காலங்கள் மாறினாலும் தங்கள் பழைய நினைவுகளையும் நட்பையும் மறக்காத ஜாலான் காயு, ஆர்ஏஎஃப் சிலேத்தார் (RAF Seletar) முன்னாள் இந்தியக் குடியிருப்பாளர்கள், தங்களது வருடாந்தர ஒன்றுகூடலுக்காக மீண்டும் இணைந்தனர்.
அவர்களின் இந்த ஒன்றுகூடல், முதன்முதலில் 2015ல் சிங்கப்பூரின் எஸ்ஜி50 கொண்டாட்டங்களின்போது ‘சிலேத்தார் 150’ என்ற பெயரில் சிறிய அளவில், தொடங்கி தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
ஜாலான் காயு, சிலேத்தார் கம்பத்துப் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பலர் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் பெரும்பாலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த விமானத் தளங்களில் வேலை செய்துவந்தனர்.
தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ சாரங்கபாணி சிலேத்தார் பகுதியில் ‘தமிழர் திருநாள்’ நிகழ்ச்சிகளை நடத்திய வரலாற்றுச் சிறப்பும் இப்பகுதிக்கு உண்டு.
“அந்தக் காலகட்டத்தில் எவ்வித நவீன தொழில்நுட்பங்களும் இல்லாத நிலையிலும், அப்பகுதி மக்களிடையே ஒற்றுமையும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பும் மேலோங்கி இருந்தன,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்தார்.
“திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் என்றால் அவ்வட்டார மக்களே ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இணைந்து ஏற்பாடுகளைச் செய்யும் வழக்கம் அங்கு இருந்தது,” என்றார் அவர்.
அங் மோ கியோ சமூக மன்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 470 பேர் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு நிகழ்ச்சிக்காக 32 மேசைகள் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், ஐந்தே நாள்களில் 37 மேசைகளுக்கான முன்பதிவுகள் முடிந்துவிட்டதாகத் திரு ராஜவர்மன் தெரிவித்தார். இறுதியில் 400 பேர் அமரும் வகையில் 40 மேசைகள் போடப்பட்டதாக அவர் கூறினார்.
அப்படியிருந்தும் இடப் பற்றாக்குறை ஏற்பட, கிட்டத்தட்ட 150 பேர் அரங்கிற்கு வெளியே நாற்காலிகளில் அமர்ந்து, தங்கள் நண்பர்களுடன் பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்தனர்.
தலைமுறைகளை இணைத்த கலைநிகழ்ச்சிகள், இந்தியாவிலிருந்து வந்த கலைஞர்கள், உள்ளூர் நடனக் கலைஞர்கள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதியவர்கள், அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பல தலைமுறையினரும் இணைந்து பாடல்களைப் பாடி, அடுத்த தலைமுறையினருக்கான தொடர்பை உறுதிப்படுத்தினர்.
மக்களின் நினைவுகளை ஆவணப்படுத்தும் நோக்கில், இணையத்தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பையும் முழுச் செலவையும் அந்தச் சமூகத்தினரே மனமுவந்து ஏற்றுக்கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
ஜாலான் காயு தமிழ் தேவாலயம், முன்னர் ஜாலான் காயுவில் இருந்த அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரன் கோயிலின் முந்தைய வடிவம் ஆகியவற்றின் தகவல்கள் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வணிகர் சிவனாண்டி தேவரின் அட்டைப்படம் நிகழ்ச்சி மண்டப வாயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டதைக் கண்டு அகமகிழ்ந்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது மகள் நாகம்மாள் சிவனாண்டி தெரிவித்தார்.
“காலப்போக்கில் பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, மீண்டும் அவர்களை ஒன்றிணைப்பதே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் சிறப்பு,” என்றார் திருவாட்டி நாகம்மாள்.

