தனது சகோதரரின் இறுதிச் சடங்குகளுக்காக ஈமச்சடங்கு சேவை வழங்குநரைத் தேடிக்கொண்டிருந்த சேம்ராஜ், 65, சேவை வழங்குநரின் கட்டணப் பட்டியலைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்.
இறுதிச் சடங்குகளின் விலை இவ்வளவு கூடுதலாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
சேம்ராஜ் போலவே தமிழ் முரசிடம் பேசிய பலரும் சிங்கப்பூரில் இறுதிச் சடங்குகளை நடத்த செலவு அதிகமாக இருப்பதாகக் கூறினர்.
சகோதரரின் இறுதிச் சடங்குகளுக்கு மொத்தம் $8,000 செலவாகும் எனத் தன்னிடம் முதலில் கூறப்பட்டதாகச் சேம்ராஜ் சொன்னார்.
பின்னர், இறுதிச் சடங்குகள் முடியும் தருவாயில் செலவு கிட்டத்தட்ட $11,000க்கு எகிறியதாக அவர் கூறினார்.
அதுகுறித்து ஈமச்சடங்கு சேவை வழங்குநரிடம் கேட்டபோது வாகனச் செலவு, உடலைத் தகனம் செய்வதற்கான நேரம் போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்பட்டதாக சேம்ராஜ் தெரிவித்தார்.
இறுதிச் சடங்குகளுக்கு எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதிகம் செலவு செய்ய நேரிடுவதாகப் பலர் கருதுகின்றனர். அத்தகைய செலவுகள் தவிர்க்கப்படலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
மேலும், சேவை வழங்குநரிடம் நல்லுடலை எடுத்துச் செல்லும் வாகனம் இல்லாததை உணர்ந்த சேம்ராஜ், சேவை வழங்குநர் இதர நிறுவனத்திடமிருந்து அமரர் வாகனத்தை இரவல் பெற்று தனது சகோதரரின் இறுதிச் சடங்கை நடந்திருக்கலாம் என்று ஊகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பலருக்கு இறுதிச் சடங்கில் எது தேவை, எது தேவையில்லை என்பதை புரிய வைக்க ஒரு தொலைபேசி சேவை இருந்தால் சிறப்பாக இருக்கும். என்னைப் போன்றவர்கள் எதற்கு செலவு செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
கூடுதல் செலவுக்குக் குடும்பம்தான் பொறுப்பு
ஒரு குடும்பம் அன்பான ஒருவரை இழந்து துயரத்தில் இருக்கும்போது இறுதிச் சடங்குகளை நடத்துபவர்கள்தான் அக்குடும்பத்திற்கு அடுத்து என்ன தேவை என்பதை அறிந்து பூர்த்தி செய்ய முன்வருகின்றனர்.
பல உணர்வுகள் கலந்த அத்தகைய ஓர் இக்கட்டான சூழலில் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் கடினமான பணியும் அதனுடன் சேர்ந்தே வருகிறது.
சிங்கப்பூரில் பன்முக கலாசார சமூகங்கள் இருப்பதால் இறுதிச் சடங்குகளில் பல்வேறு சமய, கலாசார, நடைமுறைகளும் செலவுகளும் உள்ளடங்கியுள்ளன.
இறுதிச் சடங்குகளின் சேவைகளை எடுத்துக்கொண்டால் அதில் சேவையின் வகை, இறுதிச் சடங்கு நடைபெறும் இட அமைப்பு, இறந்தவர் அடக்கம் செய்யப்படுகிறாரா அல்லது தகனம் செய்யப்படுகிறாரா போன்றவை அடங்கியுள்ளன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது லிட்டில் இந்தியா ஈமச்சடங்கு சேவை நிறுவனம்.
தந்தை தொடங்கிய நிறுவனத்தை தற்போது சகோதரர்களான ஸ்ரீ விஷ்ணு சந்திரன், 40, கலைவாணி சந்திரன், 41, நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இந்திய ஈமச்சடங்குகள் குறிப்பாக இந்து சமய முறைப்படி செய்யும் ஈமச்சடங்குகள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட அவ்விருவரும் மொத்த செலவுகள் குடும்பத்தின் கையில்தான் அடங்கியுள்ளது என்றனர்.
