சிலுவைப் பாதை சித்திரிப்புகளுடன் நடந்த பெரிய வெள்ளி வழிபாடு

சிலுவைப் பாதை சித்திரிப்புகளுடன் நடந்த பெரிய வெள்ளி வழிபாடு

3 mins read
08366cfe-7a3a-4316-aebd-803123062086
லூர்து மாதா தேவாலயத்தில் நடைபெற்ற ‘சிலுவைப் பாதை’ சித்திரிப்புக் காட்சி. - படம்: ஆரோக்கியசாமி தாமஸ்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்படும் காட்சிகளின் சித்திரிப்புடன் ஓஃபிர் ரோட்டில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி, அல்லது பெரிய வெள்ளி என்றழைக்கப்படுகிறது. அதனையொட்டி தீவெங்கிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றன.

ஏப்ரல் 3ஆம் தேதியன்று மாலை 5.30 மணியளவில் லூர்து மாதா தேவாலயத்தில் தமிழில் நடைபெற்ற வழிபாட்டில் ஏறத்தாழ 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

12வது ஸ்தலமாக சிலுவையில் அறையப்படும் காட்சி.
12வது ஸ்தலமாக சிலுவையில் அறையப்படும் காட்சி. - படம்: ஆரோக்கியசாமி தாமஸ்

அங்கு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் இந்த வழிபாடு 14 நிலைகள் அல்லது ‘ஸ்தலங்களைக்’ கொண்ட ‘சிலுவைப் பாதை’ (‘ஸ்டே‌‌ஷன் ஆஃப் தி க்ராஸ்) என்றழைக்கப்படும் வழிபாடு நடைபெற்றது.

இதில், இயேசு பங்கேற்ற சமபந்தி சித்திரிப்புகளைத் தொடர்ந்து, ‘12வது ஸ்தலமாக’ சிலுவையில் அறையப்படுவது காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 13, 14ஆம் ஸ்தலங்களில் சிலுவையிலிருந்து இயேசு இறக்கப்பட்டு மாதாவின் மடியில் வைக்கப்படுவது, மாதாவின் புலம்பல்கள், அவர் அடக்கம் செய்யப்படுவது ஆகிய காட்சிகளும் அறங்கேறின.

இயேசுநாதரை மடியில் கிடத்தி மாதா புலம்பும் காட்சி.
இயேசுநாதரை மடியில் கிடத்தி மாதா புலம்பும் காட்சி. - படம்: ஆரோக்கியசாமி தாமஸ்.

கத்தோலிக்க முறையைப் பின்பற்றும் இந்தத் தேவாலயத்தில், பெரிய வெள்ளி உத்தி செய்யும் சடங்கு எனும் வழிபாட்டினைத் திருத்தந்தை லியோ ஜஸ்டின் வழிநடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ‘மறை உரையில்’ இயேசுவின் வாழ்க்கை வரலாற்றினையும், அவை சொல்லும் முக்கியச் செய்திகளையும் தமிழில் விளக்கினார்.

லூர்து மாதா தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டைத் தமிழில் வழிநடத்தும் திருத்தந்தை லியோ ஜஸ்டின் (இடது).
லூர்து மாதா தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டைத் தமிழில் வழிநடத்தும் திருத்தந்தை லியோ ஜஸ்டின் (இடது). - படம்: ஆரோக்கியசாமி தாமஸ்

“எல்லா முக்கிய நாள்களையும் போலவே, மக்கள் இடையூறுகளின்றி வந்துசெல்ல ஏதுவாக ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டோம். மக்கள் பல்வேறு சிரமங்கள், மனக்க‌ஷ்டங்களுடன் பிரார்த்தனைக்கு வருகின்றனர். அவர்களுக்குக் கூடுதல் சிரமங்களைக் கொடுக்காமல் மனநிறைவுடன் திரும்பச் செய்யும் பணியில் ஈடுபடுவது அளவற்ற மகிழ்ச்சி,” என்றார் லூர்து மாதா ஆலயத் தொண்டூழியர் ஆரோக்கியசாமி தாமஸ்.

பங்கேற்கும் அனைவருக்கும் அமரும் வசதி, குடிநீர் வசதி என அனைத்தையும் கவனத்துடன் திட்டமிட்டுச் செய்ததாக சொன்னார் திரு தாமஸ்.

இந்த வழிபாடுகளுக்காக, ஆலயத்தின் வெளியிலும், உள்ளேயும் இரு இசைக்குழுக்கள் பாடல்களைப் பாடினர். பாடகர் குழு ஒருங்கிணைப்பாளரான மைக்கேல் சின்னப்பன், 48, “எனது குழுவில் 25 பேர் பாடினர். இதற்காக சிறப்பான புதிய தமிழ்ப் பாடல்களைப் பயிற்சி செய்தோம். குறைந்தது பத்து முறை குழுவாக பயிற்சி மேற்கொண்டோம். பிரார்த்தனைக்கு வந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பாடியது மனநிறைவு,” என்றார்.

