‘வார்ம் மீல்ஸ் @ நார்த் ஈஸ்ட்’ என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தின்கீழ்,செப்டம்பர் மாதம் முதல் தெம்பனிஸ், பொங்கோல், பாசிர் ரிஸ்-சாங்கி ஆகிய மூன்று வட்டாரங்களைச் சேர்ந்த 3,000க்கும் அதிகமான குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகில் அமைந்துள்ள உணவுப் பெட்டகங்கள் வாயிலாக இலவச உணவு வழங்கப்படும்.
ஓராண்டு காலம் நீடிக்கும் இத்திட்டத்தின்கீழ், பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் $500 மதிப்புள்ள உணவு வரவுத்தொகை, செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக கைப்பேசிச் செயலி வாயிலாக அவர்களின் கணக்குகளில் சேர்க்கப்படும்.
தெம்பனிஸ், பொங்கோல், பாசிர் ரிஸ்-சாங்கி ஆகிய இடங்களில் உள்ள வாடகை வீடுகளின் கீழ்த்தளங்களில் ஏறத்தாழ 30 உணவுப் பெட்டகங்களில் இந்த வரவுத்தொகையைப் பயன்படுத்தலாம். பயனாளர்கள் செயலியில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டைப் பதிவு செய்து பெட்டகத்தின் கதவுகளைத் திறக்க வேண்டும். இந்தச் சூடான உணவுகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், இரவு உணவு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கிடைக்கும்.
‘சாங் செங்’ குழுமம் வழங்கிய பல்வேறு உணவு வகைகளைக் கொண்டிருப்பதுடன் ‘ஹலால்’ சான்றிதழ் பெற்று ஆரோக்கியமான முறையிலும் அவை தயாரிக்கப்பட்டுள்ளன. சுட்ட கோழி இறைச்சியுடன் கூடிய கிரீமி ஸ்பகெட்டி, வறுத்த கோழி உடோன், ரெண்டாங் கோழி, காளான் சாஸுடன் கூடிய சைவ தோஃபு சோறு, தெரியாகி மீன் சோறு ஆகியவை உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
“உடல்நலமில்லாத என் மனைவியைப் பராமரித்துவருகிறேன். நானும் வேலையில் இல்லாத நிலையில் இந்த $500 வரவுத்தொகை குடும்ப உணவுச் செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உணவை வீட்டுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதால் நேரத்தைச் சேமிக்க இயலும்,” என்று தெம்பனிஸ்வாசியான மைக்கேல் ஈதன் ஜெரால்ட், 39, கூறினார்.
இத்திட்டத்திற்கு ஓசிபிசி வங்கியும் வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் இணைந்து $500,000 நிதி வழங்குகின்றன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதற்கு ஆதரவளிக்கிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, கலாசார, சமூக இளையர்துறைத் துணை அமைச்சர் பே யாம் கேங் இருவரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இத்திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர். ஓசிபிசி வங்கியின் வணிக முத்திரை, தொடர்புகள் குழுப் பிரிவுத் தலைவர் கோ சிங் சிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வடகிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மேலும் பல குறைந்த வருமானக் குடும்பங்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவாக்கப்படும்.