குறைந்த வருமான குடும்பங்களிலிருந்து வருவோர் தேர்ந்தெடுக்கும் வகையில் சவப்பெட்டிகளை வழங்குவதாக சொன்ன கலைவாணி சவப்பெட்டி கூடுதல் அலங்காரத்துடன் வரும்போது விலை உயரும் என்றார்.
சேவை பட்டியல்
தங்களின் சேவை பட்டியலைப் பொறுத்தவரை மிகவும் அடிப்படையான சேவை $4,200ல் தொடங்குகிறது. அதில் தேவையான சடங்குகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளன.
மருத்துவமனை அல்லது வீட்டிலிருந்து உடலைக் கொண்டு செல்லுதல், உடல் வீட்டிற்கு வருவதற்கு முன்பே தகனக் கட்டணத்தைச் செலுத்துதல், இறுதி அஞ்சலிக்கான பூஜை பொருள்களைத் தயாராக வைத்திருப்பது, மூன்று பெட்டிகள் குடிநீர் பாட்டில்கள், மறைந்தவரின் உருவப் படத்தைப் பெரிதாக்கி மரச் சட்டத்தில் அமைத்தல், உதிரிப் பூக்கள், புகைப்படச் சட்டத்திற்கு அணிவிப்பதற்கான மலர் மாலைகள், ஐந்து அடி நீளமுள்ள மாலை, சடங்குகளைச் செய்யும் ஆண்களுக்கான வேட்டி, தண்ணீர்க் குடம், நல்லுடலை குளிப்பாட்டுவதற்கான பொருள்கள், மறைந்தவர் ஆணாக இருந்தால் பாரம்பரிய உடைகள், வேண்டுமானால் தலைப்பாகை, மலர் அலங்காரத்துடன் கூடிய நல்லுடலை எடுத்துச் செல்லும் வண்டி, மண்டாய் செல்வதற்கான 40 இருக்கைகள் கொண்ட பேருந்துச் சேவை, அஸ்தி சேகரிப்பதற்காகப் பொருள்கள் ஆகியவை அந்த அடிப்படை சேவை பட்டியலில் அடங்கியுள்ளன.
இவற்றுக்கு அப்பாற்பட்டு மறைந்தவரின் குடும்பம் கூடுதலாக எதையாவது சேர்க்க விரும்பினால் கூடுதல் செலவுகள் ஆகும் என்று கலைவாணி விளக்கினார்.
நிறுவனத்தில் அதிக விலை கொண்ட சேவை $10,000க்கும் குறைவாகத்தான் வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
“நல்லுடலை எடுத்துச் செல்லும் வண்டி எங்களுக்குச் சொந்தமானது. ஈமச்சடங்கிற்குத் தேவையான அனைத்தும் நாங்கள் சொந்தமாக வைத்துள்ளோம். தேவை வந்தால் மட்டுமே நாங்கள் குடும்பத்திடம் பெரிய அளவிலான சவப்பெட்டியை எடுக்கப் பரிந்துரைப்போம். இல்லையெனில் அது குடும்பத்தின் விருப்பமே,” என்று கூறினார் ஸ்ரீ விஷ்ணு.
சிங்கப்பூர் இறுதிச் சடங்கு, சவப்பெட்டி சேவைகள் தனியார் நிறுவனம் இந்த ஆண்டு அதன் இணையத் தளத்தில் வெளியிட்ட தகவலின்படி கிறிஸ்தவ இறுதிச் சடங்குகள் $4,000லிருந்து, $8,000 வரை உள்ளது.
முஸ்லிம் இறுதிச் சடங்குகள் $1,500லிருந்து, $4,000 வரை உள்ளது. இந்து இறுதிச் சடங்குகள் $3,000லிருந்து, $10,000 வரை உள்ளது.
சூழ்நிலையை லாபத்திற்குப் பயன்படுத்தக் கூடாது
ஒரு குடும்பம் ஈமச்சடங்கு நடத்துபவரை நாடும்போது சேவை வழங்குநர் குடும்பத்தின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அந்தச் சூழலை லாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொன்னார் எம். கஸ்தூரி, 65.
கஸ்தூரி தன் கணவரின் சகோதரி காலமானபோது இறுதிச் சடங்கு வழங்குநரிடம் இறுதிச் சடங்குகளை வீட்டிலேயே செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் சேவை வழங்குநர் வீட்டில் செய்வதற்குப் பதிலாக வீவக வீட்டின் அடித்தளத்தில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரைத்ததாகக் கஸ்தூரி சொன்னார்.
