தலைமுறை கடந்து சுடரொளிரும் ஒரே குடும்பத்தின் கற்பித்தல் பணி

தலைமுறை கடந்து சுடரொளிரும் ஒரே குடும்பத்தின் கற்பித்தல் பணி

5 mins read
324e0e88-1971-4fa2-872a-7bdce151840b
இளங்கோ குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலைவாணி இளங்கோ, காயத்திரி இளங்கோ, கார்த்திகா இளங்கோவுடன் அவர்களது பெற்றோர் திருமதி அம்மணி அம்மாள் இளங்கோவும் திரு இளங்கோ இராம அப்பாசாமியும். - படம்: கலைவாணி இளங்கோ
multi-img1 of 2

ஒரு குடும்பத்தின் செல்வம் என்பது எப்போதும் பணத்தாலும் சொத்துகளாலும் அளவிடப்படுவதில்லை. சில குடும்பங்களில் அது ஒரு தொழிலாகவும், ஒரு பண்பாகவும், ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்படும் நம்பிக்கையாகவும் அமைகிறது.

இளங்கோ குடும்பத்தைப் பொறுத்தவரை, அந்தப் பிணைப்பின் மையத்தில் இருப்பது கற்பித்தல் பணி.

பெற்றோர் உட்பட குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களுமே ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் வேளையில், அவர்களில் மூவர் தமிழ்மொழிக் கற்பித்தலில் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கல்வி அமைச்சு, தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்குக் கிடைக்கும் முக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

2026ஆம் ஆண்டுக்கான இவ்விருதினை 41 வயது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ பெற்றுள்ளார்.

இவரது குடும்பத்தில் இந்த விருதைப் பெறும் மூன்றாவது நபர் இவர். இவருக்கு முன்னதாக இவரது தாய் திருமதி அம்மணி அம்மாள் இளங்கோவும் தந்தை திரு இளங்கோ இராம அப்பாசாமியும் வெவ்வேறு ஆண்டுகளில் இதே கௌரவத்தைச் சூடியுள்ளனர்.

2003ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற இளங்கோ தம்பதியினருடன் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.
2003ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற இளங்கோ தம்பதியினருடன் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம். - படம்: கலைவாணி இளங்கோ

வீட்டில் துளிர்த்த ஆசிரியர் கனவு

செல்வி கலைவாணியின் தமிழ்ப் பயணமும் ஆசிரியர் கனவும் வீட்டின் கற்றல் சூழலிலிருந்தே தொடங்கின. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போது, தந்தை பணியாற்றிய அதே பள்ளியில் பயின்ற அவர், இடைவேளை நேரங்களில் அவர் பாடம் நடத்துவதை சன்னல் வழியே எட்டிப்பார்த்து ரசித்ததை நினைவுகூர்ந்தார்.

சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் உயரம்கூட இல்லாத சிறிய வயதில், தன் கால்களை உயர்த்தித் தந்தை பாடம் நடத்துவதைக் கவனித்த அந்த ஆரம்பக்கால தருணங்களே தம்முள் ஆசிரியர் கனவை விதைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் செல்வி கலைவாணி ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக இருந்தது. ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியில் பயின்றபோது, அப்போதைய கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திடம் இருந்து இரண்டு முறை பரிசுகளை அவர் பெற்றார்.

அப்போது, “எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?” எனத் திரு தர்மன் மேடையில் கேட்டபோது, சற்றும் தயங்காமல் “ஆசிரியர்” என அவர் பதிலளித்தார். இந்தச் செய்தி தமிழ் முரசு நாளிதழிலும் வெளியானது என்று தெரிவித்தார் செல்வி கலைவாணி.

மகளின் உறுதியான விருப்பத்தைக் கண்ட பெற்றோர், அவரைத் தமிழ் படிக்க ஊக்குவித்தனர். தந்தையைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று தங்கப் பதக்கமும் வென்றார் செல்வி கலைவாணி.

