சிங்கப்பூரில் 55 ஆண்டுகளுக்கு முன்னர், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான டாக்டர் பெஞ்சமின் ஹென்றி ஷியர்ஸ் (Benjamin Henry Sheares), குடியரசின் இரண்டாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நேரத்தில், டாக்டர் ஷியர்ஸ் ஓர் அரசியல்வாதியாக இல்லாதிருந்தது குறித்து பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய அரசதந்திர வட்டாரத்தினர் வியப்படைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதே காரணத்திற்காக டாக்டர் ஷியர்ஸ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.
டாக்டர் ஷியர்ஸைப் பற்றிய விரிவான நூலை எழுதி வெளியிடும் அருஞ்செயலைப் புகழ்பெற்ற மூத்த செய்தியாளர் கந்தையா குமாரசாமி விஜயன் மேற்கொண்டார்.
1971 முதல் 1981 வரை சிங்கப்பூரின் இரண்டாவது அதிபராக டாக்டர் ஷியர்ஸ் பணியாற்றினார். மூன்று தவணைகளுக்குப் பதவியேற்ற அவர், 1981ல் பதவியில் இருந்தபோதே காலமானார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அவரை ஏன் மூன்று முறை அதிபராகத் தேர்ந்தெடுத்தார் என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக 75 வயதான திரு கே.சி.விஜயன் கூறினார்.
“சிங்கப்பூரின் உருவகமாக டாக்டர் ஷியர்ஸ் திகழ்ந்தார். சிங்கப்பூரின் எல்லாப் பிரிவுகளைச் சேர்ந்தோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய தன்மையுள்ள ஆளுமை அவர்,” என்றார் திரு விஜயன்.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலைத் திரு விஜயன் மூன்று ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டும், பலரை நேர்கண்டும் எழுதியுள்ளார்.
டாக்டர் ஷியர்ஸின் வாழ்க்கையின் மைல்கற்களைப் பற்றி மட்டுமன்றி, அவர் வாழ்ந்த காலகட்டத்தின் உலகச் சூழலையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
அத்துடன், டாக்டர் ஷியர்ஸின் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பேசிய திரு விஜயன், சிரிக்கவும் நெகிழவும் வைக்கும் பல சுவாரசியமான அனுபவங்களை இதில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ஷியர்ஸின் தாயார் யூரேசியர், தந்தை ஆங்கிலேயர். ஆனாலும், டாக்டர் ஷியர்ஸுக்கு ஓரளவு தமிழ் பேசத் தெரியும் என்று திரு விஜயன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய ‘மெட்ராஸ்’ நகரில் சில ஆண்டுகள் தங்கிய தம் தந்தை எட்வின் ஷியர்ஸிடம் டாக்டர் ஷியர்ஸ் தமிழ் கற்றார்.
டாக்டர் ஷியர்ஸின் மனைவி திருமதி இயோ சே கியோக், தமிழரான தங்கள் தோட்டக்காரரைத் திட்டிய பிறகு, டாக்டர் ஷியர்ஸ் அந்தத் தோட்டக்காரரிடம் தமிழில் நகைச்சுவையாகப் பேசும் சம்பவம் ஒன்றும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தலைசிறந்த மருத்துவ வல்லுநராகவும் பின்னர் நாட்டின் தலைவராகவும் உயர்ந்தபோதிலும், பிறருடன் அவர் எளிதாகப் பழகிய குணப்பாங்கையே இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
டாக்டர் ஷியர்ஸின் பிள்ளைப் பருவ நினைவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பிரிட்டனின் காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் அரசியார் போன்ற முக்கிய ஆளுமைகளுடனான சந்திப்புகள் உள்ளிட்டவற்றைக் காட்டும் பழைய ஆவணப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புத்தகம் மேலோட்டமாக வாசிக்கும் வாசகர்களுக்கானதன்று. தகவல் செறிவுமிக்க இந்நூல், ஓர் ஆய்வு சார்ந்த வாழ்க்கை வரலாறாக அமைந்துள்ளது.
டாக்டர் ஷியர்ஸ் மகப்பேற்று மருத்துவத் துறையில் ஆற்றிய பணிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். இருந்தாலும், அவர் தம் விருப்பத்தின் பேரில் இந்தச் சிறப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
வருங்காலத்தில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆவல், அவருக்குப் பிள்ளைப் பருவத்திலிருந்தே இருந்தது.
சிறுவனாக இருந்தபோது அவர் விளையாட்டுக்காக ஒரு மருத்துவரைப்போலத் தமது தங்கைக்கு ‘சிகிச்சை’ அளிக்க முயன்று, ஒரு காசு நாணயத்தை மாத்திரையாக ஊட்டிவிட்டார்.
அதன் விளைவாகத் தமது தாயாரிடம் அவர் அடி வாங்கிய சம்பவமும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலாக்காவில் மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்த அவர், அங்கிருந்து சிங்கப்பூருக்குப் பணிமாற்றம் கேட்ட பிறகுதான் மகப்பேறு, மகளிர் மருத்துவத் துறைக்கே வந்தார்.
ஏனெனில், அந்த நேரத்தில் சிங்கப்பூரின் மகப்பேற்று மருத்துவமனையாக விளங்கிய அன்றைய ‘கண்டாங் கெர்பாவ்’ மருத்துவமனையில் மட்டுமே பணி காலியாக இருந்தது.
தமது பணியில் மிகுந்த அர்ப்பணிப்பு காட்டிய டாக்டர் ஷியர்ஸுக்கு ஓய்வோ விடுமுறையோ எடுப்பது கடினமாக இருந்தது.
1950கள், 1960களில் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்த காலகட்டத்தில், டாக்டர் ஷியர்ஸ் தன்னார்வக் கருத்தடைக்கு ஆதரவாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ஓர் ஆண்டில் மட்டும் கேகே மருத்துவமனையில் 60,000க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன.
தொடக்கத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், 1969ஆம் ஆண்டில் ‘தன்னார்வக் கருத்தடைச் சட்டத்தை’ எவ்வித எதிர்ப்பும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவர் அனைவரையும் சம்மதிக்க வைத்தார்.
டாக்டர் ஷியர்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அவருடைய மனைவியும் சிங்கப்பூரின் முன்னாள் தலைமகளுமாகிய திருமதி இயோ சே கியோக் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் விரிவாக உள்ளன.
டாக்டர் ஷியர்ஸின் நெருங்கிய நண்பரும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் மகப்பேற்றியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்த டாக்டர் சித்தம்பலம் சண்முகரத்தினம் பற்றிய தகவல்களும் இதில் உள்ளன.
கே.சி. விஜயன் எழுதிய ‘த பெஞ்சமின் ஷியர்ஸ் ஸ்டோரி: ஃபிரம் பையனியரிங் கைனகாலஜிஸ்ட் டு சிங்கப்பூர் பிரசிடென்ட்’ என்ற புத்தகம், கினோகுனியா போன்ற குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் ஆல்கெமின் ‘ரீட் எ புக்’ போன்ற இணையத்தளங்களில் மின்னூலாகவும் கிடைக்கிறது.