மொத்த செலவு $8,000 ஆனதாகவும் அது தேவையற்ற செலவு என்று இப்போது வருந்துவதாகவும் அவர் கூறினார்.
“என் கணவரின் சகோதரி திருமணம் செய்யாதவர் என்பதால் நாங்கள் குறைவான சடங்குகளைத்தான் மேற்கொண்டோம். என் கணவரும் காலமாகி விட்டதால் நானும் என் மகளும் எங்களுக்கு இருந்த பணத்தை வைத்து இறுதிச் சடங்கை நடத்தினோம்,” என்றார் கஸ்தூரி.
தாயார் காலமானபோது அங்கயர் கண்ணி, 34, கிட்டத்தட்ட $12,000 செலவு செய்தார்.
இது நியாயமற்ற செலவு என்ற அவர், தாயாரின் இறுதிச் சடங்குகளுக்குக் கடன் வாங்க நேரிட்டதாகச் சொன்னார்.
உறவினர் ஒருவர் இறுதிச் சடங்கு சேவையை நடத்தி வருவதால் தனது தாயார் மாண்டபோது ஜெயபாலன், 54, அந்த உறவினரையே நாடினார்.
தாயாரின் இறுதிச் சடங்குகளுக்கு அவர் $5,000 செலவு செய்தார். உறவினர் என்பதால் சேவை வழங்குநர் குறைந்த விலையைத் தன்னிடம் வசூலித்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால், அந்த உறவினரின் தாயார் காலமானபோது அதே சடங்குகளுக்கு உறவினர் $3,000 செலவு செய்ததை ஜெயபாலன் கண்டார்.
ஒரே நிறுவனம் ஒரே வகையான சேவைக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிப்பது அவரை வியக்க வைத்தது.
பலர் அவர்களின் பொருளியல் நிலைக்கேற்றவாறு இறுதிச் சடங்குகளை நடத்த விரும்பினாலும் குடும்ப உறுப்பினர்கள் நன்கு ஆராய்ந்து செலவு செய்ய வேண்டுமென்றார் ஜெயபாலன்.
இறுதிச் சடங்குகளுக்குத் தனது தாயார் ஏற்கெனவே பணம் சேமித்து வைத்திருந்ததாகச் சொன்ன ஜெயபாலன், இறுதிச் சடங்குகளுக்குச் சேமித்து வைக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தார்.
சிறிது காலத்திற்கு முன்னர் தனது தாயாரை இழந்த மற்றொருவரான ராதாகிருஷ்ணன் ராமையன், 55, இறுதிச் சடங்குங்களில் சரியான சடங்குகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவதில்லை எனக் கருதுகிறார்.
இறுதிச் சடங்குகளுக்கு மொத்தம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை கையாளும் பொறுப்பு சில குடும்பங்களில் இறந்தவரின் உறவினரிடம் ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.
உடலைத் தகனச்சாலைக்கு எடுத்துச் செல்லும்போது திரைப்படப் பாடல்களை ஒலிக்கச் செய்வது, உறுமி மேளம் வாசிப்பது போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சொன்ன அவர், அடிப்படையில் தேவையான சடங்குகள் யாவை என்று புரிய வைப்பதற்கு எந்த முறையும் இல்லை என்று கூறினார்.
செலவு அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள்
தமிழ் முரசு, குறிப்பிட்ட சில இறுதிச் சடங்கு நடத்துபவர்களிடம் பேசிய போது, செலவு அதிகமாக இருப்பதற்கு அவர்களின் தரப்பில் உள்ள நியாயமான காரணங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
திரிஷூல் இறுதிச் சடங்கு சேவைகளை நடத்திவரும் சால[Ϟ]மன், 44, குறைந்த வருமான குடும்பங்களுக்குக் குறைவான விலையில் இறுதிச் சடங்குகள் நடத்த முற்பட்டாலும், பூ, அலங்காரம், ஊழியர்களின் சம்பளம் போன்ற செலவுகள் விலைவாசி உயர்வால் பெருமளவில் ஏறி விட்டதாகப் புலம்பினார்.
மிக அடிப்படையிலான இறுதிச் சடங்கு சேவைக்குக் குறைந்தது $5,000 ஆகும் என்றார் சாலமன்.
இறுதிச் சடங்கு செய்யும் சேவை வழங்குநர்களின் எண்ணிக்கையும் குறுகிய காலத்திலேயே கூடியுள்ளதை அவர் சுட்டினார்.
