தேசியக் கொடியின் கம்பீரமும் மக்களின் ஒற்றுமையும் ஒன்றிணையும்போது எந்தவொரு சாதனையும் சாத்தியமே என்பதை வாம்போ குடியிருப்பாளர்கள் மீண்டும் ஒருமுறை நிருபித்துக் காட்டியுள்ளனர்.
சிங்கப்பூரின் 61வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் லோரோங் லீமாவ் குடியிருப்பாளர் வலையமைப்பும் ராஜா கோர்ட் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) வாம்போ சமூக மன்றத்தில் ‘நாம் ஒன்றிணைந்து மிளிர்வோம்’ என்ற கருப்பொருளில் விழா நடைபெற்றது.
விழாவின் முத்தாய்ப்பாக, 1,500 சிவப்பு, வெள்ளி வண்ண ஜிகினா வட்டுகளைக் கொண்டு 1.6 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஐந்து மாதகால கடின உழைப்பில் உருவான இக்கலைப் படைப்பை உள்ளூர் எழுத்தாளரும் விழா ஒருங்கிணைப்பாளருமான மில்லத் அகமது வடிவமைத்திருந்தார். இதற்கு முழு ஆதரவளித்த வாம்போ குடியிருப்பாளர்களுக்கும் சன்லவ் அமைப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வாம்போ குடிமக்கள் ஆலோசனைக் குழுத் தலைவர் சுவா சோங் கெங், குடியிருப்பாளர்களின் சாதனையைப் பாராட்டினார்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழும் வகையில் பலவித விளையாட்டுக் கூடங்கள், சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலான கலை நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் பற்றிய வினாடி-வினா போட்டிகள் என அரங்கம் களைகட்டியது.
கண்கவர் ஆடைகளை அணிந்து வந்தவர்களுக்கும் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்றவர்களுக்கும் ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டு தேசியப் பாடல்களை இணைந்து பாடியது மனத்திற்கு நிறைவாக இருந்ததாகத் திருவாட்டி குளோரினா தெரிவித்தார்.
‘எங்கள் சிங்கப்பூர்’ பாடலுக்கு மாணவர்களின் நடன அங்கம் பார்வையாளர்களைக் கவர்ந்தது என்றும் இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும் திரு நூருல் அமீன் பகிர்ந்துகொண்டார்.
திருவாட்டி ஏரியல் மெய் ஹூய், திருவாட்டி லியோபார்ட் வோங் தொகுத்து வழங்கிய இவ்விழா, சிங்கப்பூர் மக்களின் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் வண்ணமயமாக நிறைவுற்றது.


