லிங்க்ட்இன் பக்கத்தைப் பார்க்கும்போது ‘ஃப்ராக்ஷனல் ஒர்க்‘ எனப்படும் ‘பகுதிநேர உயர்நிலைப் பணி’ என்ற சொல்லை பலர் கண்டிருக்கலாம்.
அல்லது அறிமுகங்களில் பலர் தங்களை ‘பகுதிநேரத் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி’, ‘பகுதிநேரத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி’ என்று அடையாளப்படுத்திக்கொள்வதை அதிக அளவில் காணக்கூடும்.
அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் சாதாரண வார்த்தையாக இல்லாமல் பகுதிநேர உயர்நிலைப் பணி முறையின் வளர்ச்சியானது அலுவலக ஊழியர்கள் வருமானம் ஈட்டும் முறையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
சிங்கப்பூரில் தங்களின் பணி விவரத்தில் ‘ஃப்ராக்ஷனல்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ள லிங்க்ட்இன் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 1,000க்குமேல் அதிகரித்துள்ளது.
இந்த உயர்நிலைத் திறமையாளர்களை தேவை அதிகமுள்ள சந்தையுடன் இணைப்பதற்காக ‘த ஃப்ராக்ஷனல் டைரக்டரி’ போன்ற சிறப்புத் தளங்களும் உருவாகியுள்ளன. இது ஏதோ கடந்துபோகும் மோகமன்று என்பதை அரசாங்கமும் உணர்த்தியுள்ளது.
புதிய நிறுவனங்களை, மனிதவளம், நிதி, செயல்பாடுகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் இணைப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களைச் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
பகுதிநேர அல்லது தன்னுரிமை வேலைகளைவிட ‘ஃப்ராக்ஷனல்’ என்ற சொல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அவற்றுக்கிடையே கட்டமைப்பு ரீதியான வேறுபாடு உள்ளது.
பகுதிநேர உயர்நிலைப் பணி என்பது, வேலை நேரத்தை மட்டும் குறிப்பதன்று, அது நிறுவனத்துடனான உறவின் தன்மையைப் பொறுத்தது. இத்தகைய வேலைமுறை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருந்தே ஆகவேண்டும் என்ற மனத்தடையைத் தகர்த்தெறிந்த கொவிட்-19 பெருந்தொற்று இதற்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது.
இந்த வேலைமுறை தற்போது பரவலாகி வருகிறது. இன்டீட், லிங்க்ட்இன் போன்ற வேலைவாய்ப்புத் தளங்களில் அது தேடக்கூடிய ஒரு தனி வேலைப் பிரிவாகவே மாறியுள்ளது.
‘பகுதிநேர உயர்நிலை பணியின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு ஓர் அமைதியான உந்துசக்தியாகச் செயல்படுகிறது.
எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் தரவுச் செயலாக்கம், வரைவு தயாரித்தல் போன்ற பெரும் சுமைகளை செயற்கை நுண்ணறிவு எளிதாகக் கையாளுகிறது.