“நீத்தாரைக் கொண்டு செல்ல வாகனங்களும் தரமான சேவைகளும் இல்லாமலே பல சேவை வழங்குநர்கள் இறுதிச் சடங்குகளை நடத்தி வருவதை நான் கண்டுள்ளேன்,” என்று சொன்னார் சாலமன்.
குடும்பங்கள் இறுதிச் சடங்கு சேவை நடத்துபவரை நாடும்போது அச்சேவை வழங்குநரிடம் வாகனம் இல்லாமல் இருப்பது குடும்பங்களுக்குத் தெரியாது.
அச்சேவை வழங்குநர் வேறொரு வழங்குநரிடம் வாகனம் அல்லது தேவையானவற்றை இரவல் பெற்று அது அவர்களுக்குச் சொந்தமானவை போல காட்டிக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பல காலமாகவே இத்துறையில் இதுபோன்று நடந்து வருவதாகச் சொன்ன சாலமன், இத்தகைய செயல்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றார்.
“நான் பார்த்த பல குடும்பங்கள் எத்தகைய இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்துள்ளனர். குறிப்பாகக் குறைந்த வருமான குடும்பங்களுக்கு நியாமான கட்டணத்தில் அல்லது இலவசமாகக் கூட இறுதி சடங்குகளைச் செய்து தரலாம்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக அஷ்டலிங்கம் இறுதிச் சடங்கு சேவைகளை நடத்திவரும் ஜெகதீஸ்வரன் ஜெகா, 39, இறுதிச் சடங்கு சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் தற்போது பெருகியுள்ளதால் போட்டித்தன்மை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
இருப்பினும், விலைகள் இறங்கவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் வெவ்வேறு வகைகளில் சேவைகளை மாறுபடுத்தி விலையை ஏற்றியுள்ளனர் என்றார் ஜெகதீஸ்வரன்.
கொவிட்-19 காலத்தில் கூடுதல் லாபம் பார்க்க தனது நிறுவனத்தின் கீழ் பல தனிநபர்கள் ஒரே பெயரில் சேவை நடத்தியதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு சேவை வழங்குநர் கூறினார்.
பல நிறுவனங்களின் பெயர் கொண்ட வர்த்தக அட்டைகளை அவர் அச்சு செய்தார். ஆனால் அந்த நிறுவனங்கள் அனைத்துமே ஒரே நிறுவனத்தின் கீழ் தான் செயல்பட்டன.
ஒரே மாதத்தில் $18,000 லாபம் பார்த்ததாக அந்தச் சேவை வழங்குநர் தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும் ஈமச்சடங்கு நடத்துநர்கள் லாபம் பார்க்க சில நேரங்களில் விலையை உயர்த்தினால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
அதிகாரத்துவ அமைப்புகளிலிருந்து வருபவர்கள் சிலர், ஈமச்சடங்கு குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியதோடு, அது நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினர்.
இந்து சபையின் தலைவர் ஜோதிநாதன், 70, இறுதிச் சடங்குகளில் எது தேவையானது, எது தேவையற்றது என்பதை நன்கு அறிந்துகொள்ளும் ஒரு செயல்முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
ஒருவர் காலமான பிறகு உறுமி மேளம் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இறுதிச் சடங்கு நடைபெறும்போது பொதுமக்களுக்கு இடையூறு தராமல் இருக்கும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இந்து சபை இணையத் தளத்தில் இறுதிச் சடங்குகளில் என்னென்ன சடங்குகளும், சம்பிரதாயங்களும் அடங்கியுள்ளன என்பதை ஒட்டிய தகவல்கள் உள்ளதாகப் பகிர்ந்துகொண்ட திரு ஜோதிநாதன், மக்கள் அதைப் படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்து ஆலோசனை மன்றத் தலைவர் க. செங்குட்டுவன் இறுதிச் சடங்குகளைத் தரப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக சொன்னார்.
வர்த்தக ரீதியாக அவர்கள் லாபம் பார்க்க விரும்புவது தவறில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கும் எந்தச் சேவை வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
“ஒவ்வொரு நிறுவனமும் இறுதிச் சடங்குகளை வெவ்வேறு முறைகளில் செய்கின்றனர். இது முறைப்படுத்தப்பட வேண்டும்,” என்று திரு செங்குட்டுவன் குறிப்பிட்டார்.

