புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு: இறையன்பில் திளைக்கும் கிறிஸ்தவர்கள்

புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு: இறையன்பில் திளைக்கும் கிறிஸ்தவர்கள்

2 mins read
362902f7-8c3c-409b-9152-e2573e060272
தென்கிழக்காசிய ஆங்லிக்கன் திருச்சபையின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்ற டாக்டர் டைட்டஸ் சுங், செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் மற்ற போதகர்களுடன் இணைந்து பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

இயேசு கிறிஸ்து மரித்ததை நினைவுகூரும் புனித வெள்ளிக்கு முன்தினமான பெரிய வியாழக்கிழமையையொட்டி (மாண்டி வியாழன்) சிங்கப்பூரின் பல்வேறு தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகக் கிறிஸ்தவர்கள் போற்றும் ஈஸ்டர் ஞாயிறுக்காகத் தேவாலயங்கள் மும்முரமாகத் தயாராகி வருகின்றன.

அங் மோ கியோ தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, வரும் ஈஸ்டர் ஞாயிறுவரை ஒவ்வொருநாளும் இரவு நேரங்களில் ஆராதனைகள் இருக்கும் என்று இணைப்போதகர் அருட்திரு ஆர். பிரபு கூறினார்.

“புனித வெள்ளியன்று காலையில் எங்கள் திருச்சபையில் இரண்டு மணிநேர ஆராதனை இருக்கும். சிலுவையின் தியாகம் குறித்து மட்டும் பேசுவோம். சிலுவையில் ஆண்டவர் சொன்ன வார்த்தைகள், இயேசுபிரானின் தியாகம், அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகள் என்னென்ன என்பதைச் சொல்லி விளக்குவோம்,” என்று அவர் கூறினார்.

சிறப்புமிக்க இந்நாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடுகளையும் நோன்பு உள்ளிட்ட நெறிமுறைகளையும் தங்களது விருப்பத்தின் பேரில் கடைப்பிடிப்பார்கள் என்று ஈசூன் ஆங்லிக்கன் தேவாலயத்தின் தமிழ்ப் போதகர் அருட்திரு இஸ்ரவேல் செல்வம் தெரிவித்தார்.

தவக்காலம் எனப்படும் பிரார்த்தனைக்கான காலகட்டம், சாம்பல் புதன்கிழமையிலிருந்து வழக்கமாகத் தொடங்கும்.

“பிப்ரவரி 18இல் இடம்பெற்ற சாம்பல் புதனிலிருந்து ஈஸ்டர் தினம்வரை, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து மொத்தம் 40 நாள்கள் வரும். வழக்கமாகக் கிறிஸ்தவர்கள் இந்த நேரத்தில் அதிக நேரம் பிரார்த்தனையிலும் வேதாகமம் வாசிப்பதிலும் செலவிடுவார்கள்,” என்று அவர் கூறினார்.

பெரிய வியாழனன்று, இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவி ஒருவருக்கொருவர் எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகத் திகழ்ந்து, தியாக மனப்பான்மையை வெளிப்படுத்தியதைத் திருச்சபை நினைவுகூருவதாகச் சிட்டி மிஷன்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த போதகர் அருட்திரு ஜான் பிரிட்டோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையில் அண்டைவீட்டாரை அழைத்து அன்பளிப்புப் பைகளை வழங்கி, சமூக நல்லுறவை மேம்படுத்தும் சிறப்பு வழிபாடு தமது தேவாலய உறுப்பினர்களிடையே நடைபெறுவதாக அவர் கூறினார்.

இந்தக் காலத்தில் இடம்பெறும் அத்தனை திருநாள்களிலுமே அன்பர்கள் இறைச் சிந்தனையுடன் இருந்து இயேசுவின் போதனைகளைத் தங்கள் மனத்தில் நிலைநிறுத்த முற்படுவர் என மூன்று போதகர்களும் கூறுகின்றனர்.

சிலுவை குறித்த சிந்தனைகள் மனிதர்களின் மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது என்றார் அருட்திரு பிரபு.

“இயேசு கிறிஸ்து, சேவை மனப்பான்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். இயேசுவைப் பின்பற்றி உலகத்தவர் ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேறவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்