திருவாட்டி விமலா சிம்சன், 67, ஒரு தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து மாதம் கிட்டத்தட்ட $800 சம்பாதிக்கிறார்.
அவர் வேலை செய்ய இயலாத தனது சகோதரர் திரு ஜோசப் சிம்சனுடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் நீரிழிவு நோய் உள்ளதால் ஒவ்வொரு நாளும் தாங்கள் உண்ணும் உணவில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சமைப்பது எப்போதுமே திருமதி விமலாவின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததில்லை.
வேலை முடிந்த பிறகு அவருக்கு பெரும்பாலும் குறைந்த அளவிலான சக்தியே இருக்கும்.
மேலும், வீட்டில் உணவைத் தயாரிப்பது அவர் சமாளிக்க வேண்டிய மற்றொரு சவாலாக உள்ளது.
திருமணமாகாத இவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்துக்கொள்வதோடு, அவர்களிடம் இருப்பதை வைத்து ஒவ்வொரு நாளையும் சமாளிக்கவும் அவர்களுக்கு ஏற்ற நடைமுறையான முடிவுகளை எடுக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
“நீரிழிவு நோய் எனது அன்றாட வழக்கத்தில், குறிப்பாக உணவு விஷயத்தில் என்னை அதிக கவனத்துடன் இருக்கச் செய்துள்ளது. எனது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்று சிந்திக்காமல் என்னால் எதையும் சாப்பிட முடியாது. உணவு, மளிகைப் பொருள்கள் குறித்து நான் திட்டமிடும் விதத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் திருவாட்டி விமலா.
தொடர்புடைய செய்திகள்
பொருள்களின் விலையையும், அந்த உணவு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆரோக்கியம், செலவுகள் என இரண்டையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பதால் சில நேரங்களில் அது ஒரு சவாலாகவே உள்ளது.
ஆனால், ‘ஃபூட் ஃபிரம் த ஹார்ட்’ அமைப்பு வழங்கும் மளிகைப் பொருள்கள் மூலம் சிறிய மாற்றங்களை கடைப்பிடித்து வருகிறார் திருவாட்டி விமலா.
தனக்குத் தேவையான மளிகைப் பொருள்களை தானே தேர்ந்தெடுக்கும் வசதியானது, இந்த உதவியை மேலும் பயனுள்ளதாக மாற்றியுள்ளது.
தனக்கு சமைக்கத் தெரிந்த, சாப்பிட்டு முடிக்கக்கூடிய, தனது அன்றாட வழக்கத்திற்கு நன்கு பொருந்தக்கூடிய பொருள்களைத் தேர்ந்தெடுக்க அது அவருக்கு உதவுகிறது.
“பொருத்தமான மளிகைப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க முடிவது முக்கியமானது. இது எங்கள் உடல்நலத்தைச் சிறப்பாகப் பராமரிக்கவும், நாங்கள் பெறும் பொருள்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் உதவுகிறது. இது எங்களுக்கு ஓரளவு மன அமைதியைத் தருவதோடு அன்றாட வாழ்க்கையை எளிதாகச் சமாளிக்கவும் உதவுகிறது,” என்று சொன்னார் திருவாட்டி விமலா.
தனக்கு ஏற்ற மளிகைப் பொருள்கள் கிடைப்பது தனது உடல்நிலையைச் சிறப்பாகப் பராமரிக்க உதவுவதாகவும், தன்னால் பயன்படுத்த முடியாத பொருள்களைப் பெறுவதற்குப் பதிலாக, தனது உணவுத் தேவைகளுக்கு ஏற்ற பொருள்களைத் தானே தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும்போது அது தனக்குப் பெரிதும் உதவியாக இருப்பதாகவும் திரு ஜோசப் தெரிவித்தார்.
“காப்பி, தேநீர், பாக்கெட் பால் போன்ற பானங்களும், பிஸ்கட், நூடல்ஸ் போன்றவையும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இவை நாள் முழுவதும் நாங்கள் சிறிய, எளிமையான உணவுகளை உட்கொள்ள உதவுவதோடு எங்களது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன,” என்றார் திரு ஜோசப்.
‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பு அண்மையில் பிடோக் சவுத்தில் அதன் ஆறாவது சமூகக் கடையை தொடங்கியது.
500 குடியிருப்பாளர்களுக்குப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அது வழங்குகிறது. பயனாளிகளில் திருவாட்டி விமலாவும், அவரது சகோதரரும் அடங்குவர்.
சமூகக் கடை பயனாளிகளுக்குத் தங்களுக்குத் தேவையான பொருள்களை இலவசமாகத் தேர்ந்தெடுத்து வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு மாதமும் பயனாளிகள் 12 கெட்டுப்போகாத உணவுப் பொருள்கள், உள்ளூரில் பெறப்பட்ட இரண்டு வகையான கீரைகள் என மொத்தம் 14 பொருள்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வது மட்டுமின்றி ஒவ்வொரு சமூகக் கடையிலும் 24 மணி நேரமும் செயல்படும் உணவுச் சேகரிப்பு வசதியும் உள்ளது.
இது கொடையாளர்களும் குடியிருப்பாளர்களும் எந்த நேரத்திலும் உணவுப் பொருள்களை வழங்க அனுமதிக்கிறது.
இது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வசதி குறைந்த அண்டை வீட்டாருக்கு ஆதரவளிக்க ஒரு எளிய வழியை உருவாக்குவதோடு, குடியிருப்புகளுக்குள் அண்டை வீட்டார் என்ற ஒற்றுமை உணர்வையும் உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கிறது.

