தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பிழையறக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் மகுடேசுவரனுக்குச் சிங்கப்பூரில் பொன்விழா நடைபெறவிருக்கிறது.
இவரது அயராத தமிழ்த் தொண்டைப் போற்றிப் பாராட்டும் வகையில், கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பினர் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் இருக்கும் ‘தி பாட்’ அரங்கில் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
கவிதை, கட்டுரை, இலக்கணம், திரைத்துறை சார்ந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைக் கவிஞர் மகுடேசுவரன் எழுதியிருக்கிறார்; பள்ளி, கல்லூரி ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்ப் பயிலரங்குகளையும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் அவ்வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
‘தமிழ் அறிவோம்’ எனும் தலைப்பின்கீழ் இதுவரை இவரது 15 நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்கள் குறித்து அவருடைய மாணவர்கள் சிலர் மதிப்புரை வழங்கவுள்ளனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் மகுடேசுவரன் சிறப்புரையாற்றுவார்.
அனுமதி இலவசம். இரவுணவு உண்டு.