தடைகளைத் தாண்டி உயர்ந்த தாயின் அன்புக் கற்பித்தல்

குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டே தமது 40வது வயதில்தான் ஆசிரியர் பணியில் 66 வயது திருமதி அம்மணி அடியெடுத்து வைத்தார்.

ஆசிரியராவதற்கு முன்பே, கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் தொடக்கப் பள்ளிகளுக்கான ‘பைந்தமிழ்ப் பயிற்சி நூல்’ என்னும் நூலை 1 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்குத் தயாரித்த அனுபவம் அவருக்கு இருந்தது.

இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2003ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

2003ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற திருமதி அம்மணி அம்மாள் இளங்கோ.
2003ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற திருமதி அம்மணி அம்மாள் இளங்கோ. - படம்: கலைவாணி இளங்கோ

பணி ஓய்வுபெற்ற பின்னரும், அவர் மறு வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தொடர்ந்து கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்.

கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்கள்மீது அதிகக் கவனம் செலுத்திய அவர், “மாணவர்களின் தமிழ்ப் பயத்தைப் போக்கி, அவர்களை வெற்றியை நோக்கி முன்னேறச் செய்வதே எனது தலையாயப் பணியாக நான் கருதுகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

செல்வி கலைவாணி முதன்முதலில் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, தன்னிடம் உள்ள நாடகம், விவாதம் போன்ற திறமைகளைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும் எனவும், மாணவர்கள் படிப்பைச் சுமையாக எண்ணாது சுகமாக எண்ணுமாறு கற்பிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.

தந்தையின் ஐம்பதாண்டு காலச் சலியாத தமிழ்ப்பணி

கல்வித் துறையில் கடந்த 50 ஆண்டுகளாகச் சலியாது பணியாற்றி வருகிறார் 67 வயது திரு இளங்கோ. பணி ஓய்வுபெற்ற பின்னரும் மறு வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தற்போது அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இளங்கலைப் படிப்பிலும் ஆசிரியர் பயிற்சியிலும் தங்கப் பதக்கங்களை வென்ற இவர், பெண்டமியர் தொடக்கப்பள்ளியில் 20 ஆண்டுகளும் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 17 ஆண்டுகளும் கற்பித்துள்ளார்.

2003, 2011 ஆகிய இரு ஆண்டுகளில் நல்லாசிரியர் விருதை வென்றுள்ள இவர், 1977ஆம் ஆண்டிலிருந்தே மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களைத் தாமே தயாரித்து வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.

2011ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற திரு இளங்கோ இராம அப்பாசாமியுடன் (இடமிருந்து மூன்றாவது) அப்போதைய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னமும் திரு எஸ். சந்திர தாசும்.
2011ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற திரு இளங்கோ இராம அப்பாசாமியுடன் (இடமிருந்து மூன்றாவது) அப்போதைய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னமும் திரு எஸ். சந்திர தாசும். - படம்: கலைவாணி இளங்கோ

தமிழ்மொழியின் இலக்கணக் கூறுகளை எளிமையாகப் புரியவைக்க சுவாரசியமான உத்திகளை அவர் கையாள்கிறார். பாடங்களைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், வசதியற்ற மாணவர்களுக்கு உணவுக்கான பணம், புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதிலும் அக்கறை காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குத் தனியாகக் கற்பித்துத் தமிழில் பி3 தேர்ச்சி பெற வைத்ததும், வழக்கநிலை மாணவர் ஒருவரை உயர்தமிழ் எடுக்க ஊக்கமளித்துப் பள்ளி முடிந்த பிறகும் இணையம் வழியே கற்பித்துச் சிறப்புத் தேர்ச்சி பெற வைத்ததும் தம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

மரபும் தொழில்நுட்பமும் இணையும் தற்காலக் கற்பித்தல்

கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் செல்வி கலைவாணி, தற்கால மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்பத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தமிழைப் புத்தாக்க முறையில் கற்பிக்கிறார்.

