காவல்துறை அதிகாரியாக நீல நிறச் சீருடையில் மிடுக்காக வலம்வந்த 33 வயது சு. ஐஸ்வரியா, இன்று தமது சொந்த உணவகத்தை நிறுவி, நறுமணம் கமழும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறி வருகிறார்.
சிங்கப்பூர்க் காவல்துறையில் பிடோக் வட்டாரத்தில் விசாரணை அதிகாரியாகவும், ஆர்ச்சர்ட்டில் குழுத் தலைவராகவும், குற்றப் புலனாய்வுத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றிய அவர், கொவிட்-19 காலகட்டத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் தமது நீண்டகாலக் கனவான உணவுத்துறைக்கு மாற முடிவெடுத்தார்.
“ஒரு நல்ல வேலையை விட்டுவிட்டு ஏன் கணிக்க முடியாத உணவு, பானத் துறைக்குப் போகிறேன் என்பது குறித்துப் பல கருத்துகள் எழும் என்று எனக்குத் தெரியும்,” என்ற அவர் முதலில் இந்த முடிவை வெளிப்படையாகப் பலரிடம் கூறவில்லை என்றார்.
நிலையான அரசாங்கப் பணியை விட்டு விலகுவது சவாலாக இருந்தாலும், தமது மனம் கூறியதற்குச் செவிசாய்த்து அவர் பேங்காக் சென்றார்.
அங்குப் புகழ்பெற்ற ‘லெ கோர்டன் ப்ளூ’ (Le Cordon Bleu) கல்வி நிலையத்தில் ‘பேஸ்ட்ரி’ (Pastry) தயாரிப்பில் பட்டயப் படிப்பை முடித்த ஐஸ்வரியா, ‘கா’ (Gaa) என்ற மிஷெலின் உணவகத்திலும் பயிற்சி பெற்றார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவ அறிவியல் படித்த அவர், பேங்காக்கில் தாய்மொழியோ, பிரெஞ்சு மொழியோ தெரியாவிட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் புதிய கலாசாரத்தை அனுபவித்ததோடு பாரம்பரிய ‘முவே தாய்’ தற்காப்புக் கலையையும் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“வெளியூரில் வேலை செய்தபோதுதான், தக்காளியை வைத்து எப்படி இனிப்பு வகைகள் தயாரிப்பது, பாரம்பரிய நறுமணப் பொருள்களை எப்படி மற்றக் கலாசாரத்தின் உணவு வகைகளில் பயன்படுத்துவது உள்ளிட்ட புதுமையான சமையல் முறைகளைக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், நியூசிலாந்தில் ஓராண்டு தங்கி பெரிய அளவிலான உணவுத் தயாரிப்பு முறைகளையும் ‘பரிஸ்டா’ (barista) நுணுக்கங்களையும் அவர் கற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
2023ல் சிங்கப்பூர் திரும்பிய அவர், பலகட்டத் திட்டமிடலுக்குப் பிறகு 2025ல் ரோவெல் ரோட்டில் ‘ப்ளூ ஸ்கைஸ் கஃபே’ (Blue Skies Cafe) என்ற தமது சொந்த உணவகத்தை அமைத்தார்.
வேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே வரும்போது, நீல நிற வானத்தைப் பார்க்கும்போது ஏற்படும் சுதந்திரமான உணர்வைக் குறிக்கும் வகையிலேயே தமது உணவகத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டியதாக அவர் கூறினார்.
“பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே சொந்தமாக ஒரு உணவகத்தைத் திறக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனது கையேட்டிலும் அதை எழுதி வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனவு நனவானது,” என்றார் ஐஸ்வரியா.
கடையைத் தயார்செய்தபோது எதிர்பாராத செலவுகள், புதிய தீப் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல சவால்களை அவர் எதிர்கொண்டார். அத்துடன், தொடக்கத்தில் ஆள்பற்றாக்குறை இருந்ததால், முதல் மாதம் தமது தாயாரும் உறவினருமே சமையலறையைச் சமாளித்ததாக அவர் கூறினார்.
“எந்தத் தடைகளும் இல்லாமல் எல்லாமே சுமுகமாக நடந்தால், அந்தப் பயணத்தில் சுவாரசியம் இருக்காது. ஒவ்வொரு தடங்கலையும் தாண்டி அதற்கான தீர்வை நான் தேடினேன்,” என்றார் ஐஸ்வரியா.
ஏலக்காய் கலந்த ‘க்ரீம் ஆங்லேஸ்’ (creme anglaise), இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட புதுமையான இனிப்புகள், மசாலாக்களில் ஊறவைக்கப்பட்ட பர்கர் என அவரது உணவுப் பட்டியல் தனித்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
“இந்திய நறுமணப் பொருள்கள் பாரம்பரிய இந்திய உணவுகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. அவற்றை அன்றாட நவீன ‘கஃபே’ உணவுகளிலும் கலந்து சுவையை மேம்படுத்தலாம் என்பதை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்க நினைத்தேன்,” என்றார் ஐஸ்வரியா.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், 62 வயது ஓய்வுபெற்ற தாதியான அவரது தாயார் செந்தாமரையின் தனித்துவமான ‘நாசி லெமாக்’ (Nasi Lemak) அவரது உணவகத்தின் சிறப்பு உணவாக அமைகிறது.
“எங்கள் வீட்டில் ‘நாசி லெமாக்’ என்பது கொண்டாட்டத்தின் அடையாளம். ஒவ்வொரு தீபாவளிக்கும் அம்மா அதைச் செய்வார். அதனால், அதை எனது உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நினைத்தேன்,” என்றார் அவர்.
அத்துடன், பாண்டான், வெனிலா போன்ற பிரபல சுவைகளைக் கொண்ட சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இனிப்புப்பாகுகளைப் பயன்படுத்தும் தனித்துவமான பானங்களையும் அவர் தமது உணவகத்தில் பரிமாறுகிறார்.
மக்களுக்குச் சேவை செய்வது காவல்துறைப் பணிக்கும் உணவகத் தொழிலுக்கும் இடையே உள்ள முக்கிய ஒற்றுமை எனத் தாம் கருதுவதாக அவர் சொன்னார்.
“காவல்துறையில் இருந்தபோது பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது எனக்கு உந்துதலாக அமைந்தது. அதே போல, இங்கு வாடிக்கையாளர்கள் சோர்வாக வரும்போது, எனது உணவாலும் உபசரிப்பாலும் அவர்களின் நாளை இனிமையாக்குவது எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருகிறது,” என்று ஐஸ்வரியா கூறினார்.

