர் எவரெஸ்ட் இமயத்தைக் கடந்து வருவோரைவிட உயர்ந்தவர்கள் என அஷ்வின் எண்ணுகிறார்.

“புற்றுநோய் இருப்பதால் நாம் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. தைரியமாக இருந்தால் நிச்சயம் அதை வெல்ல முடியும்,” என்று அவர் கூறினார்.

அஷ்வின் தற்போது இணைப்பாடமாக தனக்குப் பிடித்த பாடகர் குழுவில் இடம்பெற்றுள்ளார். நண்பர்களுடன் காற்பந்து விளையாடுகிறார்.

தம்மைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அஷ்வின் புற்றுநோயியல் நிபுணர் ஆக முனைகிறார்.

குறிப்புச் சொற்கள்