2026ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற செல்வி கலைவாணி இளங்கோ.
2026ல் ‘நல்லாசிரியர் விருது’ பெற்ற செல்வி கலைவாணி இளங்கோ. - படம்: பே. கார்த்திகேயன்

மாணவர்களுக்குக் கற்பிக்க, இணையத்தளத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், வலையொளி உள்ளிட்ட நவீன உத்திகளைப் பயன்படுத்துகிறார். மாணவர்கள் சுயமாக வாய்மொழிப் பயிற்சி பெற ‘சாட்பாட்’ (chatbot) ஒன்றையும் அவர் வடிவமைத்துள்ளார்.

வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்திறனை அடையாளம் கண்டு மேம்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் நம்புகிறார்.

இலக்கியத்தின்வழி மாணவர்களிடையே நற்பண்புகளையும் அவர் வளர்க்கிறார். உதாரணமாக, பாடத்திட்டத்தில் இடம்பெறும் சிறுகதைகளை முன்வைத்து நடத்தப்பட்ட விவாதம், சமூக உணர்வையும் கூட்டுமுயற்சியையும் மாணவர்களுக்கு உணர்த்தியது.

“நீ மக்களை நேசித்தால், மக்களும் உன்னை நேசிப்பார்கள்,” என்ற பெற்றோரின் வாழ்க்கைப்பாடமே செல்வி கலைவாணியின் கற்பித்தல் தத்துவத்தின் அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

தாங்கள் பெற்ற அதே விருதைத் தங்கள் மகளும் பெற்றிருப்பது தங்களுக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக திரு இளங்கோவும் திருமதி அம்மணியும் கூறினர்.

“நாங்கள் விருது பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட, எங்கள் மகள் அதே விருதைப் பெற்றிருப்பதைக் கண்டு பல மடங்கு மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

மொழியால் இணைந்த குடும்பம்

ஆசிரியர் பணி என்பது இக்குடும்பத்தில் மூன்று தமிழாசிரியர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. குடும்பத்தைச் சேர்ந்த ஐவருமே கல்வித் துறையில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

செல்வி கலைவாணியின் தங்கைகளான காயத்திரி இளங்கோ, 39, ஆங்கில ஆசிரியராகவும், கார்த்திகா இளங்கோ, 32, சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இளங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருமே கல்வித் துறையில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
இளங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருமே கல்வித் துறையில் தங்களை அர்ப்பணித்துள்ளனர். - படம்: கலைவாணி இளங்கோ

தேசியக் கலை மன்றம் நடத்திய தமிழில் கதை எழுதும் போட்டியில் கலந்துகொண்டு செல்வி காயத்திரி முதல் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வீட்டில் மூன்று தமிழாசிரியர்கள் இருப்பதால், இவர்களின் தினசரி உரையாடல்கள் எப்போதும் தமிழைக் கற்பிப்பது குறித்தே அமைகின்றன.

இவர்கள், தொடர்ந்து தமிழ் முரசு நாளிதழை வாசித்து, அதிலுள்ள செய்திகளைப் பற்றி விவாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வகுப்பறையில் தாங்கள் பெற்ற வெற்றிகள், கற்பித்தலில் எதிர்கொள்ளும் சவால்களைக் களைவதற்கான உத்திகள், இலக்கணச் சந்தேகங்கள் ஆகியவற்றை இணைந்து கலந்துரையாடுவதும் இக்குடும்பத்திற்கு வழக்கம்.

தவறுகளைக் காணும்போது ‘ஏன்’ என்று ஆராயும் தேடல்தான் கற்றலுக்குத் துணைநிற்கும் என்ற ஆழமான நம்பிக்கையோடு, தலைமுறை கடந்து தமிழ்மொழியின் சுடரை ஏந்திச் செல்கின்றனர் இளங்கோ குடும்பத்தினர்.

குறிப்புச் சொற்கள்