தீவெங்கிலும் வழிபாடுகள்

தீவெங்கிலும் உள்ள பிற தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் விமரிசையாக நடந்தேறின.

இம்மானுவெல் பெந்தேகொஸ்தே தேவாலயத்தில் காலை நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழிபாடுகள் நடந்தன.

“கடந்த ஆண்டு திருமணமாகி, என் மனைவியுடன் நான் கொண்டாடும் முதல் புனித வெள்ளி இது. காலையிலேயே திருச்சபைக்குச் சென்று வந்தோம். இன்று உடன்பிறப்புகள், குடும்பம் சூழ பெற்றோர் வீட்டில் ஒன்றுகூடி சைவ விருந்துண்டு பொழுதைக் கழித்தோம்,” என்றார் ஷ்யாமன், 37.

“நம்மை இரட்சிக்க இறைவன் பூமிக்கு அவதரித்ததை நினைவுகூர இது நல்ல தருணம். இறைவனின் அன்பையும் கருணையையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு,” என்றார் சரோஜா ஹரிணி, 58.

“கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்வதுடன், வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளுக்கு நன்றிகூறும் வகையில் இன்றைய ஒன்றுகூடல் அமைகிறது,” என்றார் 60 வயது தனபாக்கியம்.

வெறும் சமயச் சடங்கு அல்ல

டோர்செட் ரோட்டில் அமைந்திருக்கும் கிறிஸ்து சேகர திருச்சபையின் புனித வெள்ளி ஆராதனை மதியம் 12 மணியளவில் தொடங்கி மூன்று மணி நேர ஆராதனையாக நடைபெற்றது.
டோர்செட் ரோட்டில் அமைந்திருக்கும் கிறிஸ்து சேகர திருச்சபையின் புனித வெள்ளி ஆராதனை மதியம் 12 மணியளவில் தொடங்கி மூன்று மணி நேர ஆராதனையாக நடைபெற்றது. - படம்: கிறிஸ்து சேகர சபை
புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்து மரித்ததை நினைவுகூரும் சிலுவை சரிதையைத் தமிழில் வழங்கிய ஆலய இசைக் குழுவினர்.
புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்து மரித்ததை நினைவுகூரும் சிலுவை சரிதையைத் தமிழில் வழங்கிய ஆலய இசைக் குழுவினர். - படம்: கிறிஸ்து சேகர சபை

கிறிஸ்து சேகரத் திருச்சபையில் நடைபெற்ற புனித வெள்ளி ஆராதனை மதியம் 12 மணிக்குத் தொடங்கியது.

புனித வெள்ளி தவக்காலத்தை, உலகக் காரியங்களைத் தவிர்த்து, இறைவனுடனான உறவையும், அவர் படைத்த மனிதர்களுடனான பிணைப்பையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பார்ப்பதாகக் கூறினார் ஜான் காட்வின் மோசஸ், 60.

‘‘40 நாள் நீடிக்கும் இக்காலத்தில் சைவ உணவை மட்டுமே அருந்துகிறோம். அதே வேளையில் அசைவ உணவிற்காக செலவிடப்படும் தொகையை தேவையில் உள்ளோருக்கு கொடுத்துவிடுவோம்.

“இதனைப் பாரம்பரியச் சடங்காகக் கருதாமல் அன்பு, இரக்கம் உள்ளிட்ட நற்பண்புகளால் அலங்கரிப்போம். இதுவே அர்த்தமிகு புனித வெள்ளி வழிபாடு என்று நான் கருதுகிறேன்,’’ என்றார் திரு ஜான்.

கிறிஸ்து சேகர திருச்சபையில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்து சேகர திருச்சபையில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். - படம்: கிறிஸ்து சேகர சபை

பரபரப்பான உலகச் சூழலில் சற்று நேரம் நிதானித்து மனிதத்தை பற்றி நினைத்து பார்க்க இந்தக் காலம் உதவுகிறது. மனம் திருந்தவும், வருந்தவும் இதைப் பயன்படுத்திகொள்வோம், என்றார் கோபால், 41.

வெளிநாட்டு ஊழியரான இவர் மன அமைதிக்காக சக நண்பர்களுடன் இந்த தமிழ் தேவாலயத்திற்கு வந்ததாக சொன்னார்.

‘‘குறிப்பாக தமிழில் பாடும் சிலுவை சரிதை, இறைவன் செய்த தியாகம், எல்லாம் கேட்கையில் நிச்சயம் மனத்த்தில் கருணை பெருக்கெடுக்கும்.’’ என்றார் அவர்.

புனித வாரத்தின் நிறைவாக கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்