பொதுக் கல்விச் சான்றிதழ் ‘ஓ’ நிலைத் தேர்வுகளுக்குத் தயாராக மாணவர்கள் முழுமையான ஆதரவைப் பெறுவது முக்கியம்.
பொருளாதார வசதி குறைவாக உள்ள மாணவர்களுக்கும் தரமான கூடுதல் கல்வி ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக 2013ஆம் ஆண்டு கணிதப் பாடத்துடன் இலவச ‘ஓ’ நிலைப் பயிலரங்கு தொடங்கப்பட்டது.
“கூத்தாநல்லூர் சங்கம், மெண்டாக்கியின் ஆதரவுடன் பென்கூலன் பள்ளிவாசல் இன்ஃபோகாம் கன்சல்டன்ட்சுடன் இணைந்து, இரண்டு நாள் பயிலரங்கை 13 ஆண்டுகளாக ‘ஓ’ நிலை மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம். மாணவர்கள், பெற்றோரிடையே நல்ல வரவேற்புப் பெற்றதால், இந்த இலவசப் பயிலரங்கு விரிவுபடுத்தப்பட்டு அதனுடன் ஆங்கிலம், அறிவியல் பாடங்களும் பின்னர் இணைக்கப்பட்டன,” என்றார் கூத்தாநல்லூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகம்மது ஷாஹுல் ஹமீது.
“வார இறுதி நேரத்தைச் சமூகத்திற்காகச் செலவு செய்து, மாணவர்களின் வளர்ச்சிக்காக ஆசிரியர்கள், தொண்டூழியர்கள் ஆற்றும் சேவை இந்த முயற்சிக்கு உந்துதலாக அமைந்தது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டும் இந்த இலவசப் பயிலரங்கு செப்டம்பர் 26, 27ஆம் தேதிகளில் பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு நாள் பயிலரங்கில் ‘ஓ’ நிலைத் தேர்விற்குத் தயாராகும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
“இந்தப் பயிலரங்கின் கணித அமர்வில் மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான கணிதக் கோட்பாடுகள், எவ்வாறு விரைவாகப் பாடங்களை மீண்டும் படிப்பது போன்ற நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தோம். மேலும் மாணவர்கள் சிறு குழுக்களாக இணைந்து சிக்கல்களுக்குத் தீர்வு காண ஊக்குவிக்கப்பட்டனர். இந்த அமர்வு மாணவர்களிடமிருந்து நேரடியாக விடைகளையும் கருத்துகளையும் பெறுவதை நோக்கமாகக் கொண்ட இருவழிப் பரிமாற்றமாக வடிவமைக்கப்பட்டது,” என்று 40 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் கொண்ட கல்வியாளர் பி.எம்.ஏ. அமானுல்லாஹ், 62, கூறினார்.
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவர் முஹம்மது ஃபவாஸ், 16. இது போன்ற பயிலரங்குகள் மேலும் அதிகமாக நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்தப் பயிலரங்கு எனக்குப் பயனுள்ளதாக அமைந்தது. இதில் ஆசிரியர்கள் சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்கள். எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட கணித முறையைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது. அதன் வழியாக நான் ‘ஓ’ நிலைத் தேர்வையும் நன்றாகச் செய்வேன் என்று நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து இதுபோன்ற பயிலரங்குகள் நடைபெற்றால் மாணவர்கள் பலருக்குத் தேர்வுகளுக்கு ஆயத்தமாகப் பயனுள்ளவையாய் இருக்கும்”, என்றார் ஃபவாஸ்.
