செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) நிறுவனங்களின் செயல்பாடுகளையும் போட்டித்தன்மையையும் அதிவேகமாக மறுவடிவமைத்து வருகிறது.
இருப்பினும், இந்த மாற்றத்தை முன்னின்று நடத்தவேண்டிய தலைவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அவர்களின் உண்மையான ஆயத்தநிலைக்கும் இடையே கணிசமான இடைவெளி இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
என்டியுசி லேர்னிங்ஹப் வெளியிட்டுள்ள ‘ஏஐ உலகத்தில் தலைமைத்துவம்’ எனும் சிறப்பு அறிக்கையின்படி, சிங்கப்பூரின் மூத்த தலைவர்களில் கிட்டத்தட்ட 46 விழுக்காட்டினர் ஏஐ சார்ந்த நிறுவன ரீதியிலான மாற்றங்களை வழிநடத்தத் தாங்கள் மிகக் குறைந்த தயார்நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இரண்டு விழுக்காட்டினர் தாங்கள் ஆயத்தநிலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். மாறாக, 37 விழுக்காட்டினர் ஓரளவிற்கும் 15 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் நம்புகின்றனர்.
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், நிதி, மேம்பட்ட உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 மூத்த தலைவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தலைவர்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள்
வேகமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை மேம்படுத்துதல், போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமை, ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவை ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் தலைவர்கள் சந்திக்கும் முக்கிய சவால்களாக உள்ளன. இந்தத் தயார்நிலைக் குறைபாடு அவர்களின் முடிவெடுக்கும் திறனையும் பாதித்துள்ளது. ஏஐ தொடர்பான உயர்மட்ட முடிவுகளை எடுப்பதில் 44 விழுக்காட்டுத் தலைவர்கள் போதிய நம்பிக்கையின்றி உள்ளனர்.
மனிதவள மேம்பாடும் புதிய அணுகுமுறையும்
கடந்த ஈராண்டுகளில் 34 விழுக்காட்டுத் தலைவர்கள் தலைமைத்துவத்திற்கான முறையான ஏஐ பயிற்சியைப் பெற்றுள்ளனர். 53 விழுக்காட்டினர் வரும் மாதங்களில் அப்பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
ஏஐ உருமாற்றத்தின்போது தொழில்நுட்பத் திறன்களைத் தாண்டி, ஊழியர்களின் மன உறுதியையும், நல்வாழ்வு அம்சங்களையும் ஆதரிக்கும் மனிதவள நிர்வாகத்திற்கு 37 விழுக்காட்டுத் தலைவர்கள் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். ஆக்கபூர்வமான சிந்தனை, சிக்கல் தீர்க்கும் திறன் போன்றவை மிக முக்கியம் என்று தலைவர்கள் கருதுகின்றனர்.
“எதிர்பார்ப்புக்கும் தயார்நிலைக்கும் இடையே உள்ள இந்த இடைவெளி, தலைமைத்துவத்திற்கு என்ன தேவைப்படுகிறது என்பதில் ஏற்பட்டுள்ள ஓர் அடிப்படை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது”, என்றார் என்டியுசி லேர்னிங்ஹப் தலைமை மனிதவள அதிகாரி ஷான் லிம்.
“தலைவர்கள் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, சரியான வழியைக் காட்ட வேண்டும். மூத்த தலைவர்கள் பலர் இந்த ஏஐ உருமாற்றக் காலத்தில் தங்கள் குழுக்களை வழிநடத்த, தங்களின் சொந்த மேம்பாட்டிற்குத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிவது ஊக்கமளிக்கிறது,”என்று திரு லிம் மேலும் குறிப்பிட்டார்.


