சிங்கப்பூரில் நாட்டுப்புறக் கலைகளின் எதிர்காலம்

சிங்கப்பூரில் நாட்டுப்புறக் கலைகளின் எதிர்காலம்

2 mins read
483aba14-e5b1-4a17-a2a0-32c1aa9d49fb
(இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய விஷ்ருதா நந்தகுமார், லசால் கலைக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர் நித்யாசாந்தினி மனோகரா, ஓம்கார் கலைக் கழக நிறுவனரும் இயக்குநருமான எஸ். ஸ்ரீதேவி. - படம்: ‘ஆட்டம்’ அமைப்பு
multi-img1 of 4
Google News Preferred Icon

நாட்டுப்புறக் கலைகளின் தனித்துவத்தை அலசி ஆராய்ந்து, சிங்கப்பூரில் அவற்றின் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடியது ‘ஆட்டம்’ அமைப்பு ஏற்பாடு செய்த அண்மைய கலந்துரையாடல்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆனந்தக் கொண்டாட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு, தமிழ் முரசு நாளிதழ், தேசிய நூலக வாரியத்தோடு இணைந்து ‘நாட்டுப்புறக் கலைகள்: ஒரு பார்வை’ எனும் தலைப்பிலான இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மாலை விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் லசால் கலைக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் நித்யாசாந்தினி மனோகரா, ஓம்கார் கலைக் கழகத்தின் நிறுவனரும் இயக்குநருமான எஸ். ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.

கலைஞர்கள், சமூகத் தலைவர்கள், பல்வேறு துறை வல்லுநர்கள் உட்பட ஏறத்தாழ 20 பேர் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல், நாட்டுப்புறக் கலைகளின் பரிணாம வளர்ச்சி, சிங்கப்பூரில் அவற்றின் முக்கியத்துவம், எதிர்காலத் தலைமுறையினர் அவற்றை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை ஆராய்ந்தது.

“நாட்டுப்புறக் கலைகள் மேடையேற்றப்படும் கலை வடிவங்கள் மட்டுமல்ல, சமூகங்களை ஒன்றிணைத்து அவற்றின் வரலாறுகளைப் பிரதிபலிக்கும் வாழ்வியல் கூறுகள்,” என்று நாட்டுப்புறக் கலைகளின் தனித்துவத்தை எடுத்துரைத்தார் திருவாட்டி ஸ்ரீதேவி.

இன்று வரை உலகின் சில இடங்களில் போதிய அங்கீகாரம் பெறாத பல நாட்டுப்புறக் கலைவடிவங்கள், இன்று சிங்கப்பூரில் தகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருவதாகப் பங்கேற்பாளர்கள் சுட்டினர்.

இந்த வளர்ச்சி நீடிக்க, தொடர் முயற்சிகள் தேவை என்ற கருத்து கலந்துரையாடலின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது.

முறையான பயிற்சியும் கட்டமைப்புடன் கற்பிக்கப்படும் கல்வியும் இன்றியமையாதவை எனத் திருவாட்டி ஸ்ரீதேவி வலியுறுத்தினார்.

“நிதி உதவி, பெற்றோர் ஆதரவு, சமூக ஈடுபாடு, நிறுவன ஆதரவு ஆகியவை இணைந்தால் மட்டுமே நாட்டுப்புறக் கலைகள் நிலைத்துத் தழைக்கும்,” என்றார் அவர்.

ஒரு கலைஞரின் வாழ்நாள் முடிந்தாலும் கலை வடிவம் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் என்றும் திருமதி ஸ்ரீதேவி உறுதியளித்தார்.

சிங்கப்பூரில் தற்போது நாட்டுப்புறக் கலைகளைக் காக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதியுதவிகள் கிடைத்தாலும், அது மட்டும் போதாது என்று முனைவர் சாந்தினி தெரிவித்தார்.

குறிப்பாக இளையர்களும் இந்த நாட்டுப்புறக் கலைகளின் மதிப்பை உணர்ந்து, அவற்றைக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார் அவர்.

இளையர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடலில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இளையர்கள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல், தங்கள் கலாசார அடையாளத்தின் ஓர் அங்கமாக நாட்டுப்புறக் கலைகளை உணர வழி வகை செய்யப்பட வேண்டும் என்பதும் முக்கியக் கருத்தாக வெளிப்படுத்தப்பட்டது.

கல்வி, சமூக ஆதரவு, கலை முனைப்பு ஆகியவை இணையும்போது நாட்டுப்புறக் கலைகள் வாழும் பாரம்பரியமாகத் தொடர்ந்து நிலைக்கும் என்ற கருத்துடன் உரையாடல் நிறைவடைந்தது.

குறிப்புச் சொற்கள்